இந்தியா சுதந்திரமடைந்திருந்த ஆரம்ப நாட்களது. போரினால் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் பிரிட்டன் இந்தியாவுக்கு சுதந்திரமளித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதில் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்ததோ, அதே போல, இந்திய அரசியல்வாதிகளுக்கு இந்திய பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது என புரிந்து கொள்ளமாட்டார்கள் என ஜே ஆர் டி கருதினார்.
இந்திய பொருளாதாரம் குறித்து மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகிய இருவருக்கு மட்டுமே ஓரளவுக்காவது புரிதல் இருக்கலாம் என்பதும் ஜஹாங்கீர் டாடாவின் கருத்து.
காந்தியப் பொருளாதாரம் வேலைக்கு ஆகாது, ஜவஹர்லால் நேருவின் சோஷியலிசப் பொருளாதாரக் கொள்கைகள் எதார்த்தத்தில் சரிப்பட்டு வராது என்கிற மனநிலையில் இருந்தார் ஜே ஆர் டி. மேலும், நேருவின் சோஷியலிசக் கொள்கைகள் இந்திய தொழில்துறைக்கு மாபெரும் பின்னடைவாக அமையலாம் என்றும் உணர்ந்தார் ஜே ஆர் டி. தனியார் துறையை செழித்து வளரவிட்டே ஆக வேண்டும் என்பது அவரது உள்ளுணர்வாக இருந்தது.
போதாக்குறைக்கு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை வேறு, இந்திய பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நேரத்தில் ஏர் இந்தியா இன்டர்நேஷனல் என ஒரு துணை நிறுவனத்தின் மூலம் சர்வதேச சேவையைத் தனியே நடத்த அரசிடம் அனுமதி கோரினார். சட்டென ஒப்புக் கொண்டது அரசு.
இந்த கருத்துகள் மற்றும் சிந்தனைகளுக்கு மத்தியில், ஜே ஆர் டி ஏர் இந்தியாவில் பறக்கும் போதெல்லாம், தனக்கு தோன்றும் சிறு சிறு விஷயங்களைக் கூட அப்பிராந்திய மேலாளர்கள் தொடங்கி பொது இயக்குநர் வரை பலருக்கும் எழுதுவார்.
விமான பயணத்தின் போது, ஹெவி ஆல்கஹால் வயிற்றை கணமாக்குகிறது, லைட் பீர் வழங்குங்களேன்...
காபி, டீ இரண்டும் ஒன்று போலிருக்கிறதே... அதைக் கொஞ்சம் கவனியுங்கள்.
சில இருக்கைகளில் ரெக்லைனர் முழுமையாக செயல்படவில்லை கவனத்தில் கொள்ளவும்.
பயணிகள் சாப்பிடும் போது எல்லா விளக்குகளும் எரிவதில்லை, அதை உறுதிப்படுத்தினால் நம் வெள்ளிப் பாத்திரங்கள் மினுமினுக்க விருந்தினர்கள் இன்னும் உணவை ரசித்துச் சாப்பிடுவார்கள். அதை உறுதிப்படுத்தினால் நல்லது... என பல முறை பல குறிப்புகளை வழங்கியுள்ளார்.
லண்டனோ, பாரிஸோ, மெட்ராஸோ அறிவிப்புகள் ஒன்று போலிருக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தன்னால் ஒரு போதும் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களோடு பணத்தை முதலீடு செய்வதில் போட்டி போட முடியாது என்பதை அறிந்திருந்த டாடா, தன் சேவை மற்றும் நேரம் தவறாமையில் கச்சிதமாக செயல்பட விரும்பினார்.
இப்படி ஜே ஆர் டி, அணு அணுவாக ஏர் இந்தியாவை செதுக்கிக் கொண்டிருக்க, மறு பக்கம் ரஃபி அஹ்மத் கித்வாய் என்கிற அமைச்சர் விமான சேவை வழி விரைவு அஞ்சல் சேவைத் திட்டம் ஒன்றை முன்மொழிய அதற்கு போதுமான வசதிகள் இல்லை என ஏர் இந்தியா நிராகரித்தது. அரசு vs டாடா தரப்புக்கு இடையில் மோதல் தொடங்கியது.
போதாக்குறைக்கு இரண்டாம் உலகப் போருக்குப் பின், அமெரிக்கா, தன் டகோடா விமானங்களை சந்தையில் சரமாரியாக களமிறக்க, இந்தியாவில் கொஞ்சம் பணமிருப்பவர்கள் எல்லாம் கூட சொந்தமாக விமான சேவை நிறுவனத்தைத் தொடங்க விண்ணப்பித்தனர்.
