SS ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் நேற்று வெளியான பிரம்மாண்டமான திரைப்படம் RRR. இந்தப் படத்தின் ஒரு நாள் கலெக்ஷன் தொகை 257 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதிக விளம்பரங்கள், புரொமோஷன்கள் என பிரம்மாண்டமாக வெளியானது RRR. ராஜமௌலியின் முந்தைய படமான பாகுபலி மீதிருந்த ஈர்ப்பும் ரசிகர்களைக் கைப்பிடித்து திரையரங்கிற்கு அழைத்து வந்திருக்கிறது. இரண்டு பெரிய ஹீரோக்கள், பாலிவுட் நடிகை அலியாபட், அஜய் தேவ்கன், தமிழ் நடிகர் சமுத்திரக் கனி மற்றும் ஷ்ரேயா என நட்சத்திர பட்டாளமும், சுதந்திரப் போராட்ட கதைக் களமும் படத்துக்கு வலுசேர்த்ததன் மூலம் மிகப் பெரிய வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.
இது குறித்து movie Tracker மனோபாலா வெளியிட்ட ட்விட்டில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் RRR திரைப்படம் 120 கோடி வசூலாகியுள்ளது. இந்தியாவுக்கு வெளியில் பிற நாடுகளில் 78 கோடியும் தமிழ்நாட்டில் 12 கோடியும் வசூலை அள்ளியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 257.15 கோடி ரூபாய் வசூல் செய்து ஒரே நாளில் அதிக தொகை வசூல் செய்த இந்திய படம் என்ற வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறது. தனது முந்தைய படமான பாகுபலி 2ம் பாகத்தின் ரூ224 கோடி எனும் சாதனையை முறியடித்திருக்கிறார் ராஜமௌலி.
RRR கோடிகளில் வசூலை அள்ளும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான் முதல் நாள் வசூலே இவ்வளவு பெரிய தொகை வரும் என யாரும் கணித்திருக்கவில்லை. மற்றொரு மூவி ட்ராக்கரான ரமேஷ் பாலா RRR 250 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறுகிறார். பல மொழிகளில் வெளியாகி வெற்றி வாகை சூடியிருக்கும் RRR தன்னை ஒரு பான் இந்தியா படமாக முதல் நாளிலேயே நிலைநிறுத்திவிட்டது என்றே கூறலாம்.