PTR : "நாங்கள் ஏன் நீங்கள் கூறுவதைக் கேட்க வேண்டும்?" வைரலான விவாதத்தில் என்ன பேசினார்?

மக்கள் முடிவு செய்வார்கள் நாங்கள் சரியாக பணியாற்றுகிறோமா இல்லையா என, மற்றவர்களுக்கு இங்கு என்ன தேவை இருக்கிறது?
பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்Twitter
Published on

சில நாட்களுக்கு முன்பு இந்தியா டுடே ஊடகத்தில் நடந்த கலந்துரையாடலில் தமிழ்நாடு நிதியமைச்சர் கலந்துகொண்டு பேசியது சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த விவாதத்தில் நெறியாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் பேசவிரும்புவதாக கூறி, " ஆரம்பகாலத்தில் முதலீட்டாளராக நிதித்துறையில் செயல்பட்ட தியாகராஜன் அப்போது அரசியல்வாதிகள் நிதித்துறையை கையாள்வது குறித்து விமர்சித்திருப்பார். ஆனால் இப்போது அவரே தமிழகத்தின் நிதி அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

நான் மொத்த நாட்டையும் குறித்து விவாதிக்க விரும்புகிறேன்.

பஞ்சாப், ராஜஸ்தான், பிகார், கேரளா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் என ஒவ்வொரு மாநிலமும் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. அங்கெல்லாம் மொத்த மாநில உற்பத்தியில் கடன் விகிதம் 30 முதல் 50 விழுக்காடாக இருக்கிறது.

இந்த நிலையில் இலவசங்கள் குறித்த விவாதம் நாடுமுழுவதும் எழுந்துள்ளது. இலவசங்கள் என்பது என்ன? அதனை முறைப்படுத்த வேண்டுமா? யார் முறைப்படுத்த வேண்டும்? தியாரகராஜன் உங்களை வரவேற்கிறேன்..." என்று கேள்வி எழுப்பினார்.

பதிலளிக்கத் தொடங்கிய அமைச்சர் தியாகராஜன், "நான் கொஞ்சம் பின்னால் செல்கிறேன். 15வது நிதிக்குழு தனது நெறிமுறைகளை வெளியிட்ட போதே இந்த விவாதம் எழுந்தது. அதில் ஜனரஞ்சக திட்டங்களை ஊக்குவிக்கக் கூடாது என்ற வரி இடம் பெற்றிருந்தது. அப்போது இலவசங்கள் ஜனரஞ்சக திட்டமாக கருதப்பட்டது.

அப்போது மாநில நிதியமைச்சர்களும், மாநில பிரதிநிதிகளும் குழுவில் இடம் பெற்றிருந்த பொருளாதார அறிஞர் அனுப் சிங் போன்றவர்களும் தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள சக்திகாந்ததாஸ், எனது நண்பர் NK சிங் போன்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம்.

அவர்களிடம் நாங்கள் இதே கேள்வியைக் கேட்டோம். எது நல்ல இலவசத் திட்டம்?, எது கெட்ட இலவசத் திட்டம்? என்று எப்படி வரையறுப்பீர்கள் என்று. அது குறித்த காணொலியை வேண்டுமானால் உங்களுக்கு அனுப்புகிறேன்.

இலவசங்கள் குறித்து ஆழமான பகுப்பாய்வை மேற்கொண்டேன். அது இலவச உணவு, இலவச லேப்டாப் போன்ற திட்டங்கள் முதல் என்னைப் பொறுத்தவரை வீண் செலவு என்று கருதப்பட்ட பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 50% தள்ளுபடி என்ற பெயரில் 25 ஆயிரம் ரூவாய் வழங்குவது வரை அனைத்தையும் உள்ளடக்கியது.

இலவசங்கள் குறித்து நுணுக்கமாக அனுக சில வழிகளும் உள்ளது. அது ஆக்கப்பூர்வமானது, மனித வளம் மீதான முதலீடு, பாதிப்புகளைத் தடுப்பது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நுணுக்கமான பயன்கள் இலவசங்களில் உள்ளன.

இதில் நான் ஆச்சரியப்பட்டது இரண்டு இடங்களில் தான்.

நிதி எப்படி கையாளப்படுகிறது என்பதைக் கண்காணிப்பவராக உச்சநீதிமன்றம் எப்படி செயல்படுகிறது? அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

நமது நாட்டில் மட்டுமில்லை எந்த ஒரு ஜனநாயகத்திலும் மக்களின் பணம் எப்படிச் செயல்படுகிறது என்பதை முடிவு செய்ய உச்ச நீதிமன்றத்துக்கும், எந்த நீதிமன்றத்துக்கும் அதிகாரம் இல்லை.

