ரத்தன் டாடாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிச் செல்ல வேண்டும். ரத்தன் டாடா, ஜே ஆர் டி டாடாவின் மகனோ, ஜாம்ஷெட்ஜி டாடாவின் நேரடி பேரனோ அல்ல.
டாடா குழுமத்தை தொடங்கிய நுசர்வான்ஜி டாடாவின் மகன் ஜாம்ஷெட்ஜி டாடா. ஜாம்ஷெட்ஜிக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். அவர்களில் மூத்த மகன் தொராப்ஜி டாடா, அவரது சகோதரர் தான் ரத்தன்ஜி டாடா.
ரத்தன்ஜி டாடா இளம் வயதிலேயே உயிரிழந்துவிட, அவர் மனைவி நவாஜ்பாய் டாடா, நவால் ஹொர்முஸ்ஜியைத் தத்தெடுத்தார். பிற்காலத்தில் இந்த நவால் டாடாதான், இந்திய ஹாக்கி விளையாட்டுக்கு புதிய பரிமாணங்களை கொடுத்தவர். அவரது மகன்தான் ரத்தன் டாடா.
அம்மா அப்பா இருவரும் பிரிந்துவிட, பாட்டி நவாஜ்பாயின் கண்டிப்பில் வளர்ந்தார் ரத்தன் டாடா. விலையுயர்ந்த சொகுசுக் காரில், பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுவது கூட ரத்தன் டாடாவுக்கு ஒருவிதத்தில் சங்கடப்படுத்தியதாகக் கூறியுள்ளார். அந்த அளவுக்கு தன் பண பலத்தையோ, பதவி பலத்தையோ சிறுவயதிலிருந்து யார் மீதும் செலுத்தாதவராகவே வளர்ந்தார். அதில் அவர் பாட்டீயின் வளர்ப்புக்கு முக்கிய பங்குண்டு.
அமெரிக்காவில் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிட வடிவமைப்பு படிப்பை நிறைவு செய்த பின் அங்கேயே ஒரு நல்ல வேலை வீடு என வாழ்ந்து வந்தார் ரத்தன் டாடா. ஜே ஆர் டி டாடாதான், ரத்தன் டாடாவை இந்தியாவுக்கு வருமாறும் டாடா குழுமத்தில் இணையுமாறும் அழைப்பு விடுத்தார்.
ரத்தன் டாடா அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய போது, தன் அமெரிக்க பெண் தோழியோடு திரும்பியதாகவும், அவரால் இந்திய வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட முடியாமல் அவர் அமெரிக்கா திரும்பி விட்டதாகவும் பத்திரிக்கையாளர் கிரீஸ் குபேர் தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குட்டி காதல் கதைக்குப் பிறகு, ரத்தன் டாடா திருமணம் செய்து கொண்டதாகவோ, அவருக்கு குழந்தைகள் இருப்பதாகவோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்திகளும் இல்லை.
1962 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் ஒரு சாதாரண ஊழியராக இணைந்த ரத்தன் டாடா, அந்நிறுவனத்தில் சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றினார். அந்நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்த எஸ் கே நானாவதிக்கு உதவியாளராக இருந்தபோது, ரத்தன் டாடாவின் கடின உழைப்பு மற்றும் நேர்த்தியான பணி குறித்த பாராட்டுப் பத்திரங்கள் ஜே ஆர் டியைச் சென்றடைந்தன.
டாடா குழுமத்தின் முக்கிய வியாபாரங்களில் ஒன்றான எம்பிரஸ் மில், நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த போது, அதை லாபகரமாக மாற்றும் பணி ரத்தன் டாடாவுக்கு கொடுக்கப்பட்டது.
அதேபோல தொடர் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருந்த டாடாவின் நெல்கோ நிறுவனத்தையும் லாபகரமாக்க வேண்டிய பொறுப்பு ரத்தன் டாடாவுக்கு கொடுக்கப்பட்டது.
பின்னாளில் நெல்கோவில் தான் பெற்ற அனுபவம் தனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது என ரத்தன் டாடாவே வெளிப்படையாக கூறும் அளவுக்கு நெல்கோவில் சூழல் மோசமாக இருந்தது.
1983 ஆம் ஆண்டு ஜே ஆர் டி டாடா நேரடியாக நிர்வகித்து வந்த , டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அப்போதுதான் ஜே ஆர் டி டாடாவுக்கு பிறகு, அக்குழுமத்துக்கு ரத்தன் டாடா தலைவர் என ஆரூடம் கூறப்பட்டன. அப்போதும் ரத்தன் டாடா இதுகுறித்து வாய் திறக்கவில்லை.
