உத்தர பிரதேசம்: யோகி ஆதித்யநாத் செல்வாக்கு சரிகிறதா? அகிலேஷ் முந்துகிறாரா?

கொரோனா காலத்தில் கங்கையில் மிதந்த பிணங்கள், உதவி கிடைக்காமல் தத்தளித்த மருத்துவமனைகள், உணவின்றி தவித்த மக்கள் என அதிருப்தி சூழல் பாஜகவுக்கு எதிராக இருப்பது அகிலேஷிற்கு இருக்கும் சாதக அம்சம்.
யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

M YogiAdityanath / Facebook

Published on

உத்தரப் பிரதேசம். இந்திய வாக்கரசியலின் இதய மாநிலம். அதிக மக்கள்தொகை, பரந்த நிலப்பரப்பு, 80 மக்களவை தொகுதிகள், 403 சட்டமன்றத் தொகுதிகள் என தரவுகளடிப்படையில் ஆளுங்கட்சிக்கு மிக முக்கிய மாநிலம்.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு சேர்த்து இதுவரை 14 பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி செய்திருக்கிறார்கள், 15ஆவது பிரதமராக நரேந்திர மோதி ஆட்சியில் இருக்கிறார். இதில் ஒன்பது பிரதமர்கள் (மோதி உட்பட) உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்கள் என்கிறது ப்ளூம்பெர்க் க்வின்டின் செய்தி. இந்திய அரசியலில் உத்தரப் பிரதேசத்தின் பங்கு எத்தகையது என்பதற்கு இதுவே சாட்சி.

சுமார் 79% இந்து மக்கள் எண்ணிக்கை, இந்துத்வா தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் அல்லது கொண்டாடும் அல்லது சிரமேற்கொண்டு வாழும் மக்கள் எண்ணிகை அதிகம். ராமர் கோயில், மாட்டிறைச்சித் தடை, மதமாற்றத்தடைச் சட்டம் என பாஜகவின் தத்துவங்கள் கச்சிதமாக எடுபடும், இந்துத்வத்தை இன்னும் பலமாக, வளமாக எதிர்பார்க்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம்.

ராமர் கோயில்

ராமர் கோயில்

Twitter

மேற்குவங்கத்தில் பாஜக கண்ட தோல்விக்குப் பிறகு, பல மாநில கட்சிகளும் பாஜகவை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள். 2022 உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றுவிட்டால் ஆளுங்கட்சியின் கோட்டையிலேயே ஓட்டை விழுந்தாற் போலாகிவிடுமென மொத்த பாஜக கட்சி இயந்திரமும் அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறது.

மறுபக்கம் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்வும் கடந்த சில ஆண்டுகளாக தன் குறைகளை குறைத்தும், நிறைகளை நிரம்பச் செய்தும் வருகிறார். அவரது அணுகுமுறைகளிலும் வியூகங்களிலும் என்ன பெரிய மாற்றம் வந்துவிட்டது? உண்மையிலேயே உத்தரப் பிரதேசத்தில் அவரது கை ஓங்குகிறதா?

2012 உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அகிலேஷ் யாதவ்வுக்கு அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு ஒரு வலிமையான வெற்றி கிடைக்கவில்லை. 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக அசுர பலத்தோடு வென்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மிளகளவுக்கு திருப்திப் பட்டுக் கொள்ளும்படி தன் இடங்களை தக்க வைத்துக் கொண்டது சமாஜ்வாதி.

மறுபக்கம் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்வும் கடந்த சில ஆண்டுகளாக தன் குறைகளை குறைத்தும், நிறைகளை நிரம்பச் செய்தும் வருகிறார். அவரது அணுகுமுறைகளிலும் வியூகங்களிலும் என்ன பெரிய மாற்றம் வந்துவிட்டது? உண்மையிலேயே உத்தரப் பிரதேசத்தில் அவரது கை ஓங்குகிறதா?

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

Facebook / @yadavakhilesh

மூன்று தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் அகிலேஷ் யாதவ் தளரவில்லை என்பதுதான் அவரது முதல் பலம்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் மகாகட்பந்தன் என்கிற பெயரில் எதிரும் புதிருமாக இருந்த அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி கூட்டணி அமைத்து சமாஜ்வாதி ஐந்து தொகுதிகளையும், பகுஜன் சமாஜ்வதி 10 தொகுதிகளையும் வென்றது. குறிப்பாக பாஜகவின் வெற்றியை 2014 தேர்தலில் 71ஆக இருந்ததிலிருந்து 2019-ல் 62ஆகக் குறைத்தது. எதிரியை வீழ்த்த எவரோடும் கூட்டு சேரலாம் என்கிற அரசியல் எதார்த்தத்தை அகிலேஷ் முயன்று பார்த்ததற்கான சாட்சி.

அதே போல, 2017 ஜனவரி காலத்தில் கட்சித் தலைவர் யார் என்கிற பிரச்சனையில் சமாஜ்வாதியின் மிக முக்கிய நிர்வாகி மற்றும் தன் மாமன் ஷிவ்பால் யாதவ்வோடு ஏற்பட்ட முரண் பெரிதாக வெடித்து, கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வீழ்த்த உள்ளடி வேலைகள் நடந்தன. மாமன் தனி கட்சி ஆரம்பித்ததால், யாதவ் சாதி ஓட்டுகள் சிதறின. அது சமாஜ்வாதி கட்சிக்கு 2017 சட்டமன்றம் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தியது.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

Facebook / @yadavakhilesh

சாதி வாக்குகளை ஒருங்கிணைக்க மாமன் துணை தேவை என்பதை உணர்ந்த அகிலேஷ் அதிகம் யோசிக்காமல், சமீபத்தில் அவரோடு கை குழுக்கிவிட்டார். மேலும் தன் தந்தை முலாயாம் சிங் யாதவ் உடனான பஞ்சாயத்துகளையும் ஒருவாரு சரிகட்டி, சமாஜ்வாதி கட்சியை ஒருங்கிணைத்து வருகிறார். இது யாதவ் சமூக வாக்குகளை ஓரிடத்தில் குவிக்க உதவும்.

சமாஜ்வாதி தோல்வியுற்ற தேர்தல்களில் அக்கட்சி யாதவ் சாதியினரையும், இஸ்லாமியர்களையும் குறிவைத்து பணியாற்றிய அளவுக்கு, மற்ற சாதியினரை மனதில் வைத்து பணியாற்றவில்லை என ஒரு பொதுவான குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. அக்கட்சி ஓபிசி உட்பட, யாதவ் சாதிக்கு அடுத்தடுத்த படிநிலைகளில் உள்ள சாதியினரை ஈர்க்கத் தவறியது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது.

ஆனால் இந்த முறை, 2022 சட்டமன்ற தேர்தலுக்கு, சமாஜ்வாதி தன் வியூகத்தை சற்றே மாற்றி பல்வேறு சிறு கட்சிகளோடு கூட்டணியை உறுதி செய்து கொண்டிருக்கிறது. இந்த சிறிய மாற்றம் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் என அகிலேஷ் எதிர்பார்க்கிறார். இக்கூட்டணிகள் மூலம் ஜாட், குர்மி, செளஹான், மெளரியா, குஷ்வாஹா, ராஜ்பர் சாதிகளின் ஆதரவை திரட்ட முடியும் என நம்புகிறார் அகிலேஷ்.

மேற்கு உத்தரப் பிரதேசத்தில், ஜாட் சமூகத்தின் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும் ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியோடு சமாஜ்வாதி கூட்டணி வைத்ததுள்ளது மற்ற சமூக வாக்குகளையும் சமாஜ்வாதி ஈர்க்க தீவிரமாக முயல்கிறது என்பதற்கான சான்று.

சமூக நீதி அரசியலை இதற்கு முந்தைய தேர்தல்களில் அத்தனை சிறப்பாக கையாளாத அகிலேஷ், தற்போது அதன் வலிமையைப் புரிந்து கொண்டு கையிலெடுத்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் “சாதிவாரி கணக்கெடுப்பு கூட நடத்தாதோர், உங்கள் நலன்களைக் குறித்து ஆலோசிக்க முடியாது” என பாஜகவை நேரடியாகத் தாக்கி அகிலேஷ் பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓபிசி மக்களுக்கு அவர்களின் எண்ணிக்கை பொருத்து அவர்களுக்கான பிரதிநிதித்துவம், வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

யோகி

யோகி

facebook

கட்சிகளோடு கூட்டணி அமைப்பது ஒரு பக்கமிருக்க, சர்வ்ஜன் சம்பதா கட்சி, கிஷான் க்ராந்தி மன்ச், சர்வ் சமாஜ் ஏக்தா தல், ராஸ்ட்ரிய ஜன்சம்பாவனா கட்சி என பல சிறிய கட்சிகளை சமாஜ்வாதியோடு இணைக்கும் பணியிலும் மும்முரம் காட்டி வருகிறார்.

சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சியோடும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் தன் ஆதரவை சமாஜ்வாதிக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல இஸ்லாமியர்களின் வாக்குகளை பாஜக புறக்கணிப்பதாலும், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வலுவாக எதிர்ப்பது சமாஜ்வாதி தான் என்கிற பிம்பத்தை அகிலேஷ் அவ்வப்போது மக்கள் மனதில் அடித்து எழுப்புவதாலும், இஸ்லாமியர்களின் வாக்குகள் சைக்கிள் ஏறும் என நம்புகிறார்.

