டாடா குழுமத்தின் எத்தனையோ நிறுவனங்களைக் குறித்து பார்த்திருந்தாலும், இன்றைய தேதிக்கு டாடாவின் மணிமகுடமாகத் திகழும், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் கோஹினூர் வைரமாக வலம் வரும் டிசிஎஸ் என்றழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் குறித்து பார்க்கவில்லை எனில் டாடாக்களின் வரலாறு முழுமையடையாது.
1960-களின் பிற்பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் லைசன்ஸ் ராஜ் உச்சத்தில் இருந்தது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் அடுத்து தங்கள் நிறுவனத்தை அரசு கையகப்படுத்திவிடுமோ என அஞ்சிக் கொண்டிருந்த காலமது. டாடா குழுமம் ஏர் இந்தியா, நியூ இந்தியா அஸூரன்ஸ் என பல லாபமீட்டக்கூடிய நிறுவனங்களை இழந்து, அரசின் போதிய ஒத்துழைப்பின்றி குழுமத்தை மேம்படுத்த தடுமாறிக் கொண்டிருந்த காலம் அது.
அரசுக்கு நாட்டமில்லாத அரசு பெரிதாக கண்டுகொள்ளாத ஒரு துறையில் கால் பதிக்க வேண்டும், அதே நேரம் அது டாடா குழுமத்திற்கு பலன் கொடுப்பதாக இருக்க வேண்டும் என ஜஹாங்கீர் டாடா யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சகோதரியின் கணவர் லெஸ்லி சாஹ்னி டேட்டா ப்ராசசிங் தொழிலில் ஈடுபடலாம் என தன் கருத்தைக் கூறினார்.
லெஸ்லி கூறிய யோசனை ஜே ஆர் டிக்கு மிகவும் பிடித்து இருந்தது. உடனடியாக சுமார் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1968ஆம் ஆண்டு டாடா கம்ப்யூட்டிங் சென்டர் (டி சி சி) என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இதுதான் நாளடைவில் டிசிஎஸ் ஆக பரிணமித்தது.
டாடா அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸிலிருந்து, துடிப்புமிக்க தொழில்நுட்பத்தின் மீது பேராவல் கொண்ட சிலரைத் தேர்வு செய்து கணினி பயிற்சிக்கு அனுப்பினார் ஜே ஆர் டி.
அமெரிக்காவில் மாசாசூட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணிப்பொறி அறிவியல் படித்துவிட்டு, இன்று டாடா பவர் என்றழைக்கப்படும் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த ஃபகிர் சந்த் கோலி என்பவரை, டாடா கம்ப்யூட்டிங் சென்டர் நிறுவனத்திற்கு தலைமை தாங்க அழைத்தார் ஜே ஆர் டி.
இதில் ஒரு சுவாரசிய விஷயம் என்னவென்றால், கோலிக்கு டி சி எஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதை விட, டாடா பவரில் பணியாற்றுவது மிகவும் பிடித்திருந்தது. மும்பை நகரத்துக்கான மின்சார டிஸ்பேச் அமைப்பை கணினிமயமாக்கிய அசாதாரண திறன் கொண்ட அதிகாரி கோலி. அவர் டாடா பவரிலேயே மேலும் உயர் பதவிகளை வகிக்க ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, தன்னை மீண்டும் டாடா பவருக்கு மாற்றிவிடுமாறு டாடா குழும உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை எல்லாம் வைத்ததாகவும் செய்திகள் இருக்கின்றன.
ஆனால் காலப் போக்கில் கோலி டி சி எஸ்ஸையே தன் நிறுவனமாக ஏற்றுக் கொண்டு அதை உலகத் தர நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.
தொடக்கத்தில் டாடா குழும நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் & இதர விவரங்களை கணினிமயமாகும் ஒரு நிறுவனமாகச் செயல்படத் தொடங்கியது டிசிஎஸ். அப்போது மற்ற டாடா குழும நிறுவனங்கள் கம்ப்யூட்டர்களை பெரிதாக மதிக்கவில்லை. பல நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் விவரங்களையும் மற்ற நிதிசார் விவரங்களையும் டிசிஎஸ் நிறுவனத்திடம் பகிரத் தயங்கின அல்லது பகிர மறுத்தன.
எஃப் சி கோலி, டிசிஎஸ் நிறுவனத்துக்கு தேவையான பணிகளைப் பெற ஒரு பக்கம் முனைந்து கொண்டிருக்கும் போது, மறுபக்கம் கணினிகளைப் பெறவும் பெரிய போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அந்த காலத்தில் கம்ப்யூட்டர்களை எவரும் அத்தனை எளிதில் வாங்கிவிட முடியாது. 1960களின் இறுதி ஆண்டுகளில் ஐபிஎம் மற்றும் பாரோஸ் என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தங்கள் கணினிகளை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விட்டன.
1974-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக ஒரு முழு மென்பொருள் திட்டத்தில் களமிறங்கி பணியாற்றியது டிசிஎஸ்.
இந்தியாவில், ஏன் ஒட்டுமொத்த ஆசியாவிலேயே ஜப்பான் போல சில நாடுகள் தவிர மற்ற நாடுகளில் கணினி, மென்பொருள் போன்றவை அதிகம் பயன்பாட்டில் இல்லாததால், 1970-களின் பிற்பகுதியிலேயே, நிறுவனத்தை வளர்த்தெடுக்க அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சந்தைகளை பிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தை உணர்ந்து பணிகளைத் தொடங்கியது டிசிஎஸ்.
1979ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் வெளிநாட்டு விற்பனை அலுவலகம் நிறுவப்பட்டது. அந்த அலுவலகத்தை நிர்வகித்தவரின் பெயர் ராமதுரை சுப்பிரமணியம். இவர்தான் பின்னாளில் ஃபகிர் சந்த் கோலிக்கு பிறகு டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பல்வேறு சாதனைகளை படைத்தவர்.
1975ஆம் ஆண்டு தான் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கியிருந்தார். மென்பொருள் அடுத்து வரக்கூடிய காலகட்டங்களில் சில்லறை வணிகம் முதல் அணு ஆயுதங்கள் வரை அனைத்திலும் பயன்படும் என்பதை உணர்ந்த ஃபகிர் சந்த், புனே நகரத்தில் டாடா ரிசர்ச் டெவலப்மென்ட் அண்ட் டிசைன் சென்டர் என்கிற மென்பொருள் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார்.
வெறுமனே டேட்டா பிராசஸிங் நிறுவனமாக தொடங்கப்பட்ட டிசிஎஸ் அதிவிரைவாக தன்னை ஒரு மென்பொருள் நிறுவனமாக வளர்த்துக் கொண்டது.
1982 ஆம் ஆண்டு அட்வான்ஸ் டேட்டா டிக்க்ஷனரி என்கிற ஒரு தளத்தை உருவாக்கியது டிசிஎஸ். ஒரு திட்டம் குறித்த முழு விவரத்தையும் ஒரு திரையில் காட்டும் அமைப்பது.
1988 ஆம் ஆண்டு இன்டெகிரெடட் ஸ்டாண்டட் பேங்கிங் சிஸ்டம் என்கிற வங்கிப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள உதவும் அமைப்பை உருவாக்கியது. இந்திய வங்கிகளால் அடுத்த சில ஆண்டுகளில் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மென்பொருளது.
1989ஆம் ஆண்டு சுவிஸ் செக்யூரிட்டி கிளியரிங் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்திற்கு பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்படும் வர்த்தகங்கள் தொடர்பான, பரிமாற்ற & செட்டில்மெண்ட் அமைப்பை வடிவமைத்து உருவாக்கி அதை செயல்படுத்தியும் கொடுத்தது. அந்த காலகட்டத்தில் அதுவே உலக அளவில் உருவாக்கப்பட்ட ரியல் டைம் அமைப்பது.
1991 ஆண்டு EX என்கிற வணிக அமைப்புகள் கணக்கு வழக்குகளை பதிவு செய்யப் பயன்படும் மென்பொருள் ஒன்றை வெளியிட்டது. இந்தியாவின் என்.எஸ்.இ பங்குச் சந்தை நிறுவனத்தின் வர்த்தக தளத்தை உருவாக்கிக் கொடுத்தது டிசிஎஸ். இது இந்தியாவின் பங்குச் சந்தை வர்த்தகத்தையே தலைகீழாக மாற்றியது.
2001-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாக இருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை வங்கிகள் அனைத்திலும் ஒருங்கிணைந்த வங்கி சேவையை அமல்படுத்த டிசிஎஸ் மற்றும் எஸ்பிஐ-க்கிடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
2003ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ஒரு பில்லியன் டாலரை கடந்தது. அப்போதுதான், 2010ஆம் ஆண்டுக்குள், உலக அளவில் அதிவேகமான டாப்-10 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை டிசிஎஸ் நிறுவனத்தின் அப்போதைய முதன்மைச் செயல் அதிகாரி ராமதுரை அறிவித்தார். 2007ஆம் ஆண்டில் 'ஏகா' என்கிற சூப்பர் கம்பியூட்டர் உருவாக்கப்பட்டு உலகின் நான்காவது அதிவேக கம்பியூட்டர் என்கிற பெருமையைப் பெற்றது.
2004ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட ஐடி நிறுவனமாகவும், இந்தியாவின் இரண்டாவது அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாகவும் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 13.5 லட்சம் கோடி ரூபாய்.
இன்று டிசிஎஸ் நிறுவனத்தின் BaNCS, iON, Quartz என பல டிசிஎஸ் சேவைகள் உலகின் பல முன்னணி நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிய, லாபகரமான மென்பொருள் திட்டங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்திய அஞ்சலகங்கள் என பல இடங்களில் டிசிஎஸ் தன் சேவைகளை வழங்கி வருகின்றன. டிசிஎஸ் டாடா குழும வானத்தின் துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
முந்தைய பகுதியைப் படிக்க