2019 – 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலை உள்ளிட்ட 9 தேர்தல்களில் பாஜக வென்றிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் ஃபேஸ்புக்கின் விளம்பரக் கட்டணங்கள் பாஜகவிற்கு மட்டும்அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய வாடிக்கையாளராக பாஜக இருந்திருக்கிறது. மேலும் குறைந்த செலவில் அதிக வாக்காளர்கள் சென்றடைவதற்கும் இது பயன்பட்டிருக்கிறது.
இலாப நோக்கமற்ற நிறுவனமாக இந்தியாவில் செயல்படும் செய்தியாளர் குழுமம்The Reporters’ Collective (TRC) மற்றும் ஆட் வாட்ச் ad.watch எனப்படும் விளம்பர ஆய்வு நிறுவனமும், ஃபேஸ்புக் பாஜகவிற்கு ஆதரவாக எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் ஆய்வு ஒன்றை அல்ஜசீராவில் தொடராக வெளியிட்டு வருகின்றன.
ஒரு விளம்பர வீடியோவை பத்து இலட்சம் பேர் பார்ப்பதற்கு பாஜக-விற்கு ரூ.39,552ம், காங்கிரசுக்கு 52,150 ரூபாயும் ஃபேஸ்புக்கால் வசூலிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவை விட காங்கிரசு கட்சிக்கு கட்டணம் 32% அதிகம்.
ஃபேஸ்புக்கில் அரசியல் விளம்பரங்கள் அதிகம் செய்த கட்சிகள் பாஜகவும் காங்கிரசும்தான். மேற்கண்ட ஆய்வின் காலமான 22 மாதங்களில் பாஜக செலவழித்த மொத்த விளம்பரத் தொகை 10 கோடியே 41 இலட்ச ரூபாய். காங்கிரசு 6 கோடியே 44 இலட்ச ரூபாய் செலவழித்திருக்கிறது. ஆனால் பாஜகவை விட காங்கிரசுக்கு கட்டணம் அதிகம் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் அக்கட்சி 1 கோடியே 17 இலட்ச ரூபாய் அதிகம் செலுத்தியிருக்கிறது.
ஃபேஸ்புக்கின் இந்த பக்கச் சார்பு இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. அமெரிக்காவில் கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தரப்பிடமிருந்து குறைந்த கட்டணத்தையும், ஜோ பிடன் தரப்பிலிருந்து அதிக கட்டணத்தையும் ஃபேஸ்புக் வசூலித்திருக்கிறது.
அக்டோபர் 2020 இல் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வரின் மகனும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவை பாஜகவின் விளம்பங்கள் குறிவைத்தன. அவற்றில் பொய்ச்செய்தியும், வெறுப்புணர்வும் அதிகம்.
பாஜகவின் விளம்பர வீடியோ ஒன்றில் தலைப்பு இப்படி இருக்கிறது. அதில் தேஜஸ்வி யாதவ், ஷக்தி மாலிக் எனும் ஜனதா தள உள்ளூர் தலைவரிடம் இப்படி பேசுகிறராம்.” நான் லல்லு பிரசாத் யாதவின் மகன் மற்றும் துணை முதலமைச்சர். உன் குரலை உயர்த்தினால் உன்னைக் கொன்று விடுவேன்". பாஜகவின் விளம்பரப்படி ஷக்தி மாலிக் கொல்லப்பட்டார். ஆனால் யார் காரணம்?
பிகார் போலீசார் பின்னர் கண்டுபிடித்ததன்படி மாலிக் அவரது வணிக போட்டியாளர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால் பாஜகவின் பொய் வீடியோ பேஸ்புக்கில் வெளியான ஒரு நாளிலேயே 1,50,000 பார்வைகளைப் பெற்றுவிட்டது. இதற்காக ஃபேஸ்புக் வசூலித்த கட்டணம் ரூ.4,250 மட்டுமே. அதாவது ஒரு பார்வைக்கு மூன்று பைசா மட்டும்தான். இதனால் இந்த வீடியோ வைரலானது.
