1990களில் அமேசானும், கூகிளும், ஆப்பிளும் ஆரம்பிக்கப்பட்டன. 2000த்தில் ஃபேஸ்புக்கும், டிவிட்டரும் ஆரம்பிக்கப்பட்டன. இரு பத்தாண்டுகளில் இந்த நிறுவனங்கள் இணைய தொழில் நுட்ப நிறுவனங்களில் வருவாய் அளவில் உலக அளவில் கோலேச்சுகின்றன. ஆனால் எப்படி விரைவில் இவர்கள் பெரிய ஆட்டக்காரர்களாக மாறினார்களோ அதே போன்று நீடிப்பார்களா என்பதும் சந்தேகமே. காரணம் மாறிக்கொண்டு வரும் இணைய தொழில் நுட்பம்தான். ஃபேஸ்புக் விசயத்தில் இது இப்போது நடந்து வருகிறது.
ஃபேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை சமீபத்தில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் என்று மாற்றியது. ஆனால் இந்த பெயர் மாற்றம் அவ்வளவு ராசியில்லயோ என்னவோ!
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸின் பங்குச் சந்தை மதிப்பு கடந்த வியாழனன்று சுமார் 230 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவைக் கண்டது. இதன் இந்திய மதிப்பு ரூபாய் 1,71,67,76,35,000 ஆகும். இது ஒரு அமெரிக்க நிறுவனத்தின் இழப்பில் சாதனை படைத்த இழப்பாகும்.
மெட்டாவின் காலாண்டு புள்ளிவிவரங்களின் படி பங்குசந்தை இழப்பின் சதவீதம் 26.4 ஆகும். இது அதன் முதலீட்டாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
ஃபேஸ்புக் ஆரம்பித்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் முதன் முறையாக அதன் பயனர்கள் இந்த வருடம குறைந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஏறுமுகத்தில் இருந்த பயனர்கள் இந்த வருடத்தில் குறைந்திருப்பது மெட்டா நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
மெட்டா நிறுவனத்தின் பங்கு சந்தை இழப்பால் அதன் தலைமை நிர்வாகி மார்க் ஜூக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பில் 31 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இதை ப்ளூம்பெர்க் பில்லியனர் பட்டியல் தெரிவிக்கிறது.
திரு ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட செல்வத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி எஸ்தோனியாவின் ஓர் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமம்.
அந்த வீழ்ச்சிக்குப் பிறகும், திரு ஜுக்கர்பெர்க்கின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட 90 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது அவர் இன்னும் உலகின் பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.
முந்தைய காலாண்டில் 1.930 பில்லியனாக இருந்த ஃபேஸ்புக் பயனர்கள் -daily active users (DAUs) – டிசம்பர் இறுதியிலான 3 மாதங்களில் 1.929 பில்லியனாக குறைந்து போயினர். இதை மெட்டாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 18 ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருந்த தினசரி பயனர்களின் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்து போயிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னலான ஃபேஸ்புக்கில் இந்த நடவடிக்கையின் அளவு தலைகீழாக மாறியது இதுவே முதல் முறை.
அதுவும் ஃபேஸ்புக் நிறுவப்பட்ட 18வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பங்குச் சந்தையில் மெட்டாவிற்கு சரிவு ஏற்பட்டது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
போட்டி தளங்களான டிக்டாக் மற்றும் யூடியூப்பின் போட்டியினால் தனது வருவாய் குறையுமென மெட்டா நிறுவனம் எச்சரித்தது. மேலும் விளம்பரதாரர்களும் தாங்கள் அளிக்கும் விளம்பரங்களை குறைக்கின்றனர்.
பார்வையாளர்கள், குறிப்பாக இளைய பயனர்கள் போட்டியாளர்களின் தளங்களுக்கு மாறி விட்டதால், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக திரு ஜுக்கர்பெர்க் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 27 பில்லியன் டாலர் முதல் 29 பில்லியன் டாலர் வரை வருவாய் இருக்கும் என்று மெட்டா நிறுவனம் கணித்துள்ளது. இது நிதி மூலதன ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது.
பிரபலமான செயலியான டிக்டாக்கை சீனாவில் தொழில் நுட்ப ஜாம்பவான் பைட்டான்ஸ் வைத்திருக்கிறது. டிக்டாக்கிற்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவைகள் அளித்தாலும் அதன் பணவருவாய் குறைவாகவே இருக்கிறது. வழக்கமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகளிலிருந்து வரும் வருமானத்தை விட வீடியோ வருமானம் குறைவாகவே இருக்கிறது.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மெட்டா நிறுவனம் சூறாவளி போன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
இது வெறுமனே போட்டியாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது செல்பேசியில் அனுமதிக்கும் செயலிகளில் டிராக்கிங் (கண்காணிப்பு) செய்வது குறித்த வெளிப்படைத்தன்மை கொள்கையை கொண்டு வந்தது.
அதன்படி ஆப்பிள் செல்பேசி பயனர்கள் தாங்கள் டிராக்கிங் செய்யப்படலாமா கூடாதா என்பதை முடிவு செய்யலாம். இதுவே ஆண்டாராய்டு போனில் நாம் டிராக்கிங் செய்வதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே செயலி வேலை செய்யும். ஆனால் ஆப்பிள் அப்படி ஒரு சுதந்திரத்தை பயனர்களுக்கு கொடுத்தது. செயலிகளும் வேறு வழியின்றி இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டன. இதனால் செயலிகள் பயனர்களின் விவரங்களை விளம்பரதாரர்களுக்கு விற்க முடியாது. இது மெட்டாவின் ஃபேஸ்புக்கிற்கும் பொருந்தும்.
இது ஃபேஸ்புக்கிற்கு மிகப்பெரிய பிரச்சினை. ஏனென்றால் நம்மைப் பற்றிய தகவல்களை விளம்பரதாரர்களுக்கு விற்பதால் மட்டுமே அவர்கள் காட்டில் பணமழை கொட்டுகிறது. இதுதான் பணவருவாயின் சூட்சுமம். மெட்டாவின் காலாண்டு விளம்பர வருமானம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
டிக்டாக் போன்ற ஃபேஸ்புக் - மெட்டாவின் போட்டியாளர்களும் இளைய பார்வையார்களை ஈர்க்கின்றனர். மேலும் இத்தகைய சமூக ஊடகங்களில் சேரும் பயனர் வளர்ச்சி உலகம் முழுவதும் தேக்கமடைந்துள்ளது. பேஸ்புக் வளர்வதற்காக ஆண்டு தோறும் பில்லியன் கணக்கில் மக்கள் பிறக்க முடியாதல்லவா?
மெட்டா -பேஸ்புக்கிற்கு பிரச்சினைகள் என்பது ஏதோ இப்போது மட்டும் ஏற்படும் ஒன்றல்ல. எதிர்காலமும் கேள்விக்குறிதான்.
மெட்டா நிறுவனத்தின் வருமானம் விளம்பரங்கள் மூலம்தான். ஆனாலும் இந்த மெட்டா என்ற பெயர் மாற்றம் நிறுவனத்தின் கொள்கை மாற்றத்தையும் குறிக்கிறது. அதாவது மெட்டாவெர்ஸ். இது இதுநாள் வரை உருவாக்கப்படவில்லை அல்லது சில ஆண்டுகளுக்குள் சாத்தியமும் இல்லை. மெட்டா வெர்ஸ் என்பது நமது உருவம் 3டி- அவதாரத்தில் டிஜிட்டல் உலகில் உலவும் ஒரு தொழில்நுட்பமாகும். அதாவது இப்போது விசைப்பலகையை வைத்து நீங்கள் வீடியோ கேம் விளையாடுகிறீர்கள். மெட்டாவெர்ஸ் வந்துவிட்டால் அந்த டிஜிட்டல் கேமின் அவதாரமாக நீங்கள் விளையாட்டில் உள்ளே சென்று விளையாடுவீர்கள். இது செல்பேசியில் பேசுவது, குடும்பம் நண்பர்களை சந்திப்பது என்று பல்வேறு தளங்களில் வர வாய்ப்புண்டு. ஆனாலும் இது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதுதான் பிரச்சினையே.
மக்கள் உண்மையில் தங்கள் வாழ்க்கையை மெய்நிகர் யதார்த்தத்தில் வாழ விரும்புகிறார்கள் என்பதற்கான சான்றுகள் குறைவாக இருந்தாலும் மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் திட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலவழிக்க உறுதி பூண்டுள்ளார். அவர் ஃபேஸ்புக்கை ஆரம்பித்த போது அது இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அது போல மெட்டாவெர்ஸ் திட்டத்தையும் இப்போது அப்படித்தான் நினைக்கிறார்கள். மார்க் தனது கனவில் வெற்றிபெறலாம் அல்லது தோல்விபெறலாம். இது தொழில் நுட்பத்தின் எதிர்காலம் பற்றிய பிரச்சினை. ஆனால் பல முதலீட்டாளர்கள் இப்போதைக்கு இதை விரும்பவில்லை என்பதே மெட்டா நிறுவனத்தின் பிரச்சினை.
கூகுளுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய டிஜிட்டல் விளம்பர தளத்தை வைத்திருக்கும் மெட்டா, ஆப்பிளின் டிராக்கிங் கண்காணிப்பு கொள்களை மற்றும் தனியுரிமை மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த மாற்றம் ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பயனர்களை குறிவைத்து காண்பிக்கும் விளம்பரங்களை பாதிக்கும். இதனால் இந்த வருடம் மெட்டா நிறுவனத்தின் பத்து பில்லியன் டாலர் வருவாய் பாதிக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.
ஸ்னாப் போன்ற பிற சமூக ஊடகங்கள் தங்களது நிதி வருவாயில் ஆரோக்கியமான முடிவுகளைக் காண்பிக்கும் போது ஃபேஸ்புக்கால் அப்படி முடியவில்லை. போட்டியாளர்கள் மெட்டாவின் வருமானத்தி அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள் என்பதும் உண்மை. இதை டிபிஎஸ் வங்கியின் தொலைத்தொடர்பு மற்றும் இணையத்துறை ஆராய்ச்சி தலைவர் சச்சின் மிட்டல் கூறினார்.
“ஒட்டு மொத்த தொழில்நுட்பத் துறையிலும் எதிர்மறையான தாக்கம் இருப்பது உண்மைதான். ஆப்பிளின் கொள்கை மாற்றங்களை சமாளித்து இலக்கு வைத்து கொண்டு செலுத்தப்படும் விளம்பரங்களை உருவாக்க இன்னும் சிறந்த அல்காரிதங்களை சார்ந்து சமூக ஊடக நிறுவனங்கள் செயல்படுவார்கள்" என்று மிட்டல் நம்பிக்கையுடன் கூறுகிறார். இது போட்டிக்கு போட்டி என்ற கொள்கை சார்ந்தது. எனில் இது இருபக்கமும் வெட்டும் கத்தி என்பதை அவர் கணக்கில் கொள்ளவில்லை. அதாவது போலீஸ் திறமைகளை, நுட்பங்களையும் அதிகரிக்க அதிகரிக்க திருடர்களும் தங்களது உத்திகளைஅதிகரிக்கிறார்கள் அல்லவா அதுபோலத்தான் இதுவும்.
இங்கே அல்காரிதம் என்பதன் பொருளை பார்த்து விடுவோம். அல்காரிதம் எனப்படுவது ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை உத்திரவுகளை நிர்ணயிக்கும் முறையாகும். எளிய சான்றாக சமையலை சொல்லலாம். இறுதியில் சுவையான ஆம்பூர் பிரியாணி உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அடுப்பை பற்றவைத்து எண்ணைய் அல்லது நெய் ஊற்றி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் கறாராக படிப்படியாக செய்கிறோம் அல்லவா அதுதான் அல்காரிதம்.
ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் மட்டுமல்ல, டிவிட்டர், ஸ்னாப், பின்டரெஸ்ட் போன்றவையின் பங்குகளும் கடந்த வியாழனன்று சரிந்தன. ஆனாலும் ஸ்னாப் சமூக ஊடகத்தின் பங்குகள் மட்டும் வர்த்தகம் முடியும் போது உயர்ந்தது. இதனால் அது தனது முதல் காலாண்டில் முதல் முறையாக இலாபத்தைக் காண்பித்தது.
இறுதியாக ஃபேஸ்புக்கின் இந்த சரிவு இதர சமூக ஊடகங்களுக்கும் ஒரு பாடம். வெறும் பொழுதுபோக்கையையும், அரட்டையையும் முதன்மையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக ஊடகங்கள் இப்போது அரசியல், பொருளாதாரம், வணிகம், மூடநம்பிக்கைகள், இன சாதி மத பிரிவுகள், வெறுப்பு பிரச்சாரம், போலிச் செய்திகள் என்று பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் இவற்றின் அடிநாதம் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம்தான். அது அடிவாங்கினால் இவர்கள் என்ன ஆவார்கள் என்பது கேள்விக்குறி. பயனர்களின் தேக்கத்தை உடைக்க இவர்கள் புதுப்புது வழிகளை முயல்வார்கள். ஆனாலும் யார் தோற்பார்கள், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை யூகிப்பது கடினம்.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். யார் வெற்றிபெற்றாலும் அவர்களின் சுமையை நாம்தான் சுமக்கப் போகிறோம். அது தேவையா தேவையில்லையா என்பது உங்களது டிஜிட்டல் விழிப்புணர்வைப்பொறுத்தது.