நிதியை கையாளுவதென்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றங்களுக்கு மட்டுமே உட்பட்டது. அதிபர் ஆட்சிமுறை கொண்ட அமெரிக்காவாகட்டும், பாராளுமன்ற ஆட்சி முறை கொண்ட இங்கிலாந்து ஆகட்டும், மாநிலங்களில் உள்ள சட்ட மன்றங்கள் எதுவாக இருந்தாலும் சரி.

எனவே என்னுடைய முதல் கேள்வி,

உச்ச நீதிமன்றம் ஏன் இந்த விவாதத்தில் தலையிடுகிறது?
PTR

இரண்டாவது கேள்வி, இலவசங்கள் அவ்வளவு தீய விஷயம் என்றால் பிரதமர் அவர்கள் எனது கருத்துப்படி, தமிழக வரலாற்றிலேயே மோசமான இலவசத் திட்டமான அதிமுக தொடங்கிவைத்த இருசக்கர வாகனங்களுக்கு 25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க ஏன் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார்?

அந்த திட்ட சுற்றுசூழல் பாதுகாப்புக்கு எதிரானது, பொது போக்குவரத்துக்கு எதிரானது, பல முறைகேடுகள் அதில் நடைபெற்றிருக்கிறது. எனது கருத்துப்படி அது மிக மோசமான திட்டம்.

பிரதமர் இலவசங்கள் வழங்கும் கலாச்சாரத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிப்பவராக இருந்தால் ஏன் அதனைத் தொடங்கிவைக்க வேண்டும்? ".

Supreme Court
Supreme CourtTwitter

நிதியமைச்சர் இந்த கேள்விகளை கேட்ட போது குறிக்கிட்ட நெறியாளர், "ஆனால் அரசியல் கட்சிகள் இலவச சேலைகள், இலவச மிக்சிகள், இலவச கிரைண்டர்கள் என வாக்குறுதிகளை அள்ளி இரைத்துவரும் சூழலில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என்றால், நான் உங்களை ஒன்று கேட்கிறேன் எது நல்ல இலவசத் திட்டம்? எது கெட்ட இலவசத் திட்டம் என்பதை யார் முடிவு செய்வது?

இங்கு முதன்மையான பிரச்னையாக இருப்பது மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது என்பதே!

உச்ச நீதிமன்றம் இதில் தலையிடக் கூடாது என்றால் யார் இதில் தலையிடுவது?

இப்படிப்பட்ட அனைத்து மாநிலக்கட்சிகளையும் நம்ப வேண்டும் என்றால் பஞ்சாப் குஜராத் போன்ற மாநிலங்கள் இன்று தனி குடியரசாக இருந்தால் இலங்கையை விட அபாயகரமான நிலைக்கு சென்றிருப்பார்கள். " என்று கேள்வி எழுப்பினார்.

நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த பிடிஆர், "என்னுடைய கருத்து என்னவென்றால் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஜனநாயகமும் அதைத் தான் வலியுறுத்துகிறது.

எல்லாத்தையும் விட மக்களின் வாக்கு தான் முதன்மையானது. அவர்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள்.

நீங்கள் தமிழ்நாடு அதிக இலவசங்களை வழங்குகிற மாநிலம் என்று கூறினால், நான் இரண்டு விஷயங்களை இங்கு குறிப்பிட வேண்டும்.

தனிநபர் வருமானம், மனித வள மேம்பாடு, சமூக மேம்பாடு, உயர்கல்வியில் சேருபவர்கள் எண்ணிக்கை, ஆயிரம் நபர்களுக்கு எத்தனை மருத்துவர்கள் இருக்கிறார்கள் போன்றவற்றில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.

மாநிலத்தை எப்படி நிர்வகிப்பது என்பதில் எங்களை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருந்தால் நீங்கள் சொல்லலாம், எங்கள் செயல்திறனில் என்ன தவறு உள்ளது என்று.

நான் சொல்கிறேன் எங்களது நிதிப்பற்றாக்குறை 3.5 விழுக்காடு. இது கடன் பெறும் வரம்பை விடக் குறைவாக உள்ளது. ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை 7 விழுக்காடு.

எங்கள் மாநிலத்தின் தனிநபர் வருவாய் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம். எங்கள் மாநிலத்தில் பணவீக்கம் தேசிய பணவீக்கத்தை விட 2.5 விழுக்காடு குறைவு.

நிலைமை இப்படியிருக்க யாரோ ஒருவர் நாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் என நீங்கள் கருதுவது எப்படி?

மக்கள் முடிவு செய்வார்கள் நாங்கள் சரியாக பணியாற்றுகிறோமா இல்லையா என, மற்றவர்களுக்கு இங்கு என்ன தேவை இருக்கிறது?

தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்றால் ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன?