அது ஒட்டுமொத்த துறையையும் நிலைகுலையச் செய்துவிடும் என ஜே ஆர்டி எச்சரித்தார். ஆனால் அரசு கேட்கவில்லை. பல நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது அரசு. போதாக்குறைக்கு 1950களின் தொடக்கத்திலேயே ஏர் இந்தியாவை தேசியமயமாக்குவது தொடர்பாகவும் அரசு தரப்பில் பேச்சு எழத் தொடங்கிவிட்டது.
இத்தனைக்கும், அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவும், ஜஹாங்கீர் டாடாவும் நல்ல நண்பர்கள். நேருவின் மகள் இந்திராவின் திருமணத்துக்கு தனிப்பட்ட முறையில் ஜே ஆர் டிக்கு நேரு அழைப்பு விடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் அத்திருமணத்தில் பல முக்கிய விருந்தினர்கள், அரசியல் தலைவர்கள், கலந்து கொள்வர். அவர்களுக்கு மத்தியில், தன்னை கவனிக்க முடியாமல் நேரு சிரமப்படுவார் என ஜே ஆர் டி இந்திராவின் திருமணத்தில் பங்கேற்காமல் தவிர்த்தார்.
1953ஆம் ஆண்டு, ஏர் இந்தியா, ஏர் இந்தியா இன்டர்நேஷனல் உட்பட பல விமான சேவை நிறுவனங்களை அரசு கையகப்படுத்திக் கொண்டது.
தன் செல்லப் பிள்ளை, ஏர் இந்தியா தன் கையைவிட்டுப் போவதை அவரால் தடுக்க முடியவில்லை குறைந்தபட்சம் கம்பெனிகளுக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈடு பணத்தையாவது முறையாகக் கொடுக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்தார் ஜே ஆர் டி.
அன்றைய மத்திய அமைச்சர் ஜகஜூவன் ராம் ஜே ஆர் டியை அழைத்த போது, தன் நஷ்ட ஈடு குறித்த ஆலோசனைக்கு அழைக்கிறர் என்று கருதினார். ஆனால் அது குறித்து அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. கடைசியில், எரிபொருளை இறக்குமதி செய்ய, விமான சேவை நிறுவனங்கள் அரசிடம் டெபாசிட் செய்திருந்த தொகையை விட குறைவான நஷ்ட ஈட்டுத் தொகை அரசு தரப்பில் முன் மொழியப்பட்டது.
ஜகஜீவன் ராமுடனான சந்திப்பில் “விமான சேவை நிறுவனத்தை நடத்துவது அத்தனை எளிதான காரியமென்று கருதுகிறீர்களா? என ஜே ஆர் டி, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஜகஜூவன் ராமோ கூலாக, அது அரசுத் துறையாக இருக்கலாம், ஆனால் அதை நடத்த நீங்கள் உதவ வேண்டும் என்று கூறினார். அது ஜே ஆர் டியின் புண்பட்ட நெஞ்சில் கொதிக்கும் நீரைக் கொட்டியது போலிருந்தது. தான் ஆசை ஆசையாக பார்த்து வளர்த்த குழந்தை என்கிற ஒரே காரணத்தினால் ஏர் இந்தியாவின் தலைவராகத் தொடர ஒப்புக் கொண்டார்.
1953ஆம் ஆண்டு அரசு, ஏர் இந்தியாவை கைப்பற்றிய முதல் நாளிலிருந்தே அதன் செயல்பாடுகள் மாறத் தொடங்கின. அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானங்கள் விபத்துக்கு உள்ளாயின, அதன் சர்வதேச மதிப்பீட்டை சரித்தன. 1955ஆம் ஆண்டு ஜே ஆர் டிக்கு பத்ம விபூஷன் எல்லாம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் ஏர் இந்தியாவில் நிலைமை மோசமடைந்து கொண்டிருந்தது.
கடைசியில் 1977 தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. உரசல்களிலேயே நகர்ந்து கொண்டிருந்த மொரார்ஜி தேசாய் பிரதமரான கையோடு அவரை இந்தியாவின் அணுசக்திக் ஆணையத்திலிருந்து நீக்கினார். அப்படியே ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் ஜே ஆர் டியை நீக்கினார் மொரார்ஜி தேசாய்.
இப்படி டாடாவின் கையிலிருந்து, அவர்கள் கண் முன்னேயே அணு அணுவாக பிரிக்கப்பட்ட ஏர் இந்தியா, இன்று மீண்டும் அரசின் விற்பனைத் திட்டத்தின் கீழ் டாடா குழுமத்திடமே வந்து சேர்ந்திருக்கிறது.
முந்தையப் பகுதியை படிக்க
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust