அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலகப்புகழ் பெற்ற பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் ஆகஸ்ட் 16 அன்று தனது இணையதளத்திலும், ஆகஸ்ட் 18 அன்று தனது சர்வதேச அச்சுப் பதிப்பின் முதல் பக்கத்திலும் ஒரு கட்டுரை வெளியிட்டது.
அக்கட்டுரையில் புது டெல்லியில் கல்வி முறையை மாற்றியமைத்ததற்காக அங்கே ஆளும் ஆம் ஆத்மி கட்சியை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் அரசு நடத்தும் பள்ளிகளை மாற்றியமைப்பதில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரும் அமைச்சர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவின் பங்கையும் குறிப்பிட்டிருக்கிறது. இதனால் இந்தியாவின் தலைநகரில் உள்ள அரசுப் பள்ளிகள் மறுசீரமைக்கப்பட்டு அங்கே சேர்வதற்குப் பெற்றோர்கள் போட்டி போடுகின்றனர் என்றும் எழுதியது.
இது பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் தலைநகரமான புது டெல்லியில் ஆம் ஆத்மியின் செல்வாக்கையோ, வெற்றியையோ பாஜக-வால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதே போல பஞ்சாபில் நடந்த தேர்தலிலும் ஆம் ஆத்மியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. இப்படி ஆம் ஆத்மியின் செல்வாக்கு வளர்ந்து வருவது பாஜகவிற்குப் பிடிக்கவில்லை. பொதுவில் இருகட்சிகளும் எலியும் பூனையுமாக இருக்கின்றன.
நியூயார்க் டைம்ஸில் வியாழக்கிழமை கட்டுரை வெளிவந்தது என்றால் வெள்ளிக்கிழமை மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் இருபது இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது. இதில் புதிய கலால் கொள்கையில் அதாவது மது உரிமம் தொடர்பான பிரச்னையில் முறைகேடு நடந்தது எனக் கூறி இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
நியூயார்க் டைம்ஸ எனும் மிகப்பெரிய பத்திரிகையில் டெல்லியில் நடந்த கல்விப் புரட்சி குறித்தும் அதற்கு காரணமான சிசோடியாவின் புகைப்படத்தோடு கட்டுரை வெளியானதற்கு பிறகே இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் நியூயார்க் டைம்ஸில் கட்டுரை வெளிவந்த முதல் பக்கத்தின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நியூயார்க் டைம்ஸில் கட்டுரை வெளியான பிறகு அடுத்த நாளே பாஜக இந்தக் கட்டுரை பணம் வாங்கிக் கொண்டு வெளியிடப்படும் ஒரு paid news கட்டுரை என்று குற்றம் சாட்டியது.
இதை நியூயார்க் டைம்ஸ் மறுத்திருக்கிறது. இந்தக் கட்டுரை எந்த பக்கச் சார்பும் இல்லாமல் நடுநிலையாக வெளியிடப்பட்ட கட்டுரை என்றும் கூறியிருக்கிறது. “டெல்லியின் கல்வி முறை மேம்படுத்தப்பட்டது குறித்த எங்கள் கட்டுரை பாரபட்சமற்ற முறையிலும், நேரடியாக கள ஆய்வுகளை அடிப்படையாக வைத்தும் எழுதப்பட்ட கட்டுரை" என்று நியூயார்க் டைம்ஸின் தகவல் தொடர்பு இயக்குநர் நிக்கோல் டைலர் தெரிவித்துள்ளார்.
உலகநாடுகளில் கல்வியின் நிலைமை குறித்து எங்கள் நாளிதழ் பல ஆண்டுகளாக செய்தி வெளியிட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் நியூயார்க் டைம்ஸ் எப்போதும் சுதந்திரமானது, அரசியல் அல்லது விளம்பரதாரர் செல்வாக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டது என்றார்.
