

Putin
NewsSense
உக்ரைன் மீதான ரசியப் படையெடுப்பை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. உக்ரேனுக்கு ஆயுதங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக ரசிய அதிபர் புடின் தனது அணுசக்தி ஆயுதப் படைகளை தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இது உலகெங்கும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது உக்ரைன் விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்பதற்காக ஒரு எச்சரிக்கையே அன்றி உண்மையில் அணு ஆயுதங்களை ரசியா பயன்படுத்துவதற்கான அறிகுறி அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் போர் செல்லும் போக்கை பார்த்தால் என்ன வேண்டுமானாலும் நடக்குமோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.
கடந்த 80 ஆண்டுகளாக அணுசக்தி ஆயுதங்களை சில நாடுகள் மட்டும்தான் வைத்துள்ளன. அவைதான் தத்தமது நாட்டின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தும் என்று அவை நம்புகின்றன.
NewsSense
அமெரிக்க அறிவியலாளர் கூட்டமைப்பின் மதிப்பீட்டின் படி ரசியாவிடம் 5,977 அணுசக்தி ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் 1,500 ஆயுதங்கள் பழையதாகி பயன்படுத்தும் விதத்தில் இல்லை.
மிச்சமிருக்கும் 4,500 ஆயுதங்களில் பெரும்பாலனாவை நீண்டகாலம் பயன்படுத்தப்படக் கூடியவை. இவற்றில் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் போன்றவை தொலை தூரத்தை குறிவைத்து தாக்கும் வல்லமை கொண்டவை. இவற்றை பயன்படுத்தினால் போர் என்பது அணு ஆயுதப் போராக மாறிவிடும்.
NewsSense
● கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் 1185
● ஏவுகணைகளை வீசும் நீர் மூழ்கிக் கப்பல்கள் 800
● வானிலிருந்து வீசும் வல்லமை படைத்த விமானங்கள் 580
இப்படி நிலம், நீர், வான்வெளி என்று மூன்று முனைகளில் இருந்தும் அணு ஆயுதங்களை வீசும் வல்லமை ரசியாவிடம் இருக்கிறது. இவையன்றி போர்க்க்ளத்தில் குறுகிய பகுதிகளை தாக்கும் சிறு அளவிலான அணுசக்தி ஆயுதங்களும் ரசியாவிடம் இருக்கின்றன.
ஒட்டு மொத்தமாக தற்போது ரசியா நிலம், நீர், வானம் ஆகிய மூன்று வழிகளில் அணு ஆயுதங்கள் கொண்டு சென்று வீசுவதற்கு 1500 போர்க்கருவிகள் தயார் நிலையில் இருக்கின்றன. மிச்சம் உள்ளவை சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அல்லது அவை தயார் நிலையில் இல்லை.
ரசியா தவிர்த்த உலக நாடுகளில் அமெரிக்கா - 5428, பிரான்ஸ் - 290, பிரிட்டன் - 225, சீனா - 350, பாகிஸ்தான் - 165, இந்தியா - 160, இஸ்ரேல் - 90, வடகொரியா - 20 என அணு ஆயுதங்களை வைத்துள்ளன. ரசியாவையும் சேர்த்து உலகம் முழுவதும் 12,705 அணு ஆயுதங்கள் உள்ளன. இவை உலகை பல முறை அழிப்பதற்கு போதுமானவை.
சீனா, பிரான்ஸ், ரசியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை உள்ளிட்டு மொத்தம் 191 நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தப்படி அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் அவற்றை குறைக்க வேண்டும். மேலும் முற்றிலும் அவற்றை அழிப்பதைக் கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் ஒருபோதும் கையெழுத்திடவில்லை. ஏற்கனவே கையெழுத்திட்டிருந்த வட கொரியா 2003 ஆம் ஆண்டில் விலகியது.
அணு ஆயுதங்கள் மற்ற எந்த குண்டுகளையும் விட அதிகபட்ச அழிவை ஏற்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை ஏற்படுத்தும் அழிவின் அளவை சில காரணிகள் தீர்மானிக்கின்றன.
அணு ஆயுதத்தின் அளவு அல்லது எடை மற்றும் அது தரையில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருந்து வெடிக்கிறது என்பதைப் பொறுத்து அழிவின் அளவு மாறுபடும்.
சான்றாக 100 கிலோடன் (100 டன்) அணு ஆயுதம் எவ்வளவு அழிவை ஏற்படுத்தும்?
Fire ball - குண்டு வெடிப்பின் மையத்தில் 1.8 கி.மீ சுற்றளவில் உள்ள கட்டிடங்கள், இதர பொருட்கள், மரங்கள், மக்கள் அனைவரும் அழிக்கப்படுவர். இது முழுமையான அழிவு.
Blast wave – மூன்று கி.மீ சுற்றளவில் மக்கள் கொல்லப்படுவதும், காயப்படுவதும், கட்டிடங்கள் சேதமடைவதும் இருக்கும். இது பேரழிவு
Radiation – ஐந்து கி.மீ. சுற்றளவில் மக்களின் உடல் செல்கள் பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு தொடர்பான நோய்களுக்கு ஆட்படுவர். இது பலத்த சேதம்
Electromagnetic pulse – குண்டு வெடிப்பின் மையத்தில் இருந்து பல கி.மீ சுற்றளவில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடையும்.
Fallout – குண்டு வெடிப்பின் 15 நிமிடங்களுக்கு பிறகு பல கி.மீ சுற்றளவில் கதிர்வீச்சும் புழுதியும் நிலத்தில் பரவி பலவிதமான நோய்களை, காயங்களை ஏற்படுத்தும்.
பெரும் எடை மட்டுமல்ல சிறு எடை கொண்ட அணு ஆயுதங்கள் கூட பெரும் உயிரிழப்பையும், அதன் தொடர்விளைவாக பல சேதங்களையும் கொண்டு வரும்.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமாவில் 1,46,000 மக்களை கொண்ட அமெரிக்காவின் அணு ஆயுத எடை வெறும் 15 கிலோடன் அதாவது 15 டன் மட்டுமே.
இன்றைக்கு இருக்கும் அணு ஆயுதங்கள் 1000 கிலோடன்களுக்கும் (10,00,000 கி.கிராம்) மேற்பட்டவை.
அணு ஆயுதங்கள் வைத்திருப்பதன் மூலம் ஒரு நாட்டை அதன் எதிரி நாடு தாக்குவதை தடுக்க முடியும். இதன் மூலம் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படாமல் ஒரு தற்காப்பு கவசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அணு ஆயுதச் சோதனைகள் அதிகம் உலகம் முழுவதும் நடத்தப்பட்டிருந்தாலும், 1945 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு அணு ஆயுதம் எந்தப் போரிலும் பயன்படுத்தப் பட்டதில்லை. ஆகவே இன்றைக்கு ஒரு அணு ஆயுதம் வீசப்பட்டால் அதன் அழிவு குறித்து மதிப்பிடத்தான்தான் முடியுமே அன்றி உண்மையிலயே அது எவ்வளவு அழிவைஏற்படுத்தும் என்பது நடைமுறையில்தான் தெரியும்.
ரசியாவும் அணு ஆயுதத் தடுப்புக் கொள்கையை பின்பற்றுகிறது. எந்தெந்த தருணங்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என ரசியா நான்கு நிலைமைகளை முன்வைக்கிறது.
1. ரசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
2. அதே போன்று ரசியா மற்றும் அதன் நேச நாடுகள் மீது அணு ஆயுதங்கள் அல்லது பிற பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்துதல்
3. ரசியாவின் முதன்மை அரசு அலுவலகங்கள், இராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி தளங்களை தாக்குதல்
4. ரசிய கூட்டமைப்பு அரசின் இருப்பை ஆபத்திற்குள்ளாக்கும் வகையில் மரபு வழி ஆயுதங்களை பயன்படுத்துதல்.
மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் இந்த ஆபத்து குறித்து எவ்வளவு கவலைப்பட வேண்டும்? அணுஆயுத மோதலுக்கான சாத்தியக் கூறுகள் தற்போது குறைவாகவே உள்ளன. புடினின் எச்சரிக்கை அதன் சாத்தியத்தை கொஞ்சம் அதிகப்படுத்தியுள்ளன.
அதே நேரம் புடினின் எச்சரிக்கை அமல்படுத்தப்படும் அளவில் போரில் ஏதாவது நடந்தாலோ, நிலைமை கையை விட்டு மீறிப்போனாலோ அணு ஆயுத அபாயம் இருக்கும்.
இதுவரை ரசியா தனது அணு ஆயுதக் கொள்கையின்படிதான் நடந்து வருகிறது, அதில் பெரிய மாற்றமில்லை என்று இங்கிலாந்தின் பாதுகாப்புத்துறை செயலாளர் கூறியிருக்கிறார்.
இருப்பினும் போரின் நிலைமையை உன்னிப்பாக மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறைகள் கண்காணித்து வருகின்றன.
ஒருவேளை ரசியா அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் அது ரசியாவையும் உள்ளிட்டு மொத்த உலகையும் பேரழிவுக்கு உள்ளாக்கும்.