இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு புதிய பார்வையையும், தொழில்துறையில் இந்தியாவை உலக அரங்கில் உச்சத்தில் கொண்டு செல்லும் பணிகளையும் முன்னெடுத்த ஜஹாங்கீர் ரத்தன்ஜி டாடா என்கிற ஜே ஆர் டி டாடா பிறப்பால் ஓர் இந்தியர் அல்ல.
இந்தியரான, டாடா பரம்பரையில் வந்த ரத்தன்ஜி தாதாபாய்க்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுசன் பிரையருக்கும் பிறந்தவர்தான் ஜே ஆர் டி. பிரான்ஸ் நாட்டில் பிறந்தாலும், ரத்தன்ஜி மீதான காதல் காரணமாக பார்சி மதத்துக்கு மாறி சூனி டாடா ஆனார் சுசன் பிரையர்.
இந்த ஆர் டி டாடா என்பவர், ஜாம்செட்ஜியின் மகனல்ல, நுசர்வான்ஜியின் மனைவியான ஜீவன்பாயின் சகோதரர் தாதாபாயின் மகன். ரத்தன்ஜி டாடா இரண்டாவது திருமணமாக சூசனைக் கரம் பிடித்தது, ஜாம்செட்ஜியின் மகன் தொராப்ஜிக்குப் பிடிக்கவில்லை. இதைச் சுட்டிக்காட்டி ரத்தன்ஜியை கடிந்து கொண்டதாகவும் பதிவுகள் இருக்கின்றன. பின்னர் ஜாம்செட்ஜியே தலையிட்டு, பிரச்சனையை தீர்த்து வைத்தார்.
ரத்தன்ஜி டாடாவை திருமணம் செய்து கொண்டாலும், பிரான்ஸில் தான் வாழ்ந்து வந்தார் சூனி. அவ்வப்போது அவரைச் சென்று பார்த்து வந்தார் ரத்தன்ஜி. இந்த காதல் ஜோடிக்கு 29 ஜூலை 1904-ல் பிறந்த இரண்டாவது குழந்தை தான் ஜே ஆர் டி.
“ஜாம்செட்ஜியைப் போல இவன் உலகை வெல்வான்” என ஆசிகளோடு தந்தை ரத்தன்ஜி டாடா வைத்த பெயர் தான் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா.
இந்தியாவில் டாடா என்கிற பெயருக்கு இருக்கும் மரியாதை செல்வாக்கு எதுவும் தெரியாமல், தன் அம்மாவோடு பிரான்ஸ் நாட்டில் வானத்தில் ஓர் எந்திரம் பறப்பதைப் பார்த்து கண்கள் விரிய, உள்ளம் படபடக்க வியந்து கொண்டிருந்தார் ஜஹாங்கீர். அவருக்கு ஷைலா என்கிற மூத்த சகோதரியும், தாராப் மற்றும் ஜிம்மி என இரு இளைய சகோதரர்களும், ரொதாபே என்கிற இளம் சகோதரியும் இருந்தனர்.
உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பிரான்ஸ் நாட்டில் எதிரிகளின் விமானம் நாட்டின் எல்லைக்குள்ளும் வரும். அதிலிருந்து தப்பிக்க, அபாய ஒலி எழுப்பப்படும். அப்படி ஒலி எழுப்பும் போது கூட ஜே ஆர் டி பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக ஒளிந்து கொள்ளாமல், விமானத்தை பார்க்கும் ஆர்வத்தில் வெளியே ஓடி இருக்கிறார் மனிதர். ஆறாம் வாய்ப்பாடு படிக்கும் வயதிலேயே, அவருக்கு விமானத்தின் மீது அலாதியான காதல் இருந்தது.
ஜே ஆர் டி பிரான்ஸ், ஜப்பான், இந்தியா என பல நாடுகளில் தன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பிரான்ஸ் நாட்டில் நடக்கும் வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கத் தொடங்கினார். அது அவரை உலக வரலாற்றின் பக்கம் தட்டித் திருப்பியது. மெல்ல உலக வரலாற்றிலிருந்து இந்திய வரலாற்றுக்கும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பக்கமும் திரும்பினார். ஒரு நாள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தே தீரும் என்று உணர்ந்தார் ஜே ஆர் டி.
