பாஜக தேஜஸ்வி சூர்யா : என்ன பேசினார்? ஏன் பேசியதை திரும்பப் பெற்றார்?
கடந்த 25ம் தேதி உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பேசிய அகில இந்திய பாஜக இளைஞரணி தலைவரும் பெங்களூர் தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதைத் தொடர்ந்து 27ம் தேதி தான் பேசிய கருத்துக்களைத் திரும்பப்பெற்றுக்கொள்வதாக ட்விட்டரில் கூறியிருக்கிறார் தேஜஸ்வி.
மதமாற்றமும், வரலாறும்
ஶ்ரீ கிருஷ்ண மடத்தில் இந்தியாவில் நடந்த மத மாற்றம் மற்றும் அதன் வரலாறு குறித்துப் பேசிய தேஜஸ்வி சூர்யா, “பல்லாயிரம் ஆண்டுகளாகக் கட்டாயத்தின் பேரிலோ, ஏமாற்றப்பட்டோ, அச்சுறுத்தப்பட்டோ, ஆசைகாட்டப்பட்டோ இந்துக்கள் முஸ்லீம்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ மாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்னும் தொடர்கிறது. இந்த பிரச்சனையை சமாளிக்க ஒரே வழிதான் இருக்கிறது, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக மதம் மாறியவர்களைத் தாய் மதத்திற்கு திருப்ப வேண்டும்” என சூர்யா பேசினார்.
மேலும் பேசிய அவர், இனி ஒவ்வொரு கோவிலும் மடமும் ஆண்டுக்கு இவ்வளவு பேரை இந்து மதத்திற்கு அழைத்து வர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்க வேண்டும். விழாக்களை மத மாற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டும். திப்பு சுல்தான் காலத்தில் மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதத்துக்கு அழைத்து வந்து திப்பு ஜெயந்தியைக் கொண்டாட வேண்டும் அப்போது தான் மீண்டும் இந்தியாவைக் கொண்டுவர முடியும்!” என்றார்
‘இந்து மதம் மட்டுமே தப்பித்தது’
அத்துடன், “ இந்து மதம் மட்டுமே கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியத்தை எதிர்கொண்டு தப்பித்த ஒரே மதம். இந்த இரு மதங்களும் உலக அளவில் பல மக்களின் பலவித நம்பிக்கைகளை அழித்தன. ஆனால் இந்து மதத்தில் பல கடவுள்கள் இருக்கின்றனர். இஸ்லாத்தில் அவர்கள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் காஃபிர்கள் என்றும், கிறிஸ்துவ மதத்தில் பிறரை மத நம்பிக்கையற்றவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இரு மதங்களும் உருவ வழிபாட்டை அழிக்க நினைத்தன…” என்று பேசினார்.
“இந்துக்கள் வணங்கும் ஶ்ரீரடி சாய்பாபா ஒரு இஸ்லாமிய ஃபகிர் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதுவரை எந்த இஸ்லாமியரும் ஏன் அவரை வணங்குவதில்லை,” எனக் கேள்வி எழுப்பினார்.
சில நாட்களுக்கு முன்பு உத்தரகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் அமைதியைக் குழைக்கும் விதமாக இனப்படுகொலை பற்றி பேசி சர்ச்சைக்குள்ளானது. இதற்கு ஜனநாயகவாதிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.
இந்தச் சூழலில், தேஜஸ்வி சூர்யா மீண்டும் 25-ம் தேதி சச்சரவைத் தூண்டும்படி பேசியிருக்கிறார்.
தாய் மதத்திற்கு அழைத்து வாருங்கள்
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க வேண்டும் என்றவர், இங்குள்ள இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அரபு அல்லது ஜெருசலேமிலிருந்து வந்தவர்கள் அல்ல. மதம் மாறுவதனை தடுக்க வேண்டும். நம் சொந்த ரத்தங்களை மீண்டும் தாய் மதத்துக்கு அழைத்துவர வேண்டும் எனவும் கூறினார்.
“நமது எதிரி யார் என்று நமக்குத் தெரியும், இனி பஞ்சாயத்துத் தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் இந்துக்களைப் பாதுகாப்பவர்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள். 2014-ல் விழிப்புணர்வு அடைந்த இந்துக்கள் அப்படித்தான் வாக்களித்தனர். அதற்கு முன் இந்து - முஸ்லீம் பிரச்சனைகளுக்குத் தீர்ப்பு வழங்க நீதிமன்றங்கள் அஞ்சின ஆனால் இந்துக்களின் விழிப்புணர்வால் நீதிமன்றங்கள் தைரியமடைந்தன. தற்போது ராமர் கோவில் தீர்ப்பு வந்துள்ளது. இவை எல்லாம் இந்துக்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னால் நடந்தவை. இனி இந்துக்கள் வாழ இந்து மதம் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்” எனப் பேசினார் சூர்யா
சூர்யாவின் இந்த நீண்ட நேர பேச்சு பலரிடம் எதிர்ப்புக்களைச் சம்பாதித்தது. தொடர்ந்து 27-ம் தேதி தனது ட்விட்டர் கணக்கில், “எனது கருத்துக்கள் தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுத்திருக்கிறது, அவற்றை நிபந்தனையின்றி திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்