இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பாரம்பரிய ஊடக நிறுவனங்களில் முதல் பத்து நிறுவனங்களின் ஒட்டு மொத்த விளம்பர வருவாய் 8,396 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இந்தியாவில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களின் ஒட்டு மொத்த விளம்பர வருவாய் 23,213 கோடி ரூபாய். அதாவது பத்து ஊடக நிறுவனங்களின் மொத்த விளம்பர வருவாயை விட இந்த இரண்டு நிறுவனங்களின் வருவாய் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.
இந்தியாவின் ஒட்டு மொத்த டிஜிட்டல் விளம்பர வருமானத்தில் மட்டும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கின் பங்கு 80% ஆகும்.
2020-21-ம் நிதியாண்டில், பட்டியலிடப்பட்ட ஊடக நிறுவனங்களில் மிகப்பெரிய சந்தை மூலதனத்தைக் கொண்டது Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகும். இதன் ஒராண்டு மொத்த வருமானம் ரூ.7,729 கோடியாகப் பதிவாகியுள்ளது. இதில், விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் 48 சதவீதம் அல்லது தோராயமாக ரூ.3,710 கோடி.
இதோடு ஒப்பிடுகையில், பேஸ்புக் இந்தியா மட்டும் 2020-21 நிதியாண்டில் 9,326 கோடி ரூபாய் மொத்த விளம்பர வருமானத்தை பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் கூகுளுக்கு இது 13,887 கோடி ரூபாயாக உள்ளது.
இதேபோல், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சன் டிவி நெட்வொர்க்கிற்கு, கடந்த நிதியாண்டில் விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு ஸ்லாட்டுகளின் விற்பனை மூலம் கிடைத்த மொத்த வருமானம் 998.5 கோடி ரூபாயாகும். இது ஃபேஸ்புக் இந்தியா மட்டும் அறிவித்த மொத்த விளம்பர வருமானத்தில் பத்தில் ஒரு பங்காகும்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்டு பல ஊடகங்களை நடத்தும் பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் (பிசிசிஎல்), இந்தியாவில் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த 2021 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 5,337 கோடி ரூபாயை அதன் விளம்பரம் மற்றும் அனைத்து செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது பேஸ்புக் இந்தியாவின் மொத்த விளம்பர வருவாயில் பாதிக்கும் சற்று அதிகம் மட்டுமே.
இருப்பினும், ஃபேஸ்புக் இந்தியா மற்றும் கூகுள் இந்தியா ஆகிய இரண்டும் பாரம்பரிய ஊடக நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது நிகர வருமானம் மற்றும் நிகர இலாபம் போன்ற அம்சங்களில் பின்தங்கியுள்ளன. நிகர வருமானம் என்பது மொத்த வருமானத்தில் இருந்து இதர நிறுவன செலவுகளை கழித்து விட்டால் கிடைக்கும் வருமானமாகும்.
சான்றாக ஃபேஸ்புக் இந்தியா ரூ.1,481 கோடி நிகர வருவாய் ஈட்டியதாகவும், கூகுள் இந்தியா ரூ.6,386 கோடி நிகர வருவாயைப் பெற்றதாகவும், Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 7,729 கோடி ரூபாயை நிகர வருமானமாகப் பெற்றுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், ஃபேஸ்புக் இந்தியா மற்றும் கூகுள் இந்தியா நிறுவனங்கள் இந்தியாவுக்கு வெளியே விளம்பரங்களை வாங்கி அவற்றை இந்தியாவுக்குள்ளே மறு விற்பனை செய்கின்றன. அதாவது அவர்கள் நிறுவனத்தின் அமெரிக்க தலைமையகத்திலிருந்து விளம்பர ஸ்லாட்டுகளை வாங்கி, பின்னர் அந்த விளம்பர இடத்தை இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் விற்கிறார்கள். இதற்காக, அவர்கள் விளம்பர ஸ்லாட்டை வாங்கும் தங்கள் தலைமை நிறுவனத்திற்குரிய பங்கை செலுத்துகிறார்கள். இதனால்தான் இவர்களது நிகர வருவாய் குறைவாக உள்ளது.
இந்தியாவில் பட்டியலிடப்பட்ட முதல் பத்து பாரம்பரிய ஊடக நிறுவனங்களில், TV18 Broadcast 1083 கோடி ரூபாயையும், DB Corp 1008 கோடி ரூபாயையும், Jagran Prakashan 886 கோடி ரூபாயையும், Entertainment Network 52 கோடி ரூபாயையும், TV Today Network 580 கோடி ரூபாயையும் கடந்த நிதியாண்டில் வருமானமாகப் பெற்றன.
ஃபேஸ்புக் இந்தியா தனது மொத்த விளம்பர வருவாயில் 90 சதவீதம் வரை உலகளாவிய துணை நிறுவனத்திற்கு செலுத்தும் அதே வேளையில், கூகுள் இந்தியா 87 சதவீதம் வரை செலுத்துகிறது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவன செய்தித் தொடர்பாளர்பேசும் போது மொத்த விளம்பர வருமானத்தின் வளர்ச்சி என்பது இந்தியா, டிஜிட்டலை நோக்கி மாறு வருவதைக் குறிக்கிறது என்கிறார். மேலும் இதன் விளைவுகள், ஏதோ வாடிக்கையாளர்கள் மட்டும் டிஜிட்டல் உலகில் பொருட்களை அன்றாடம் வாங்குவதால் வந்துவிடவில்லை. மாறாக வணிகம் மற்றும் பிராண்டுகள், டிஜிட்டல் உலகோடு ஆழ்ந்த இணைப்பில் உள்ளதையும் இது காட்டுகிறாது என்கிறார்.
கொரோனா பான்டமிக்கின் தூண்டுதலால் நுகர்வோரின் நடத்தையில் பல மாற்றங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறார் ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர். அவர்கள் டிஜிட்டல் உலகில்தான் இனி இருப்பார்கள். அதன் விளைவாக டிஜிட்டல் விளம்பர உலகம் மேலும் வளரும். கூடவே தமது சந்தையை விரிவுபடுத்தும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் டிஜிட்டல் உலகைத்தான் தமது வணிக உத்தியின் மையமாக மாற்றுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இலண்டனில் இருந்து கொண்டு உலகெங்கும் விளம்பரங்கள் மற்றும் பிராண்டிங் சேவைகளைச் செய்யும் நிறுவனம் Dentsu. இந்நிறுவனத்தின் அறிக்கையின் படி 2012-ம் ஆண்டில் இறுதியில் 62,577 கோடி ரூபாயாக இருந்த இந்திய விளம்பரத்துறை வருமானம் 2022-ம் ஆண்டின் இறுதியில் 70,343 கோடி ரூபாயக உயரும் என்று மதிப்பிட்டுள்ளது. அதே போன்று 2021-ம் ஆண்டில் 18,938 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் டிஜிட்டல் விளம்பர வருமானம் 2022-ம் ஆண்டில் 23,673 கோடி ரூபாயாக உயரும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
விளம்பர வருமானத்தை வைத்தே ஊடகங்கள் செயல்படும் என்ற நிலையில் இந்திய ஊடகங்களை விட அமெரிக்க இணைய நிறுவனங்களின் விளம்பர வருவாய் அதிகம் என்பதால் எதிர்காலத்தில் என்னநடக்கும்? இந்திய ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சக்தியாக கூகுளும், பேஸபுக்கும் மாறிவிடுமா? யோசித்துப் பாருங்கள்!