அவர் தாய் இறந்த பின், கேம்பிரிட்ஜில் சேர்ந்து பொறியியல் படிக்க விரும்பினார். ஆனால் பிரான்ஸ் நாட்டின் புதிய விதியால் அவர் ராணுவ சேவையில் இணைய வேண்டி வந்தது. குதிரை ஏற்றம் தெரியும் என்பதாலும், போலோ விளையாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தாலும், குதிரைப்படையில் இணைந்தார் ஜே ஆர் டி. 1925ஆம் ஆண்டு மத்தியில் அவருக்கு ராணுவத்திலேயே பதவி உயர்வு கிடைத்தது, மேலும் ஒரு சிறப்பு பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அனுமதிக்காக அப்பாவுக்கு கடிதம் எழுத, "பைத்தியமா உனக்கு..?" என ரத்தன்ஜி டாடா பதிலனுப்பினார்.
கொஞ்ச காலத்துக்குப் பிறகு, ஜே ஆர் டி பணியாற்றி வந்த குதிரைப்படை மொராக்கோவில் களமிறக்கப்பட்ட போது, மொத்த படைத்துருப்புகளும் அப்துல் கரீம் என்கிற கொள்ளையர் மற்றும் அவரது படையினரால் கொல்லப்பட்டனர்.
அதே போல கேம்பிரிட்ஜில் படிக்க வேண்டும் என்கிற ஜஹாங்கீரின் கனவுக்கும் ஆர்.டி சம்மதிக்கவில்லை, மாறாக பம்பாய்க்கு வந்து வியாபாரத்தில் தனக்கு உதவுமாறு தந்தை விடுத்த அழைப்பை அவரால் மறுக்க முடியவில்லை.
1920களின் தொடக்கம் வரை, ஃபோர்ட் பகுதியில் இருந்த நவ்சாரி பவனில் தான் டாடா குழுமம் செயல்பட்டு வந்தது. ஜே ஆர் டி டாடா குழுமத்தில் இணையும் காலகட்டத்தில் தான் 'பாம்பே ஹவுஸ்' டாடா குழுமத்தின் தலைமையகமாகச் செயல்படத் தொடங்கியது. இன்று வரை அது தான் டாடாவின் தலைமை அலுவலகமாகத் திகழ்கிறது.
முதலாம் உலகப் போர் காலத்தில், பிரிட்டனுக்குத் தேவையான இரும்பை அள்ளிக் கொடுத்த நிறுவனங்களில் டாடாவும் ஒன்று. அதே உலகப் போரில் , பிரிட்டனுக்குத் தேவையான தளவாடங்களை விநியோகிக்கும் பிரிவில் பணியாற்றியவர் தான் இந்த ஜான் பீட்டர்சன். மிகவும் ஒழுக்கத்தோடும், எதார்த்த புரிதலோடும் பணியாற்றியவரின் திறனைப் பார்த்த ரத்தன்ஜி டாடா, டாடா ஸ்டீலில் பொறுப்பேற்க அழைத்தார். ஆச்சர்யம் ஆனால் உண்மை. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன், ஓர் ஆங்கிலேயே அதிகாரி இந்திய நிறுவனத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.
ராணுவம், படிப்புக்கு எல்லாம் நோ கூறி, வியாபாரத்தில் வந்து உதவுமாறு கூறிய ரத்தன்ஜி டாடா, ஜே ஆர் டியை, அன்று டாடா ஸ்டீலின் நிர்வாக இயக்குநராக இருந்த ஓய்வுபெற்ற ஐ சி எஸ் அதிகாரி ஜான் பீட்டர்சன்னிடம் வேலை பார்க்க வைத்தார். பீட்டர்சன்னின் அலுவலகத்துக்குச் செல்லும் மற்றும் அலுவலகத்திலிருந்து வரும் அனைத்து கோப்புகளையும் கவனித்துக் கொள்வது தான் ஜே ஆர் டியின் பணி.
ஒருவருக்கு அறிவுரை வழங்குவது தொடங்கி, எந்த வித மிகப்படுத்தலுமின்றி பாராட்டுவது வரை, பீட்டர்சன் நயமாக மொழியைக் கையாண்டார். அதை ஜே ஆர் டி கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, ஜே ஆர் டி ஜாம்ஷெட்பூர் ஆலைக்கு அனுப்பப்பட்டார். காலம், ஜே ஆர் டிக்கு வேறு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுக்க காத்திருந்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust