துபாயின் மிகவும் முக்கிய நகரம் ஷார்ஜா. அங்கு ‘ஏரீஸ் குருப் ஆஃப் கம்பெனி’ என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹன் ராய். ஊழியர்களின் மனம்கவர்ந்த பாஸாக ராய் மாறிய வெற்றிக் கதையை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
அது 2021 ஆம் ஆண்டின் ஆரம்பக் காலகட்டம். கோவிட் பெருந்தொற்று சற்று ஓய்ந்திருந்த நேரம். உலகம் முழுவதும் பொருளாதார அழுத்தம் அதிகரித்து கொண்டிருந்தது. உலகின் ஒவ்வொரு தொழில்துறையும் தங்களது துறையை பொருளாதார இழப்பில் இருந்து மீட்டெடுப்பதற்கு போராடி கொண்டிருந்தன. ஆனால் அதே நேரத்தில் துபாய் ஷார்ஜாவில் இயங்கி வரும் ஏரீஸ் நிறுவனம், ‘இனி தனது பணியாளர்களுக்கு மட்டுமல்ல அவர்களது மனைவிகளுக்கும் (அல்லது கணவர்களுக்கும்) மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது! ஆம் இத்தகைய அறிவிப்பால் ஒட்டுமொத்த தொழில்துறையின் கண்களும் ‘ஏரீஸ் குருப் ஆஃப் கம்பெனியின் நிறுவுனர் சோஹன் ராயின் பக்கம் திரும்பியது.
1. ஏரீஸ் குருப் ஆஃப் கம்பெனியில் பணியாற்றி 3 ஆண்டுகள் முழுமைப்பெற்ற அனைத்து பணியாளர்களின் மனைவிகளுக்கும் மாத ஊதியம் வழங்கப்படும். அதே நேரம் அவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் முழுமையடைந்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. குறிப்பாக இந்த திட்டத்திற்கு பாலின பேதம் இல்லை. அதாவது பணியாளர்கள் ஆண்களாக இருப்பின் அவர்களது மனைவிகளுக்கும், பெண்களாக இருப்பின் அவர்களது கணவர்களுக்கும் இந்த மாத ஊதியத்தொகை வழங்கப்படும்.
3. ஆனால் பணியாளர்களின் துணைவர்கள் எந்தவொரு வேலையும் இல்லாமல் வீட்டில் இருக்கும்பட்சத்தில் மட்டுமே இந்த ஊதியத்தொகை வழங்கப்படும். வேறு ஏதேனும் வேலை செய்து வருவோருக்கு வழங்கப்பட மாட்டாது.
4. ஒரு ஊழியர் பெறும் சம்பளத் தொகையின் 25 சதவீதம் அவர்களது துணைவர்களுக்கு தனியே சம்பளமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது இந்த அறிவிப்பு குறித்து சோஹன் ராய் கூறும்போது, “ பணியாளர்களின் மனைவிகளுக்கும் மாத ஊழியம் வழங்குவதால் எங்களுக்கு பெரிதாக எந்தவொரு பொருளாதார சிக்கலும் இல்லை. இதை மிகப்பெரும் பொருளாதார நெருடலாக மற்ற நிறுவனங்கள் பார்ப்பது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் நிதி மேலாண்மையில் நாங்கள் மேற்கொண்ட சில மாற்றங்களால், சில கட்டமைப்புகளால் எங்களுக்கு இது சாத்தியமாகியிருக்கிறது. இன்னும் கூற வேண்டுமென்றால் எங்களின் இந்த திட்டமிடலால் கோவிட் பெருந்தொற்றின் பிந்தைய காலத்திலும் கூட எங்கள் நிறுவனத்தின் வருமானம் அதிகரித்திருக்கிறது. எங்கள் ஊழியர்களின் பங்களிப்பும் அதிகரித்திருக்கிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய மாற்றங்களை முன்னெடுக்கும் இந்த ‘ஏரீஸ் குருப் ஆஃப் கம்பெனி’ கடல்சார் தொழில்நுட்பங்கள் (marine) சார்ந்த பிராஜெக்ட்களை செயல்படுத்தி வருகிறது. ஷார்ஜாவில் பணியாற்றி வரும் ஏரீஸின் சுமார் 1000 ஊழியர்களில், 200 ஊழியர்கள் தற்போது இந்த திட்டத்தால் பலன் அடைந்து வருகின்றனர். அவர்களின் துணைவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 28ஆம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சோஹன் ராயின் மனைவிக்கும் கூட ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
அதேப்போல் 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதே நிறுவனம், ஊழியர்களின் பெற்றோர்களுக்கு பென்சன் தொகை வழங்கப்படும் என அறிவித்து, அதனை உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கியது. ஆனால் இந்த அறிவிப்பு அப்போதைய காலகட்டத்தில் பெரிதாக பேசப்படவில்லை.
தங்களது ஊழியர்களின் நலனுக்காக தொடர்ந்து இத்தகைய திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வரும் சோஹன் ராய். ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல, ஒரு சினிமா இயக்குனரும் கூட. ஆம் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சோஹன் ராய் சினிமாவின் மீது பேரார்வம் உடையவர். இவர் 2011ல் ‘டேம்999’ (DAM999) என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் இந்த படம் வெளியான சமயத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழர்களுக்கு எதிரான படமாக இருந்ததாக கூறி பெரும் திரளான தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். நம் இந்திய சினிமாக்களை உலகளவில் பல்வேறு தேசத்து மக்களும் பார்த்து மகிழும் வகையில் பல மொழிகளில் ’டப்’ செய்து திரையிட வேண்டுமென்பது ராயின் எண்ணம். இதற்காக ஒருங்கிணைந்த டப்பிங் ஸ்டூடியோ ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தொழிலதிபராக வெற்றியடைந்து விட்டாலும், சினிமாவில் சாதிக்க வேண்டும்; நம் இந்திய சினிமாவை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் சோஹன் ராய்.