கங்கா ராம்: இந்த இந்திய வள்ளலை பாகிஸ்தான் கொண்டாடுவது ஏன்?

அப்படி அவர் என்ன செய்தார் ஏன் இரு நாட்டு மக்களும் அவரை கொண்டாடுகிறார்கள் வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
கங்கா ராம்
கங்கா ராம்twitter
Published on

இந்தியாவில் பிறந்த ஒருவர் இந்தியாவில் கொண்டாடப்படுவதும், பாகிஸ்தானில் பிறந்த ஒருவர் அந்நாட்டு மக்களால் கொண்டாடப்படுவதும் இயல்பான விஷயம்தான்.

ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒன்றாக இருந்த காலத்தில் பிறந்த ஒருவர் அவர் செய்த நல்ல காரியங்களுக்காக, சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளுக்காக ஏதேனும் ஒரு நாட்டில் பாராட்டப்படலாம். ஆனால் இன்றுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இருநாட்டிலும் பாராட்டப்படுவார் யாரேனும் இருக்கிறார்களா? என இணையத்தில் தேடினால் சர் கங்காராம் அவர்களின் பெயர் வருகிறது.

அப்படி அவர் என்ன செய்தார் ஏன் இரு நாட்டு மக்களும் அவரை கொண்டாடுகிறார்கள் வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

1851ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரத்திலிருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மங்தன்வாலா (Mangtanwala) என்கிற கிராமத்தில் பிறந்த கங்காராம் அகர்வால் நல்ல படிப்பாளி. அவரது தந்தை தெளத் ராம் உத்தரப்பிரதேச மாகாணத்தை விட்டு ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் குடியேறி காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

படிப்பு, பட்டம்:

அம்ரித்சர் நகரத்தில் அரசு நடத்திய பள்ளியில் தான் தன் பள்ளி படிப்பை நிறைவு செய்தார் கங்காராம். 19ஆம் நூற்றாண்டிலேயே கல்லூரிக்கு சென்று படித்த வெகு சில இந்தியர்களில் அவரும் ஒருவர். தன் இளங்கலை பட்டப்படிப்பில் நாகூர் அரசுக் கல்லூரியில் மிகச் சிறப்பாக படித்து முடித்து, பட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகையோடு தாம்சன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அந்த தாம்சன் பொறியியல் கல்லூரி தான் இன்று ஐஐடி ரூர்கி என்று அழைக்கப்படுகிறது.

பொறியியல் கல்லூரியில் நல்ல மதிப்பெண்களோடு படித்து முடித்த உடனேயே ராஜ் பகதூர் கண்ணையாலால் என்கிற பொறியாளரின் அலுவலகத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார்.

மெல்ல லாகூர் நகரத்தில் அறியப்படும் பிரபல கட்டுமான மற்றும் சிவில் இன்ஜினியராக உருவெடுத்தார். கிட்டத்தட்ட லாகூர் நகரத்தின் பிரம்மா போல பல முக்கிய கட்டிடங்களை இவர் காலத்தில் கட்டி எழுப்பினார்.

Lahore
LahoreSOYHAN ERIM

நவீன லாகூரின் தந்தை:

லாகூர் நகரத்தின் பொது அஞ்சலக அலுவலகம், லாகூர் அருங்காட்சியகம், எட்சிசன் கல்லூரி (Aitchison College) கங்காராம் மருத்துவமனை என இவரே வடிவமைத்து கட்டிய கட்டிடங்கள் இப்போதும் பல அவர் திறமையின் சாட்சியங்களாக இருக்கின்றன.

பஞ்சாப் மாகாணத்தில் நிலவும் மிகக் கடுமையான குளிர் மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்து கட்டுமானங்களை பாதுகாக்க கங்காராம் ஆர்ச் வளைவுகள் மற்றும் சில இந்திய கட்டுமான பாரம்பரிய முறைகளை பயன்படுத்தினார். அதே நேரத்தில் மேற்கத்திய கட்டுமான கருவிகளையும் பயன்படுத்தினார்.

பிரபல பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் காலித் அஹமத், கங்காராம் அவர்களை நவீன லாகூரின் தந்தை என்று அழைக்கிறார்.

இன்று பாகிஸ்தான் ஆட்சி செய்யும் பஞ்சாப் பகுதியில் சாஹிவால் மாவட்டத்தில் தரிசாக விவசாயத்திற்கு பயன்படாமல் இருந்த சுமார் 50,000 ஏக்கர் நிலப்பரப்பை புன்னகை பூக்கும் பச்சை பசேல் வயல்களாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு என்கிறது இவரது விக்கீபீடியா பக்கம்.

அந்த காலத்திலேயே பல்வேறு ஆங்கிலேய அரசுப் பணிகள் இவருக்கு வழங்கப்பட்டன. பல அரசு பொறுப்புகளை செவ்வனே செய்து முடித்ததால் ஆங்கிலேயர்கள் கங்காராமுக்கு சர் பட்டம் கொடுத்து அழகு பார்த்தார்கள் என்றால் இவரது திறமையை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

1903 ஆம் ஆண்டு அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற கங்காரம் அவர்களுக்கு இன்று லைலாபூர் மற்றும் ஃபேஸ்லாபத் என்று அழைக்கப்படும் இடங்களில் நிலம் ஒதுக்கப்பட்டது.

அப்பகுதியில் கங்காபுர் என்கிற பெயரில் புதிய நீர் பாசன முறைகள் மற்றும் விவசாய முறைகளை கையாண்டு ஒரு புதிய மாதிரி கிராமத்தை உருவாக்க விரும்பினார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரணலாகுர்ட் (Renala Khurd) பகுதியில் ஒரு புனல் மின்சார உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த விரும்பினார். 1925 ஆம் ஆண்டு ஐந்து டர்பைன்களோடு தொடங்கப்பட்ட அத்திட்டம் சுமார் 360 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு நீர் பாய்ச்ச உதவியது. விளைவு தரிசனங்கள் அத்தனையும் பசுமை போர்வை போர்த்திக் கொண்டன.

கங்கா ராம்
UAE : யார் இந்த Sheikh Khalifa bin Zayed Al Nahyan - இவர் அரபு அமீரகத்துக்கு செய்தது என்ன?

விதவைப் பெண்களுக்கான உரிமைகள்:

பிறப்பால் கங்காராம் அகர்வால் ஒரு இந்துவாக இருந்தாலும் விதவைகளுக்கான உரிமைகள் விஷயத்தில் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவே இருந்தார்.

1917 ஆம் ஆண்டு அம்பாலா நகரத்தில் நடைபெற்ற இந்து மத மாநாட்டில் விதவைகள் மறுமணத்திற்கென்று ஒரு தனி சட்டத்தை கொண்டு வர முயன்றார், ஆனால் அம்முயற்சியில் தோற்றுப் போனார். இருப்பினும் தான் கொண்ட கொள்கையில் மனம் தளராத கங்காராம் விடோஸ் மேரேஜ் அசோசியேஷன் (Widows Marriage Association) என்கிற பெயரில் ஒரு தனி சங்கத்தை அமைத்து அதற்கு தன்னுடைய சொந்த பணத்திலிருந்து சுமார் 2000 ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்துத்துவ அமைப்பில் ஊறிப் போயிருந்த பல பெண்கள் விதவையான பிறகு மறு திருமணம் செய்து கொள்ள ஊக்குவிக்கப்பட்ட போதும் அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

கணவனை இழந்த விதவைப் பெண்கள் திருமணம் செய்து கொள்வது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் அவர்கள் தங்களுடைய சொந்த காலில் நிற்க ஒரு திட்டத்தை வகுத்தார்.

அரசின் அனுமதியோடு இந்து விதவை பெண்களுக்கான இல்லம் ஒன்றை 1921 ஆம் ஆண்டு சுமார் 2.5 லட்சம் ரூபாய் செலவில் கட்டினார். அந்த இல்லத்தில் விதவைப் பெண்கள் சுயமாக உழைத்து சம்பாதிக்க சில கலைகள் மற்றும் தொழில்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.

லேடி மேநார்ட் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் என்று அழைக்கப்படும் தொழில் பள்ளியில் இந்து மற்றும் சீக்கிய மதம் சார்ந்த பெண்கள் படித்து வந்தனர். அந்நிறுவனத்துக்கும் கங்காராம் பணரீதியாக உதவினார்.

கங்காராம் டிரஸ்ட்

சர் கங்காராம் டிரஸ்ட் 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே ஆண்டு லாகூர் நகரத்தின் மையப்பகுதியில் சர் கங்காராம் ஃப்ரீ ஹாஸ்பிடல் என்கிற பெயரில் மருத்துவமனை மற்றும் மருந்தகம் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் இதே மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை கருவிகள் முதல் மருத்துவ சாதனங்கள் வரை அனைத்தும் கொண்டுவரப்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் இன்றுவரை கங்காராம் மருத்துவமனை தான் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமனை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

1927 ஆம் ஆண்டு கங்காராம் அவர்கள் காலமானபோது பாகிஸ்தானின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சதத் ஹசன் மண்டோ கங்காராமும் அவரது பணிகளும் லாகூரோடு எத்தனை நெருக்கமாக இருக்கிறது என தி கார்லண்ட் என்கிற கதையில் விவரித்திருந்தார்.

கங்கா ராம்
செளதி மன்னர் தெரியும், உலகை ஆளும், ஆண்ட இந்த 9 அரசர்கள் குறித்து தெரியுமா?

கதையில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஒரு கூட்டம் லாகூரில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு முன் நிறுவி இருந்த கங்காராம் அவர்களின் சிலையை சேதப்படுத்தியது. அக்கூட்டத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டபோது கங்காராம் மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு அக்கூட்டத்தில் முழங்கியதாக அக்கதையில் குறிப்பிட்டு இருக்கிறார் மண்டோ. இன்றும் கங்காராம் அவர்களின் சமாதி பாகிஸ்தானில் இருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரம் இவரது வீடாக இருந்தாலும் 1947ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு அவரது குடும்பம் டெல்லியில் குடியேறியது.
இவர் நினைவாக தான் 1950களில் டெல்லியில் சர் கங்காராம் மருத்துவமனை கட்டப்பட்டது. இன்றும் ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்கு கங்காராம் மருத்துவமனையை அணுகி வருகின்றனர்.

தன் வாழ்க்கை முழுக்க மிகுந்த கட்டுப்பாட்டோடும் ஒழுக்கத்தோடும் வாழ்ந்து வந்த கங்கா ராம் மிக இளகிய மனம் கொண்டவராக இருந்தார். கட்டுமானம், பொறியியல், விவசாயம், பெண்கள் உரிமை... என அவருடைய பங்களிப்பு பல தலங்களில் பறந்து விரிந்து கிடந்தது. கணவன்மார்களை இழந்த விதவைப் பெண்களின் நல்வாழ்வில் அவர் பெரிதும் அக்கறை காட்டினார். அவருடைய சமூக அக்கறை காரணமாகத் தான் இன்று அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாட்டு மக்களாலும் அன்போடு நினைவு கோரப்படுகிறார்.

கங்கா ராம்
டாடா குழுமம் உருவாக்கிய இந்திய குடியரசுத் தலைவர்- ஒரு வரலாற்றுப் பதிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com