Home children
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் கலவையான விமர்சங்களைப் பெற்றுவருகிறது. எனினும் அஜித் ரசிகர்கள் திரைப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். அக்கொண்டாட்டத்தின் பகுதியாக தாங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது என எண்ணிய அஜித் ரசிகர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள ஜாலி ஹோமில் ஏறத்தாழ 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்காக சிறப்பு காட்சியை அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர்.
புதுச்சேரியில் அஜீத் நடித்த வலிமை திரைப்படம் 15 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 நரிக்குறவர் இன குழந்தைகளுக்கு நகரிலுள்ள ஷண்முகா திரையரங்கில், GOD'S CHILDREN" என்ற பெயரில் சிறப்பு காட்சிக்கு புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் திரையரங்கத்துக்கு ஆர்வமுடன் குழந்தைகள் வந்து காலை காட்சியை பார்த்தனர்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த அஜித் ரசிகரான மோகன், "வலிமை பட அறிமுக நிகழ்வை ஜாலி ஹோமில் தங்கிபடித்த குழந்தைகளுக்கு முன்பாக நடத்தினோம். அப்போது அக்குழந்தைகள் திரையரங்கு சென்று படம் பார்க்க ஆசைப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தர்ஷா என்ற அஜித் ரசிகர் இதற்கான முழு செலவையும் ஏற்பதாக தெரிவித்தார்.
திரையரங்கிலும் பேசினோம். மொத்தம் 18,000 ரூபாய் செலவானது. அக்குழந்தைகளை படம் பார்க்க அழைத்து வந்து அவர்களின் சந்தோஷத்தில் பங்கேற்றோம்" என்று குறிப்பிட்டனர்.
திரைப்படத்தை முழுமையாக ரசித்து பார்த்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அஜித்தின் பைக் சாகச காட்சியை கைத்தட்டி ரசித்து பார்த்ததாக கூறினார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கிற்கு குழந்தைகள் வந்துள்ளனர். இதில் பலர் இப்போது தான் திரையரங்கையே பார்ப்பதாக கூறி கண் கலங்கினார்கள்.