ஃபேஸ்புக்கில் வேலை செய்யும் இந்தியப் பணியாளர்கள் மூலம் பாஜக பலனடைந்ததா என்றால் இல்லை. ஃபேஸ்புக்கின் நிர்வாகமே பாஜகவிற்கு ஆதரவாக முடிவெடுத்து வேலை செய்தது. இதை அமெரிக்காவின் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் பத்திரிகை ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கிறது.
பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும்படி ஃபேஸ்புக்கின் அல்காரிதம் (algorithm) உருவாக்கப்பட்டிருந்தது. அல்காரிதம் எனப்படுவது கேள்வி ஒன்றுக்கு எந்த வழிமுறைகளின் மூலம் விடை தேடுவது எனும் கட்டளைகள், விதிமுறைகள் அடங்கிய தொகுப்பு. இதை தன்னியல்பாக மென்பொருளே வேலை செய்யுமாறு அமைத்திருப்பார்கள்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த விளையாட்டும் ஒரு அல்காரிதத்தின்படியே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பணம் கட்டி விளையாடும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவீர்கள். இரண்டாம், மூன்றாம் ஆட்டம் என வரிசைக்கிரமமாக வெற்றியின் பண விகிதம் குறையும். பின்னர் மீண்டும் பணம் கட்டுவீர்கள். அதன் பிறகு உங்களுக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும். இறுதியில் பெரும் பணத்தை இழப்பீர்கள். இதுதான் ஃபேஸ்பக்கின் அல்காரிதமும் பாஜகவிற்கு ஆதரவாக பணிபுரிந்த விதம்.
ஃபேஸ்புக்கின் விளம்பரக் கொள்கையின் படி ஒரு விளம்பரம் எத்தனை பேரால் பார்க்கப்படும், எவ்வளவு விருப்பக் குறிகள் வரும், எவ்வளவு பகிரப்படும், எத்தனை மறுமொழிகள் வரும் என்பதற்கேற்ப கட்டணம் மாறுபடும். இதை பயனர்களின் என்கேஜ்மெண்ட் அல்லது பங்கேற்பு எனலாம். இந்த விதி பாஜகவிற்கு சாதகமாகவும், மற்ற எதிர்க்கட்சிகளுக்கு பாதகமாகவும் இருக்கும்படி ஃபேஸ்புக்கின் அல்காரிதம் மாற்றப்பட்டது. இதன்படி பாஜக குறைந்த கட்டணத்தில் பொய் விளம்பர வீடியோக்களை அதிக பயனர்களிடம் கொண்டு சேர்க்கும். எதிர்க்கட்சிகள் அதிலும் சிறிய கட்சிகள் என்றால் கட்டணம் மிக அதிகம் இருக்கும். பார்வைகளும் குறைவு.
மேலும் இந்தியத் தேர்தல் சட்டங்கள் மற்றும் தன்னுடைய சொந்த வழிகாட்டுதல்களை மீறி ஃபேஸ்புக், பாஜகவின் பினாமி அல்லது இரகசிய விளம்பரதாரர்களுக்கு பெரும் சலுகை காட்டியிருக்கிறது. இத்தகைய பினாமி, இரகசிய பாஜக வீடியோ விளம்பரங்களால் ஒட்டு மொத்தமாக பாஜகவின் பார்வையாளர்கள் இரு மடங்காக அதிகரித்திருக்கின்றனர்.
கடந்த காலங்களில் ஃபேஸ்புக் இந்தியாவின் உயர்மட்ட நிர்வாகிகள் பாஜகவோடு நெருக்கமாக பணியாற்றியிருக்கிறார்கள். ஃபேஸ்புக் தளத்தை எப்படி வலிமையாகவும் வேகமாகவும் பயன்படுத்துவது என்பது குறித்து அவர்கள் பாஜகவின் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கின்றார்கள்.