1982-ஆம் ஆண்டு தன் தாயின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவரை நியூயார்க் அழைத்துச் சென்றார் ரத்தன் டாடா. தாய் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் போதும் டாடா குழுமத்தில் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் பணிகள் குறித்து சிந்தித்தார். அதை அப்படியே ஓர் அறிக்கையாக மாற்றி தயார் செய்தார்.
ரத்தன் டாடாவின் தாய் சோனு அமெரிக்காவில் உயிரிழந்த பின், ஜே ஆர் டி முன்னிலையில் தன் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தை விளக்கினார்.
டாடா குழுமம் அதிஉயர் தொழில்நுட்பம் மற்றும் எயந்திரமயமாக்கல் போன்றவைகளில் கால்பதிக்க வேண்டும் என்பது அவ்வறிக்கையின் ரத்தினச் சுருக்கம். மேலும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், மற்ற டாடா நிறுவன பங்குகளின் கையிருப்பை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் விளக்கங்களை கண்ட ஜே ஆர் டி அவரை வெகுவாகப் பாராட்டினார், ஆனால் அதை செயல்படுத்த எந்தவித பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ரத்தன் டாடாவின் பார்வையை ஜே ஆர் டி டாடா தவிர மற்ற எந்த டாடா குழும அதிகாரிகளோ, தலைவர்களோ பாராட்டவும் இல்லை, ஆதரிக்கவுமில்லை.
டாடா குழுமத்தில் ரத்தன் டாடா உயர்பதவிகளில் இருந்தபோதும் சரி, தலைவரான பிறகும் சரி, தன்னுடைய பைகளையும் தான் கொண்டுவரும் கோப்புகளையும் சுமந்து வர எந்த ஒரு உதவியாளரையும் வைத்துக் கொள்ளவில்லை.
ஜே ஆர் டி டாடா தலைவராக இருந்தபோது பயன்படுத்திய அறையை, ரத்தன் டாடா பயன்படுத்தவில்லை. ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு தன் பணிகளைத் தொடர்ந்தார்.
பண்டிகைகள், விழாக்களின் போது நடைபெறும் ஆடம்பர கொண்டாட்டங்களை அவர் விரும்பவில்லை. அமைதியாக தன் பணியைச் செய்வதில் தன் பொழுதைக் கழித்தார்.
அவர் இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை வளர்த்தார். ஒன்றின் பெயர் டிடோ மற்றொன்றின் பெயர் டேங்கோ.
இத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்த போதும், ரத்தன் டாடா மாலை ஆறரை மணிக்கு பணிகளை முடித்து அலுவலகத்திலிருந்து புறப்பட்டு விடுவார்.
அதற்குப்பின் மிக அத்தியாவசிய மற்றும் மிக அவசர தேவைகளைத் தவிர, அலுவலகப் பணி தொடர்பாக அவரைத் தொடர்பு கொண்டால், அவர் கோபப்படுவார்.
மிக அமைதியான சூழ்நிலையிலேயே அலுவலகக் கோப்புகள் மற்றும் முக்கிய விவரங்களை படிப்பார். அவர் தன் வார இறுதி நாட்களில் மும்பையில் இருந்தால், அலிபாகிலுள்ள பண்ணை வீட்டில் தனியாக அமைதியாக தன் செல்ல நாய்களோடு பொழுதைக் கழிப்பார்.
வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வது புதிய இடங்களைப் பார்ப்பது, உரையாற்றுவது போன்றவைகளில் எலலாம் ரத்தன் டாடாவுக்கு நாட்டமில்லை.
இப்படி எதிலும் அதிகம் ஒட்டாமல் இருக்கும் நபர், தனக்கு சரி என்று பட்டதையும், டாடா குழுமத்துக்கு நன்மை பயக்குவது என்று தோன்றியதையும் தொடர்ந்து அறிவுருத்தியும், தலைவரான பிறகு அதை முறைப்படி செயல்படுத்தியும் வந்தார்.
அப்படி அவர் எடுத்துக் கூறி நிறைவேற்றப்படாமல் இருந்த, டாடா சன்ஸ் நிறுவனம், மற்ற டாடா குழும நிறுவனங்களின் பங்குகளை கணிசமான அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்கிற முடிவை அடுத்து செயல்படுத்தத் தொடங்கினார்.
முந்தையப் பகுதியைப் படிக்க
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust