Keerthanaa R
எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்துகொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மாணவரின் செயல் சர்ச்சையானதை அடுத்து கல்லூரி மாணவர் சங்கம் மன்னிப்பு கேட்டுள்ளது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது
நடிகை அபர்ணா பாலமுரளி தனது அடுத்த மலையாளப் படமான ‘தங்கம்’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக கடந்த 18 ஆம் தேதி எர்ணாகுளம் அரசு சட்டக் கலூரிக்கு சென்றிருந்தார்.
அங்கு மாணவர் சங்க திறப்புவிழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகர் - இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது நடிகை அபர்ணாவுக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்க மேடைக்கு வந்த மாணவர் ஒருவர், நடிகையின் கையை பிடித்து இழுத்து இருக்கையிலிருந்து எழ வைத்தார்.
மேலும், நடிகையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தவர், அவரின் தோள்கள் மீது கையை போட முயற்சித்தார்.
மாணவர் கையை பிடித்தது முதலே விலகிச்செல்ல எத்தனித்த நடிகை, அவர் தோள் மீது கையை போட வரும்போது மாணவரின் பிடியிலிருந்து விலகிச்சென்றார்.
”இது சட்டக் கல்லூரி இல்லையா?” என்று கேட்டப்படி அபர்ணா தனது இருக்கையில் மீண்டும் அமர்ந்தார்.
மேடையிலிருந்து இறங்கிய அம்மாணவர் மீண்டும் சிறிது நேரம் கழித்து மேடைக்கு வந்து, ”நான் உங்களுடை ஃபேன், எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை” எனக் கூறி நடிகையிடம் கைக்குலுக்க முயற்சித்தார். அப்போதும் நடிகை பரவாயில்லை என்று, கைக்கொடுக்காமல் பின்னால் விலகிச் சென்றார்
மாணவரின் இந்த செயல் சர்ச்சையானதை அடுத்து, மாணவரை சஸ்பெண்ட் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். மேலும் அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளது கல்லூரி நிர்வாகம்
இது குறித்து நடிகை கூறியபோது, “மாணவரின் செயல் வேதனையளிப்பதாக உள்ளது” என்றார்
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல், அவரை தீண்டக் கூடாது என்ற புரிதல் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கே இல்லை என்பது வருத்தமாக உள்ளது என்றார்.