பொதுவில் அச்சு ஊடகமோ, தொலைக்காட்சி ஊடகமோ தமது விளம்பரங்களுக்கு ஒரே கட்டணத்தையே அதுவும் முன்கூட்டி வசூலிக்கிறார்கள். அதில் முதல் பக்கம் விளம்பரம், பிரைம் டைம் விளம்பரம் போன்றவை அதிக கட்டணங்களுடன், பிற பக்க விளம்பரங்கள், பிரைம் டைம் அல்லாத மதியம், காலை நேர விளம்பர கட்டணங்கள் குறைவாக இருக்கும். இதில் கட்சி வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே கட்டணம்தான்.
ஆனால் ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் அதன் ஏலத்தில் வெற்றிபெறுபவருக்கு அதிக பயன் என்பதாக வடிவமைத்திருக்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட பயனர், அவரது வட்டாரம், வயது, பாலினம் போன்றவற்றை இரண்டு விளம்பரதாரர்கள் ஒரே மாதிரி தெரிவு செய்கிறார்கள் என்று வைப்போம். இதில் யார் அதிக கட்டணம் தருகிறார்களோ அவர்களுக்கு விளம்பரங்களை ஃபேஸ்புக் ஒதுக்கும். இந்த விதிமுறை பிரச்சினைக்குரிய ஒன்று என அமெரிக்காவிலேயே எதிர்ப்பு இருக்கின்றது.
இந்தியாவைப் பொறுத்தவரை அதுவும் தேர்தல் எனும் வரும் போது மேற்கண்ட ஃபேஸ்புக்கின் விளம்பர அல்காரிதம் வேறு மாதிரி செயல்படும். அதாவது பாஜக – இந்துத்துவா - மோடிக்கு ஆதரவாக விளம்பரம் செய்தால் கட்டணம் குறைவாகவும், இந்துத்துவாவிற்கு எதிராக விளம்பரம் செய்தால் கட்டணம் அதிகமெனவும் வடிவமைத்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் செய்தியை தேடும் பயனர்கள் இறுதியில் உணர்ச்சி மிகுந்த உள்ளடக்கத்திற்கு பலியாகிவிடுவார்கள். இதை பாஜக தனக்கு சாதகமாக பொய்ச் செய்திகளை உணர்ச்சி பொங்க வெளியிட்டு பயனர்களின் கருத்தை அதாவது வாக்காளர்களின் கருத்தை மாற்றுகிறது.
ஃபேஸ்புக்கில் பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தை ஒரு கோடியே 67 இலட்சம் பேர் பின்தொர்கின்றனர். மோடியை 4 கோடியே 68 இலட்சம் பேர் பின்தொடர்கின்றனர். காங்கிரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தை 62 இலட்சம் பேரும், ராகுல் காந்தியை 47 இலட்சம் பேரும் ஃபேஸ்புக்கில் பின்தொடர்கிறார்கள். இந்த எண்ணிக்கை வேறுபாடுகளில் பாஜகவிற்கு ஆதரவான தானியங்கி பொய்க்கணக்குகள் இருந்தாலும் அதன் விளம்பரங்களை அதிகம் பேர் பார்ப்பார்கள் என்பதே முக்கியம். மேலும் பாஜகவிற்கு அதிகமாகவும், காங்கிரசுக்கு குறைவாகவும் பயனர்கள் இருக்க என்ன காரணம்?
குறைவான கட்டணத்தில் அதிகம் பேர் பாஜகவின் விளம்பர வீடியோக்கள் - செய்திகளை பார்க்கின்றனர். இது ஒவ்வொரு முறையும் பாஜகவின் பின்தொடர்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கும். மாறாக காங்கிரசு அதிக கட்டணத்தில் விளம்பரம் செய்து குறைவான பேர் அதை பார்க்கும் போது பின்தொடரும் பயனர்களின் எண்ணிக்கை குறைவாகவே அதிகரிக்கும்.
இப்படி எல்லா விதங்களிலும் ஃபேஸ்புக் தனது தளத்தை இந்துத்துவா பேசும் பாஜகவிற்கு ஆதரவாக வடிவமைத்திருக்கிறது. எனவே இந்த ஆய்வில் வரும் பத்து தேர்தல்களில் ஒன்பதில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் இந்த போங்காட்டம் கண்டிப்பாக பங்காற்றியிருக்கிறது. இனி ஃபேஸ்புக்கை காவிபுக் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.