தமிழ் தான் இந்தியாவின் இனைப்பு மொழி எனக் கூறி மீண்டும் தனது இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டை உரக்கக் கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு ரஹ்மானை கவுரவித்தார். தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான், நான் சில கருத்துக்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன் என்றார்.
அதில், இந்தியாவில் எங்கிருந்தாலும் இந்தியா தான். வட இந்தியா தென்னிந்தியா என்றில்லை. எல்லா மொழிப் படங்களும் ஒன்று தான். நான் ஒரு முறை மலேசியா சென்றிருந்த போது என்னிடம் வந்து பேசிய சீனர் ஒருவர், எனக்கு வட இந்தியர்களைப் பிடிக்கும் அவர்கள் நல்ல நிறமாக அழகாக இருக்கிறார்கள். அவர்களின் படங்களும் அருமையாக இருக்கிறது என்றார். அந்த நபர் தென்னிந்தியப் படங்களைப் பார்த்திருக்கிறாரா எனத் தெரியவில்லை . ஆனால் அவர் கூறியது என்னை மிகவும் பாதித்தது. மற்றவர்கள் முன் நாம் தலைநிமிர்ந்து நிற்கும் படியான படங்களை எடுக்க வேண்டும். நம் சினிமாக்களில் கருப்பாக இருப்பவர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களைக் கொடுக்க வேண்டும். கலையின் வழியாக மக்களை பிரிப்பது எளிது. ஆனால் இதுசேர்ப்பற்கான நேரம்.” எனப் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியில் செல்லும் போது பத்திரிக்கையாளர் ஒருவர் மத்திய உள்துறை அமைச்சர் “இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்” எனக் கூறியது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் “தமிழ் தான் இணைப்பு மொழி” என உடனடியாக பதிலளித்தார்.
முன்னதாக மத்திய அமைச்சர் அமித்ஷா, “ஆங்கிலத்துக்கு மாறாக இந்தியைப் பேச வேண்டும்” எனக் கூறியதற்கு தமிழணங்கு புகைப்படத்துடன் “தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!” என எழுதியிருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதற்கு முன்னும் பல முறை தனது இந்தி திணிப்பு எதிர்ப்பு நிலைப்பாட்டையும், தமிழ் மொழிப்பற்றையும் வெளிக்காட்டியிருக்கிறார் ரஹ்மான். கோல்டன் குளோப், ஆஸ்கர், IIFA எனச் சர்வதேச மேடைகளில் தமிழ் மொழியை ஒலிக்கச் செய்தவர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.