
எடப்பாடி பழனிசாமி
NewsSense
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கின்ற விதத்தில் 2024ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். ஆகையால் 27 அமாவாசை தான் இந்த ஆட்சி, ஆகவே ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறி சொல்லி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இவ்வாறாக பேசுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே ஒரே நாடு, ஒரே தேர்தலை மேற்கோள் காட்டி இவ்வாறாக பேசி உள்ளார்.
நகர்பற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவிலிருந்து திமுகவிற்கு சென்ற 8 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் அடையாளம் காணப்பட்டவர்கள் தான் அனைவரும், அப்படியென்றால் திமுகவில் யாருக்கும் தகுதி இல்லையா? ஆள்பிடிக்கும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது,” என்று பேசி உள்ளார்.
மேலும் அவர், “காவல்துறை திமுகவின் கைப்பாவையாக செயல்படுகின்றது. இந்திய நாட்டிலேயே மிகவும் திறமை வாய்ந்த இந்த காவல்துறை தற்போது திமுக அமைச்சர்களுக்கும், திமுக கட்சிக்கும் ஏவல்துறையாக செயல்பட்டு வருகின்றது. ஆகையால், நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கின்ற விதத்தில் 2024ம் ஆண்டு சட்டசபைக்கும் தேர்தல் வரும், ஆகையால் 27 அமாவாசை தான் இந்த ஆட்சி, ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும்,” என்று தெரிவித்தார்.