Antony Ajay R
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற நடைபயணத்தை இன்று தொடங்குகிறார்.
காஷ்மிர் முதல் கன்னியாக்குமரி வரை இந்த நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த யாத்திரை 150 நாள்களில் 3,500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த நடைப்பயணத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து ராகுல் காந்தியிடம் கொடியை வழங்கி தொடங்கிவைக்கிறார்.
"தவறான சனாதான நம்பிக்கையை தகர்க்கவே ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை துவக்கியிருக்கிறார். எனவே ராகுல் மேற்கொண்டிருக்கும் இந்த நடைபயணம் என்பது புரட்சிகரமான, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.
இது அரசியல் யாத்திரை அல்ல. நாட்டை ஒற்றுமையாக்கும் யாத்திரை. எப்படி இருந்த இந்தியாவை இப்படி ஆக்கிவிட்டார்களே என்று மக்களிடம் சுட்டிக்காட்டும் யாத்திரை" என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் ஸ்ரீநிவாசன் பிபிசி செய்தி தளத்தில் கூறியுள்ளார்..
கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.
பாரத் ஜோடோ யாத்ரா மொத்தம் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களைக் கடந்து செல்லும்படியாக திட்டமிடப்பட்டிருக்கிறது.
ராகுலுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் ஒவ்வொரு நாளும் ஆறு முதல் ஏழு மணி நேரம் நடந்து செல்வதாகவும், அனைத்து மாநிலத் தலைவர்களும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் அந்தந்த மாநிலங்களில் 'பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.