காந்த மலை முதல் வேர் பாலம் வரை : இந்தியாவில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 9 இடங்கள்

சுற்றுலா என்றாலே வெளிநாடுகளில் உள்ள அதிசய்ங்கள் தான் ஹம் பக்கெட் லிஸ்ட் இல் அதிகம் இடம் பெற்றிருக்கும். ஆனால், இந்தியாவில், பலரை பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகள் கொண்ட ஸ்தலங்களும், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுசூழல்களும் நமக்கு தெரியாமல் பல மரைந்த்திருக்கின்றன. அவற்றில் சில இதோ
Tourist places india
Tourist places india Canva

பிரமிப்பு, அதிசயம் என்றாலே நம் சிந்தனை தானாகவே வெளிநாடுகளை நோக்கியே ஓடும். ஆனால், நாமே அறியாமல், நமக்கு அருகிலேயே பல வித்தியாசமான, அதிசயமான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி, இந்தியாவில் நமக்குத் தெரியாத, நாம் தெரிந்துகொண்டு பார்த்து ரசித்து பிரம்மிக்கும்படியாகப் பல வினோதமான இடங்கள் உள்ளன. வாருங்கள், அவற்றைக் குறித்து காணலாம்!

1. டோங்க் கிராமம் – அருணாச்சல பிரதேசம் :


லோஹித் மற்றும் சதி நதிகளின் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள டோங், இந்தியாவின் முதல் சூர்யோதயம் நடைபெறும் கிழக்குக் கிராமமாகும். சுமார் 1240 மீட்டர் உயரத்தில், இந்தியா, மியான்மர் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பின் மூலோபாய இடத்தில் இந்த டோங் கிராமம் அமைந்துள்ளது.

இந்த இடம் கறைபடாத இயற்கை அழகுடன் செறிவூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கிராமம், புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கமாக உள்ளது. இந்த அழகிய இடத்தை ரசிப்பதற்கு மலையேற்றம் சிறந்த வழியாகும்.


கோடை மாதங்களான ஏப்ரல் முதல் ஜூலை வரை டோங்கிற்குச் செல்லலாம். ஆனால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்கள் அதிகாலை 3.00 முதல் 4.30 மணிக்கு சூர்யோதயத்தைக் கண்டு திளைப்பதற்கு உகந்த மாதங்களாகும்.

டோங்க் கிராமம்
டோங்க் கிராமம்

2. குஹர் மோதி – குஜராத் :


குஹர் மோதி என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கச் மாவட்டத்தில் உள்ள லக்பத் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம். இது மாவட்ட தலைமையகமான பூஜ்ஜில் இருந்து மேற்கு நோக்கி 120 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அரபிக் கடலுக்கு அருகில் உள்ள இந்நகரின் வானிலை எப்போதும் ஈரப்பதத்துடனே காணப்படுகிறது.


குஹர் மோதியில் தான் இந்தியாவின் கடைசி சூரிய அஸ்த்தமனம் நடைபெறுகிறது, என்பதே இந்நகரின் சிறப்பம்சமாகும். சுமார் 7 முதல் 7.30 மணிக்குத் தான் இங்கே சூரியன் மேற்கில் மறைகிறது.

டோங்க் கிராமம்
டோங்க் கிராமம்

3. லோக்டக் ஏரி – மணிப்பூர் :


லோக்டக் ஏரியில் செலவழிக்கிற ஒரு நாள் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக் கூடியதாய் இருக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சென்ட்ராவிலிருந்து பறவை பார்வையில் ஏரியின் கண்கொள்ளாக் காட்சிகளை கண்டுகளிக்கலாம்.

பும்டிஸ் எனப்படும் மிதக்கும் தீவுகளில் பம்சாங்ஸ் எனப்படும் மிதக்கும் மீனவர்களின் குடிசைகள் தான் இந்த ஏரியின் தனித்துவமாகும். தக்மு நீர் விளையாட்டு வளாகத்தில் படகு சவாரி மற்றும் பிற நீர் விளையாட்டுகள் என நீங்கள் செலவு செய்ய ஒரு நாள் நிச்சயமாக போதாது.

