

தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டு தோறும் பட்டின பிரவேசம் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அந்த நிகழ்வில் ஆதீனத்தைப் பக்தர்கள் பல்லக்கில் தூக்கி மடத்தைச் சுற்றிவருவர். இந்த நிகழ்வு கடந்த 500 ஆண்டுகளாக அங்கு நடந்து வருகிறது.
மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்குவது மனித உரிமை மீறல் எனக் கூறி மயிலாடுதுறை அட்சியர் பாலாஜி கடந்த ஏப்ரல் 27ம் தேதி இந்த நிகழ்வுக்குத் தடை விதித்தார். ஆட்சியரின் தடைக்கு ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்த்தன. மதுரை ஆதீனம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.
தமிழக சட்டசபையில் இந்த பிரச்சனை எதிரொலித்தது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். சட்டசபை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சட்டசபை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் தடையை நீக்க வலியுறுத்தினர்.
இதற்கிடையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞானபாலயசுவாமி, கோவை போரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். சந்திப்புக்குப் பிறகு முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று தெரிவித்தனர்.
தற்போது பல்லக்கு தூக்குவதற்கான தடையை நீக்கி மயிலாடுதுறை கலெக்டர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். 22ம் தேதி விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து முதல்வரை வாழ்த்திய ஆதினங்கள், "மரபுவழியாக நடைபெறும் இதுபோன்ற சம்பிரதாயங்களிலிருந்து அரசு என்றுமே மாறுபட்டதில்லை என்பதை இப்போது நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். ஆன்மிக மறுப்பாளர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதுபோல் நாங்கள் எங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறோம். மனிதாபிமான அடிப்படையில் பல்லக்கைத் தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பல்லக்கைச் சுமக்கின்றனர்.
இறைவன் கொடுத்த அருளால் கிடைப்பது இந்த பல்லக்கு. இதைச் சிலர் எளிமையாக நினைக்கின்றனர். தவம் உடையவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என அபிராமிபட்டர் கூறி உள்ளார். பட்டின பிரவேச விழாவை முந்தைய ஆதீனங்கள் நிறுத்தாமல் செய்ததை நாங்கள் தொன்றுதொட்டு தற்போதும் செய்து வருகிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp