சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மெகா சீரியல் ``கோலங்கள்’’. இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியலில் மதுமிதா எச் (ஜனனி), கனிஹா , பிரியதர்ஷினி , ஹரிப்ரியா (நந்தினி), பாம்பே ஞானம் , சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன், கீர்த்தனா கமலேஷ், சத்யப்ரியா, மெர்வின், ஜெகதீஷ் , மாரிமுத்து உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலையில் இருக்கும் குடும்பத்தை நாயகி எப்படி சமாளித்து முன்னுக்கு வருகிறார் எனும் கோணத்தில் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குணசேகரன் - ஊரில் முக்கியப் புள்ளி, தொழிலதிபர் , வீட்டில் மூத்தவர். இவருக்கு மூன்று தம்பிகள். கடைசி தம்பியை தான் நாயகி ஜனனி மணமுடிக்கிறார். நாயகி ஜனனி படிப்பில் படு சுட்டி. பெரிய தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர். குணசேகரன் வீட்டு பின்னணி தெரியாமல் வந்து மாட்டி கொள்கிறார். குணசேகரன் தன் வீட்டு பெண்களின் பெயர்களை பினாமியாக வைத்து பல தொழில்களை நடத்தி வருகிறார். இது தெரியாமல் ஜனணி குணசேகரன் குடும்பத்தில் அனைத்து பெண்களும் தொழிலதிபர்கள் என்று நினைத்துக் கொள்கிறார். முக்கியமாக வீட்டு பெண்களை அடிமையாக நடத்தும் மனோபாவத்தை பற்றி தெரியாமல் குணசேகரனிடம் சரிசமமாக பேசி குடும்பத்தினரை கடுப்பேற்றுகிறார். ஏழை குடும்பத்து பெண்களை குறிவைத்து தன் குடும்பத்துக்கு மருமகள்கள் ஆக்கிக் கொள்கிறார் குணசேகரன். அவர்களை அடிமை போன்று நடத்துகின்றனர். இந்த விஷயம் ஜனனிக்கு தெரியவரும் பட்சத்தில் என்ன முடிவெடுப்பார்? எப்படி எதிர்நீச்சல் அடித்து தொழிலதிபர் ஆவார் எனும் கோணத்தில் கதை நகர்கிறது. இதனிடையே இந்த சீரியலின் இரண்டு எபிசொடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சக்தி - ஜனனி திருமணத்தின் போது மணமகளின் குடும்பத்தினர் நடனம் ஆடிக் கொண்டு பெண்ணை அழைத்து வருகின்றனர். ஜனனியும் டான்ஸ் ஆடிக் கொண்டே மணமேடைக்கு வருகிறார். இதை போட்டோகிராஃபர்கள் வீடியோ எடுக்கின்றனர். இதை பார்த்து கோபமடைந்த குணசேகரன், ``இதென்ன மணமேடைக்கு கூத்தாடிக்கிட்டு வர பழக்கம். அத போட்டோ வேற எடுப்பீங்களா?’’ என்று கேவலமாக டயலாக் பேசுவார். மேலும் திருமணத்தில் நடத்தப்படும் போட்டோஷூட் கலாச்சாரம் பற்றியும் காட்டமாக பேசுவார். இந்த காட்சிகள் புகைப்பட கலைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டி.ஆர்.பி -யில் இடம் பிடிக்காமல் சுமாராக ஓடிக் கொண்டிருந்த சீரியல், இந்த சர்ச்சையால் ரேட்டிங்கில் முன்னுக்கு வந்தது. மேலும் புகைப்பட கலைஞர்கள் சிலர் இயக்குநர் திருச்செல்வத்துக்கு எதிராக போராட்டம் கூட நடத்தினர்.
``குணசேகரன் என்பவர் பிற்போக்குவாதியாக சீரியலில் சித்தரிக்கப்பட்டுள்ளார். அந்த கதாபாத்திரம் இப்படி தான் நடந்து கொள்ளும். அதனை பிரதிபலித்தது தவறா’’என்று சிம்பிளாக விளக்கம் கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார் திருச்செல்வம்.
தற்போது மீண்டும் சர்ச்சை காட்சிகளால் நெகடிவ் கமெண்ட்ஸ் குவிந்துள்ளது. குலதெய்வ கோவிலில் கிடா வெட்டி படையல் போடுகிறார் குணசேகரன். பூஜை முடிந்ததும் அனைவரும் சாப்பிடும் போது, இறைச்சி வாசனை பிடிக்காமல் ஜனனி முகத்தை சுளிக்கிறார். சுத்த சைவமான ஜனனி, அசைவம் சாப்பிடுவது பெருங்குற்றம் என்பது போல டயலாக் விடுகிறார். அசைவம் சாப்பிடுபவர்களையும் விமர்சிக்கிறார். சீரியலின் நாயகி இப்படி எல்லாம் அசைவம் சாப்பிடுபவர்களை விமர்சிப்பது தவறு என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். பிற்போக்குத்தனமாக பேசும் குணசேகரன் கதாபாத்திரமும், எப்போது பார்த்தாலும் அட்வைஸ் செய்து மொக்கை போடும் ஜனனி கதாபாத்திரமும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லை என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் பூமர் அங்கிள் குணசேகரன் என்றும் பூமர் ஜனனி என்றும் பகடை செய்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com