பாஜக-விற்கு ஆதரவான நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயுதம் தாங்கிய கமாண்டோ வீரர்களால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் செப்டம்பர், 2020 இல் அறிவித்தது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப் பிறகு மும்பை காவல் துறைக்கு பயப்படுவதாகவும், மகாராஷ்டிரா தலைநகரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஒப்பிட்டதாகவும் கூறிய ரணாவத், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்தார்.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கங்கனாவிற்கு 24X7 பாதுகாப்பு வழங்கப்பட்ட போது அவர் தனது சொந்த மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்தார். மும்பைக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி அவர் செல்ல திட்டமிட்டிருந்தார். திரைப்படத்துறையில் போதை பொருள் பயன்பாடு குறித்த அவரது கருத்துக்கள் சிவசேனா தலைவர் சஞ்செய் ராத்தோடு முரண்பட வைத்தது. பலரும் கங்கனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
கங்கனாதான் பாலிவுட்டில் சிஆர்பிஎப் கமாண்டோக்களால் பாதுகாப்பு அளிக்கப்படும் முதல் நடிகையாவார்.
இதே போன்று பாஜகவின் தமிழக மாநில தலைவர் கே அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவராக கடந்தாண்டு பொறுப்பேற்ற கே. அண்ணாமலைக்கு மாநில அரசால் "ஒய் பிளஸ்" பிரிவு வழங்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு "எக்ஸ்" பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. இதற்கு அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய உளவுத் துறை ஐ.பி - அறிக்கை தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. அதனடிப்படையில் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசால் இத்தகைய நபர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு முறை மற்றும் வகைகள் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஆகிய இரு படைகள் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. இந்த பாதுகாப்பு அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அமைச்சர்களுக்கு கிடைக்கும் அதே வேளையில் உளவுத்துறை அமைப்புகளின் அறிக்கைகளின் பெயரில் தனிநபர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஏஜென்சிகள் சட்டப்பூர்வமான எந்த அமைப்புக்கும் புகார் அளிக்காமல் இத்தகைய விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது அரசியல் காரணங்களால் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அது உண்மைதான் என்பதற்கேற்ப பாஜக ஆதரவாளர்களுக்கு மட்டும் இந்தப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், மோடியை எதிர்க்கும் பத்திரிகையாளர்களுக்கு இந்துத்துவா அமைப்புகள் சார்பில் பெரும் அச்சுறுத்தல் இருந்தாலும் அவர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைப்பதில்லை.
இப்படி நாட்டு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வலதுசாரி விஐபிகளுக்கு செலவிடப்படுகிறது.
ஆறு வகையான மத்திய பாதுகாப்பு வகைகள் உள்ளன. எக்ஸ், ஒய், ஒய் பிளஸ், இசட், இசட் பிளஸ் மற்றும் எஸ்பிஜி. சுமார் ரூ. 600 கோடியை ஆண்டு பட்ஜெட்டாகக் கொண்ட சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) பிரதமரை மட்டும் பாதுகாக்கிறது. மற்ற பாதுகாப்பு வகைகள் அரசால் முடிவு செய்யப்படும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
மார்ச் 2018 இல் மக்களவையில் ஒன்றிய அரசு அளித்த பதிலின்படி, அரசின் பட்டியலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 300 பேருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் பாதுகாப்பு வகைகள் இப்படித்தான் செயல்படுகின்றன.
எக்ஸ் பிரிவு: இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு விஐபிக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். ஆறு போலீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேர் வீதம் மூன்று ஷிப்ட்டிற்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.
ஒய் பிரிவு: இரண்டு போலீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு ஆயுதமேந்திய போலீஸ் வீட்டில் 24 மணிநேரமும், இரவில் கூடுதல் பாதுகாப்பும் அளிப்பார்கள். சுமார் 11 அதிகாரிகள் வீட்டிற்கும், விஐபி செல்லுமிடங்களுக்கும் சேர்த்து பாதுகாப்பு அளிப்பார்கள். இதில் ஐந்து பேர் வீட்டிலும், ஆறு பேர் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் ஷிப்டுகளில் பணியாற்றுவார்கள். கங்கனாவிற்கும், அண்ணாமலைக்கும் இத்தகைய பாதுகாப்பு பிரிவுதான் அளிக்கப்பட்டுள்ளது.
இசட் வகை: 2 முதல் 8 ஆயுதமேந்திய காவலர்கள் வீட்டிலும், இரண்டு பேர் 24 மணிநேரமும், அனைத்து சாலைப் பயணங்களுக்கு 1 முதல் 3 பேர் வரையிலான ஆயுதமேந்திய காவலர்கள் உட்பட சுமார் 22 பேர் பாதுகாப்பு அளிக்கின்றனர்.
இசட் பிளஸ் வகை: இந்த பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு குண்டு துளைக்காத கார், மூன்று ஷிப்டுகளில் தேவைப்படும் பாதுகாவலர்கள் பாதுகாப்பிற்கு வருவார்கள். இவற்றிற்கு இவ்வளவுதான் என்று வரையறை கிடையாது. நிறைய காவலர்கள் தேவைக்கேற்ப வருவார்கள்.