லோக்டக் ஏரி –
லோக்டக் ஏரி –

4. மேக்னடிக் ஹில் (காந்த மலை) – லடாக் :


லடாக் பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சுற்றுலா செல்ல விரும்புவோரின் முதல் தேர்வாக லடாக் தான் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப் போவதுமில்லை.குறிப்பாக, லே-யில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள காந்த மலையானது "The Phenomenon That Defies Gravity" என்று எழுதப்பட்ட மஞ்சள் பலகையால் குறிக்கப்பட்டுள்ளது.

காந்த சாலை என்று அழைக்கப்படும் சாலையில் வெள்ளை புள்ளியால் குறிக்கப்பட்ட பெட்டியில், உங்கள் வாகனங்களை நிறுத்தவும் அறிவுறுத்துகிறது. சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் நிறுத்தப்படும் போது, வாகனங்கள் கிட்டத்தட்ட 20 கிமீ / மணி வேகத்தில் முன்னோக்கி நகரத் தொடங்குகின்றன.

காந்த மலையானது லே-கார்கில்-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் டிரான்ஸ்-ஹிமாலயன் பகுதியில் அமைந்துள்ளது. காந்த மலையின் கிழக்கே சிந்து நதி பாய்கிறது. இங்கு நிலவும் இயற்கை எழில் சூழ் சுற்றுப்புறமானது புகைப்படக் கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

மேக்னடிக் ஹில்
மேக்னடிக் ஹில்

5. ஸ்ரீ வீரபத்திர கோயில் லேபக்‌ஷி – ஆந்திரா :


நீங்கள் லேபக்‌ஷி புடவைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றின் நேர்த்தியான வடிவமைப்புகள் யாவும், பெங்களூரிலிருந்து சுமார் 120 கிமீ தொலைவில் உள்ள வீரபத்திரா கோயில் என்று அழைக்கப்படும் அதிகம் அறியப்படாத கோவிலின் தூண்களின் நேர்த்தியான வேலைப்பாடுகளில் இருந்து எடுக்கப்பட்டவையே.

அந்த தூண்களின் ஒவ்வொரு வடிவமைப்பும் தனித்துவமானது மற்றும் மிகவும் சிக்கலானது. அந்த தூண்களைச் செய்த சிற்பிகள் தாங்கள் செய்த வேலைகளை நினைத்து அவர்களே பெருமிதம் கொண்டிருக்க வேண்டும்.


இப்போது நாம் இந்தக் கோவிலில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்திற்கு வருவோம். இந்த கோயிலின் வெளிப்புறத்தில் 70 கல் தூண்களுடன் கூரையைத் தாங்கி நிற்கும் ஒரு பெரிய நடன மண்டபம் உள்ளது. ஆனால், உண்மையில், அறுபத்தொன்பது தூண்கள் தான் கூரையைத் தாங்குகின்றன.

மண்டபத்தின் ஒரு மூலையில் உள்ள தூண், கோயில் தரையைத் தொடாத வண்ணம் செய்யப்பட்டிருக்கிறது. இது தான் மிகவும் புகழ்பெற்ற 'தொங்கும் தூண்' ஆகும். கோயில் தரைக்கும் தூணின் அடிப்பகுதிக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியின் வழியே ஒரு தாள் அல்லது ஒரு துண்டு துணி போன்ற மெல்லிய பொருட்களை ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் அனுப்ப முடியும்.

ஸ்ரீ வீரபத்திர கோயில் லேபக்‌ஷி
ஸ்ரீ வீரபத்திர கோயில் லேபக்‌ஷி


6. விஜய விட்டலா கோயில் – ஹம்பி :

ஹம்பியில் உள்ள விட்டலா கோயில் ஒரு புராதனமான கட்டிடம் ஆகும். இந்த கோயில் அதன் கட்டிடக்கலை மற்றும் ஒப்பற்ற கைவினைத்திறனுக்காக நன்கு அறியப்பட்டதாகும். இந்த நினைவுச்சின்னம் ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்களின் வரிசையில் புகழ்பெற்ற கட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கோயில் ஹம்பியின் வடகிழக்குப் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது.