அம்பேத்கரியம் பேசும் லால்ஜி வெர்மா, ராம் ஆசல் ராஜ்பர் அகிய முன்னாள் பகுஜன் சமாஜ் தலைவர்களோடும் அகிலேஷ் நட்பு பாராட்டி, தன் பக்கம் இழுத்து தலித் சமூக மக்கள் வாக்குகளைப் பெற முயல்கிறார். மேலும் இந்தர்ஜித் சரோஜ், திரிபுவன் தத், யோகேஷ் வெர்மா போன்ற தலித் தலைவர்களையும் கடந்த மூன்று ஆண்டுகளில் தன் கட்சியில் இணையச் செய்துள்ளார் அகிலேஷ்.

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 21 சதவீதம் தலித் சமூக மக்களின் வாக்குகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கர்

அம்பேத்கர்

Facebook

தலைவர்களை சமாஜ்வாதியில் இணையச் செய்வதோடு மட்டுமின்றி, அவ்வப் போது அம்பேத்கரைக் குறித்தும், இடஒதுக்கீடு குறித்தும் அகிலேஷ் பேசத் தவறுவதில்லை. எல்லா அரசு அமைப்புகளையும் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டால், இடஒதுக்கீட்டை எங்கு எப்படி அமல்படுத்த முடியும் என லக்னெளவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியது இங்கு நினைவுக்கு வருகிறது.

தலித் சமூகத்தின் வாக்குகளை ஈர்க்க முயலும் அகிலேஷுக்கு மற்றொரு சாதக அம்சம் என்னவெனில், 2017ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக சட்டமன்றத்தில் வென்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களில் தற்போது மூவர் மட்டுமே அக்கட்சியில் உள்ளனர்.

பல தேர்தல்களில் தலித் வாக்குகளை ஈர்த்த பகுஜன் சமாஜ் கட்சியின் தற்போதைய நிலை பொதுவெளியில் அம்பலப்பட்டுவிட்டதால், தலித் வாக்குகள் இடம்மாறும் என எதிர்பார்க்கலாம்.

இளம் வயதில் அதிரடியாக நல்ல அரசு நிர்வாகத்தைக் கொடுக்க, குற்றப் பின்னணி கொண்டோருக்கு கட்சியில் இடமில்லை என அகிலேஷ் முழங்கியது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது மூன்று தேர்தல்களில் தோவ்லியுற்ற, ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியாக அகிலேஷ் யாதவ் இந்த முறை அக்கூற்றை எல்லாம் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை.

இதற்கு சிறந்த உதாரணம் பிரபல ரெளடியாகக் கருதப்படும் முக்தார் அன்சாரியின் சகோதரர் சிபதுல்லா அன்சாரி சமாஜ்வாதி கட்சியில் சேர்க்கப்பட்டதுதான். உத்தரப் பிரதேசத்தின் காஸிபூர், பலியா, அசம்கர் ஆகிய மாவட்டங்களில் அன்சாரி குடும்பத்தினருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள அகிலேஷ் தயங்காமல் அவரைக் கட்சியில் சேர்த்திருக்கிறார்.

AKilesh Yadav with Sigbatullah Ansari

AKilesh Yadav with Sigbatullah Ansari

Facebook

இதே அகிலேஷ் தான் கடந்த 2016 காலகட்டத்தில் முக்தார் அன்சாரியின் ‘க்வாமி ஏக்தா தல்’ கட்சியை சமாஜ்வாதியோடு சேர்க்க தடையாக இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஓராண்டு காலத்துக்கு மேல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு, இந்திய அரசு மூன்று வேளாண் மசோதாக்களைத் திரும்பப்பெற்றது. விவசாயிகள் வாக்குகளை ஈர்க்க, சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால், போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்துக்கும் 25 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து அங்கும் ஸ்கோர் செய்தார் அகிலேஷ்.

கொரோனா காலத்தில் கங்கையில் மிதந்த பிணங்கள், மருத்துவ உதவி கிடைக்காமல் தத்தளித்த மருத்துவமனைகள், ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்த மக்கள் என ஒரு வித அதிருப்தி சூழல் பாஜகவுக்கு எதிராக இருப்பதும் அகிலேஷ் யாதவ்வுக்கு இருக்கும் சாதக அம்சம்.

யோகி - மோடி

யோகி - மோடி

facebook

மறுபக்கம் ஆளுங்கட்சியான பாஜக, காவல்துறை, சிபிஐ, வருமான வரித் துறை, உளவுத் துறை, மோதியின் நேரடி சுற்றுப் பயணம், ராமர் கோயில், பிரிவினைவாதம் என தன் பட்டை தீட்டப்பட்ட ஆயுதங்களை பலமாக பிரயோகித்து வருகிறது.

அகிலேஷ் யாதவ்விடம் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள், சமூக நீதி வியூகங்கள், ஓபிசி மற்றும் தலித் சமூக மக்களை ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சி எல்லாம் கைகொடுக்குமா என்பதை 2022ஆம் ஆண்டில் வாக்காளர்களின் விரல் நுனியில் நனைக்கப்படும் நீல மைதான் தீர்மானிக்கும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com