நேற்று பொங்கல் விழாவை முன்னிட்டு ட்விட்டரில் தமிழ் மொழி குறித்த நகைச்சுவை பதிவு ஒன்றை ட்விட்டினார் மகிந்திரா நிறுவனத்தின் கௌரவ தலைவர் ஆனந்த் மகிந்திரா. அந்த பதிவில் அவர் தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும் போது," போடா டேய் " என்ற வார்த்தையைக் கற்றுக்கொண்டதாகவும் அதில் கூறியிருந்தார்.
ஆனந்த் மகிந்திரா தமிழகத்தில் படித்தாரா? என நெட்டிசன்கள் புருவம் உயர்த்த, அவர் அவ்வப்போது தமிழில் பேசவும் செய்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்து அமைதியானார்கள். ஆனாலும் அவர் எந்த ஊரில் எந்த பள்ளியில் படித்தார் என்ற கேள்வி எழ ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியைக் கண்டுபிடித்தோம்.
லாரன்ஸ் மெமோரியல் ராயல் மிலிட்டரி பள்ளி என அழைக்கப்படும் அந்த பள்ளியில் பல பெரிய தலைகளின் பிள்ளைகள் படித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பரம்பரை பணக்காரரான ஆனந்த் மகிந்திரா மும்பையில் பிறந்தாலும் தமிழகம் வந்து படித்த பள்ளி எனில் கொஞ்சம் ஸ்பெசலானதாக தானே இருக்கும்.
இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் லாரன்ஸியன்ஸ் எனக் குறிப்பிடப்படுகிறார்கள். இந்திய அளவில் பிரபலமான எழுத்தாளர் அருந்ததி ராய் இந்த பள்ளியில் படித்தவர் தான். பிரபல மலையாள நடிகரான ஃபகத் ஃபாஸில் மற்றும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களே!
சில தினங்களுக்கு முன் தன் பள்ளிப் படிப்பைப் பற்றி நினைவு கூர்ந்த ஆனந்த் மகிந்திரா தான் ஒரு “பேக் பெஞ்சர்” எனக் கூறியிருந்தார். அத்துடன் “பின் பெஞ்சில் இருப்பவர்கள் வகுப்பறையிலும் சரி பிரபஞத்திலும் சரி பரந்துபட்ட பார்வையைக் கொண்டிருப்பார்கள்” எனவும் பதிவிட்டிருந்தார்.
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், வரலாறு தான் பள்ளிப் பருவத்தில் விரும்பி கற்ற பாடம் எனவும், ஆர்வமுடன் கற்பவருக்கு எந்த பாடமும் சளிக்காது எனவும் கூறினார்.