BJP : திருச்சி சூர்யா சிவா- டெய்சி சரண் விவகாரம்: அண்ணாமலை, காயத்ரி ரகுராம் செய்தது என்ன?

Antony Ajay R

பா.ஜ.க பெண் நிர்வாகியை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும் சூர்யா சிவா பேசியிருக்கும் ஆடியோ வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘தி.மு.க-வில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என தி.மு.க-விலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்தவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தற்சமயம் தமிழக பா.ஜ.க-வின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருக்கிறார். 

 பா.ஜ.க-வுக்குச் சென்ற பிறகு தி.மு.க தலைமையையும், தி.மு.க-வின் முக்கிய நபர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசிவருகிறார். 

இதற்கிடையில் திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபாண்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜகவில் பதவி வழங்குவது குறித்த விவகாரத்தில், டெய்சி சரணை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் சூர்யா.

வெளியாகியிருக்கும் அந்த செல்போன் உரையாடலில் பேசும் சூர்யா சிவா, ``மாவட்டப் பொறுப்புல மைனாரிட்டிய போட முடியாமயே இவ்ளோ தாண்டுறியே*** 68 சதவிகித ஓபிசி-யை வெச்சுக்கிட்டு*** நாளைக்கு நான் என் சாதிகாரனை ஏவிவிடுறேன். நீ ஊர் தாண்ட முடியாது. உன் வீடு புகுந்து எல்லாத்தையும் வெட்டிப்புடுவேன்." எனக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

மேலும், "நீ அண்ணாமலைகிட்ட போய்க்க. ஜே.பி.நட்டா, அமித் ஷா, மோடின்னு யார்கிட்ட வேணும்னாலும் போய்க்கோ. ஆனானப்பட்ட தி.மு.க-வுலயே ரெளடியிசம் பண்ணிட்டு வந்தவன் நான்" எனக் கடுமையாக ஆபாச வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.  

இது குறித்து டெய்சி சரணுக்கு ஆதரவாக பேசிய காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சித் தொண்டர்கள் இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி சூர்யா சிவா இது குறித்த விசாரணை முடியும் வரை கட்சி விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

கட்சியில் சில மாதங்களுக்கு முன்னரே சேர்ந்த சூர்யாவுக்கு இப்படி பேசும் தைரியத்தை யார் கொடுத்தது என்று உள்கட்சியினரே குமுறி வருகின்றனர்.