இது பணம் கொடுத்து எழுதப்பட்ட கட்டுரை என்று பாஜக எந்த அடிப்படையில் கூறுகிறது? அதற்கு கட்சியின் ஐ.டி விங்கின் தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார். இந்தக் கட்டுரை நியூயார்க் டைம்ஸில் மட்டுமல்ல ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கலீஜ் டைம்ஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது.
இரண்டிலும் வார்த்தைக்கு வார்த்தை அதே கட்டுரை வெளியானதோடு, எழுதியவரின் பெயரும் ஒன்றாக இருக்கிறது எனவும், மேலும் இரு கட்டுரைகளிலும் ஒரே புகைப்படம் இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் டெல்லியில் இல்லாத கல்வி வளர்ச்சி குறித்து அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் விமரிசனம் செய்திருக்கிறார். இது தொடர்பான பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் இரு பத்திரிகைகளின் பிரதிகளைக் காட்டி விட்டு இப்படியெல்லாம் கூட நடக்குமா என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு நியூயார்க் டைம்ஸ் விளக்கமளித்திருக்கிறது. அதன் படி கலீஜ் டைம்ஸ் பத்திரிகையானது நியூயார்க் டைம்ஸின் கட்டுரைகளை வெளியிடுவதற்கு உரிமம் பெற்றுள்ளது என்று நியூயார்க் டைம்ஸின் தகவல் தொடர்பு இயக்குநர் நிக்கோல் டைலர் பதிலளித்திருக்கிறார். இந்த விளக்கத்தை ஆம் ஆத்மியும் அளித்திருக்கிறது. பத்திரிகளுக்கிடையிலான இந்தக் கூட்டணி வழக்கமான ஒன்று என்று அக்கட்சி கூறியது.
பாஜக இதை 'பணம் வாங்கி வெளியிடப்பட்ட செய்தி' என குற்றம் சாட்டுவது நகைக்கத்தக்கது என்று ஆம் ஆத்மியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகவ் சந்திரா கூறியிருக்கிறார். பாஜக தன்னை உலகின் மிகப்பெரிய கட்சி என்றும், அதிக பணம் வைத்திருக்கும் கட்சி என்றும் கூறிக் கொண்டாலும் நியூயார்க் டைம்ஸில் பாஜக தலைவர் எவர் குறித்தும் எந்த செய்தியும் வந்ததில்லை என்றார் அவர்.
ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரான சவுரப் பரத்வாஜ் பாஜகவிற்குச் சவால் விட்டுள்ளார். உங்களிடம் உள்ள அதிகாரம் மற்றும் பணத்தை பயன்படுத்தி நியூயார்க் டைம்ஸில் பாஜகவைப் பற்றிய கட்டுரையை வரவழைக்க முடியுமா என்று அவர் கேட்டிருக்கிறார்.
பொய்யான குற்றச்சாட்டு கூறுவதற்குக் கூட கொஞ்சம் திறமையாக வேலை பார்க்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் சட்டமன்ற உறுப்பினர் அதிஷி, பாஜகவை கேலி செய்திருக்கிறார். எப்படி பத்திரிகைகள் சிண்டிகேட் எனப்படும் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரே செய்தியை வெளியிடுகிறது என்பதை பாஜகவிற்கு பத்திரிகையாளர்கள் புரிய வைக்க வேண்டும் என்று அவர் டிவிட்டரில் எழுதியிருக்கிறார்.
இப்போது பாஜகவிடம் விளக்கமளிப்பதற்கு ஒன்றுமில்லை. அக்கட்சியின் ஐடி பிரிவு தலைவருக்கே ஒரு கட்டுரை இரு பத்திரிகைகள் மட்டுமில்லை, பல பத்திரிகைகளில் கூட வரலாம் என்ற நாளிதழ் செய்தி ஏற்பாடுகள் குறித்து தெரியவில்லை.
இப்படியாக நியூயார்க் டைம்ஸ் எனும் பத்திரிகை ஆம் ஆத்மி கட்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது என்ற பாஜக-வின் குற்றச்சாட்டுக் கேலிக்கூத்தாகியிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust