கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பகுதியில் ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத்ராவரது மனைவி உள்ளிட்ட 14 வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் சம்பவத்தன்று உயிரிழந்தனர். உயிர் பிழைத்திருந்த கேப்டன் வருண் சிங் சில நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக்குழு சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மற்றும் களத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்தது. குழுவின் விசாரணை அறிக்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையில் விசாரணைக்கான காரணம் மட்டுமின்றி இனி எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அதற்கான பரிந்துரைகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் 2013-ம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எம்ஐ-17வி-5 ஹெலிகாப்டர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆயுதங்களையும் வீரர்களையும் ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டரான இதனை தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கும் இதைப் பயன்படுத்த முடியும்.
இந்த ஹெலிகாப்டரில் ஃபோம் பாலியுரேத்தின் எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். ஆதலால், ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும். மேலும் ஜாமர் வசதிகள், இன்ஃ ப்ரா ரெட் வசதிகள் உள்ளன. இத்தகைய அதி நவீன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வெறும் ஹெலிகாப்டர் விபத்தாகக் கடந்து செல்ல முடியாமல் முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக்குழு அளித்த அறிக்கையில், விசாரணையின் படி இயந்திரக் கோளாறோ அல்லது சதி வேலையோ, விமானியின் கவனக்குறைவோ விபத்திற்குக் காரணம் இல்லை. திடீரென வானிலை மோசமடைந்தபோது ஹெலிகாப்டர் அந்த மேகமூட்டத்துக்குள் சிக்கியது. இதனால் விமான திசைமாறி Controlled Flight into Terrain (CFIT), என்ற ரீதியில் எதிர்பாராமல் தரையில் விழுந்து நொறுங்கியது" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.