இந்த கோயிலின் முக்கியமான அம்சமாக கருதப்படுகிற, பெரிய ரங்க மண்டபம் அதன் 56 இசைத் தூண்களுக்குப் பெயர் பெற்றது. இந்தத் தூண்கள் SaReGaMa தூண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வெளிவரும் இசைக் குறிப்புகளால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. அந்த தூண்களை மெதுவாகத் தட்டினால் இசைக் குறிப்புகள் கேட்கும்.

விஜய விட்டலா கோயில்
விஜய விட்டலா கோயில்

7. பழமையான பெரிய ஆலமரம் – கொல்கத்தா :


கொல்கத்தா அருகே உள்ள ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய ஆலமரம் சுமார் 250 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலமரம் சுமார் 14,500 சதுர மீட்டர் (3.5 ஏக்கர்) நிலப்பரப்பில் படர்ந்து விரிந்துள்ளது. இதுவே உலகின் மிகப் பரந்த மரமாக உள்ளது.

ஆலமரம் வகையானது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தாவர இனமாகும். அது தாவரவியல் ரீதியாக இது Ficus benghalensis என்று அழைக்கப்படுகிறது.


அந்த ஒற்றை ஆலமரத்தைத் தூரத்திலிருந்து பார்த்தால், ஒரு பெரிய காடு போன்ற தோற்றத்தைத் தருகிறது. ஆனால், அங்கே நமக்கு தனித்தனி மரங்களாகத் தோன்றுவது, உண்மையில் விழுதுகள் ஆகும். அந்த ஆலமரத்தில் சுமார் 3,600 விழுதுகள் நிலத்தில் வேர் பதித்திருக்கின்றன.

பழமையான பெரிய ஆலமரம்
பழமையான பெரிய ஆலமரம்

8. வேர் பாலங்கள் – மேகாலயா :


மனிதனின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் ஏதேனும் ஒரு பாலத்தை அடையாளப்படுத்தி விட முடியும். ஆனால் மேகாலயாவில் வாழும் ரூட் பிரிட்ஜ்களின் (வேர் பாலங்கள்) இயற்கையின் நம்ப முடியாத அதிசயம் என்றால் அது மிகையாகாது.

இந்த அற்புதமான இயற்கையின் கட்டமைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அபரிமிதமாக வளர்ந்துள்ளன. இந்த வேர் பாலங்கள் மேகாலயாவின் மிகப்பெரிய ஈர்ப்பு சக்திகளில் ஒன்றாக திகழ்கின்றன.


பல காலமாக தன்னாலேயே உருவாகி வரும் மேகாலயா பாலங்கள் சிக்கலான தடிமனான வேர்களால் ஆனவை. மேகாலயாவின் அடர்ந்த காடுகளின் வழியாக ஓடும் நீரோடைகளின் உயரமான கரைகளில் வேர் பாலங்களை வளர்ப்பதில் தேர்ச்சியும், பயிற்சியும் பெற்ற காசி மற்றும் ஜெயின்டியா பழங்குடியினர் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

வேர் பாலங்கள்
வேர் பாலங்கள்

9. மாவ்லின்னாங் – மேகாலயா :

மாவ்லின்னாங் ஆசியாவின் தூய்மையான கிராமங்களில் ஒன்றாக நற்பெயரைப் பெற்றுள்ள மேகாலயா கிராமமாகும். இது “கடவுளின் தோட்டம்” என்ற புனை பெயரிலும் அழைக்கப்படுகிறது.

பழத்தோட்டங்கள், ஓடும் நீரோடைகள், எப்போதும் பசுமையான சுற்றுப்புறங்கள், அசையும் பனை மரங்கள் மற்றும் காசி பழங்குடியினத்தவரால் நன்கு பாதுகாக்கப்பட்ட மரபுகள் ஆகியவை மேகாலயாவின் தெற்குத் தொடர்களின் விளிம்பில் ஒரு சிறந்த சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது.

மாவ்லின்னாங்
மாவ்லின்னாங்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com