யாரை நம்ப வேண்டும் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்ற கருத்தை யாரோ ஏன் உருவாக்க வேண்டும்? அதை மக்களே முடிவுசெய்யும் போது வேறு என்ன வேண்டும். " என்று ஆக்ரோஷமாக பதிலளித்து முடித்தார்.

இதன் பிறகு நெறியாளர் பாஜகவின் செய்தி தொடர்பாளரை பதிலளிக்க அழைப்பதாக கூறினார்.

அப்போது நெறியாளர் "இதுவரை இல்லாத அளவு பிரதமர் அவர்களே இலவசங்கள் வழங்கும் கலாச்சாரத்து எதிராக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். இங்கு பிரதமரும் பாஜகவும் கூறவருவது என்னவென்றால் நீங்கள் எதையாவது செய்ய விரும்பினால் பெருக்க விளைவை உருவாக்கக் கூடிய காரியங்களைச் செய்யுங்கள். அத்தகைய திட்டங்களில் தான் நாம் முதலீடு செய்ய வேண்டுமே தவிர மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும், மக்களுக்கு கட்டமைப்பு சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த அல்லது அறிவுத் திறன் சார்ந்த வசதிகளை உருவாக்காத, எதிர்காலத்துக்கு பயனளிக்காத திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது என்பதே.

இந்த சூழலில் அரசியலுக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள முக்கியமான வரையறையை பிரதமர் சுட்டிக்காட்டுகிறார்." என்றார்.

நெறியாளரின் கேள்விகளை தலைக்கு பின்னால் கைகளைக் கட்டியவாறு கேட்டுக்கொண்டிருந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வாட்சை காட்டியவாறு பேசத்தொடங்கினார், "நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் 7 மணி முதல் 7:30 வரை தான் நேரம் கொடுத்தேன். பேட்டி என்றுதான் நினைத்தேன் விவாதத்துக்கு அழைக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. நிலைமை மாறியபோதும் நான் ஒப்புக்கொண்டேன்.

நான் இங்கு ஒரு கருத்தை பதிவு செய்கிறேன்.

நீங்கள் கூறும் கருத்துக்கு ஏதாவது ஒரு அரசியலமைப்புச் சட்ட அடிப்படை இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நான் உங்களுக்கு செவி கொடுக்கலாம்.

அல்லது உங்களுக்கு பொருளாதார நிபுணத்துவம் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் இரண்டு முனைவர் பட்டங்கள், நோபல்பரிசு என நீங்கள் என்னை விட சிறந்தவர் என்பதை நிரூபிக்க எதாவது ஒன்று இருக்க வேண்டும்.

அல்லது உங்களிடம் சிறப்பான பொருளாதாரத்துக்கான மேம்பாடு இருக்க வேண்டும். நீங்கள் பொருளாதாரத்தை வளர்த்துள்ளீர்கள், கடனை குறைத்திருக்கிறீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்தியிருக்கிறீர்கள் அல்லது வேலை வாய்ப்பை உயர்த்தியிருக்கிறீர்கள் என எதாவது இருந்தால் நீங்கள் சொல்வதை கவனிக்கலாம்.

இது எதுவும் இல்லை எனில் நாங்கள் ஏன் ஒருவர் சொல்வதை இதுதான் சரியான வரையறை என்றும், கடவுளின் வார்த்தை என்றும் நம்ப வேண்டும்.

நான் கடவுள் நம்பிக்கை உடையவன் ஆனால் எந்த மனிதரையும் கடவுளாக நம்ப தயாராக இல்லை.

நான் ஏன் யாரோ ஒருவரின் கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் முறை நாங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கான உரிமையை அளித்திருக்கிறது. என் முதலமைச்சர் எனக்கு ஒரு பொறுப்பை அளித்திருக்கிறார் அதனை நான் சிறப்பாக செய்து வருகிறேன்.

நாங்கள் ஒன்றிய அரசை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகள் அவ்வாறே செயல்படுவோம் என்று உறுதியாக கூறுவேன்.

ஒன்றிய நிதி ஆதாரத்துக்கு நாங்கள் மிகப் பெரிய பங்காற்றி வருகிறோம். மிகப் பெரிய அளவு...

நாங்கள் ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் வழங்கினால் எங்களுக்கு 33 - 35 பைசா தான் திரும்ப கிடைக்கிறது. இதை விட நாங்கள் வேறென்ன செய்ய வேண்டும்?

நாங்கள் ஏன் நீங்கள் கூறுவதைக் கேட்க வேண்டும்? எதன் அடிப்படையில்?

அரசியலமைப்புச் சட்ட அடிப்படை உள்ளதா?

இல்லை

நீங்கள் நிதித்துறை நிபுணரா?

இல்லை

நீங்கள் நோபல் பரிசு பெற்றிருக்கிறீர்களா?

இல்லை

எங்களை விட சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்களா?

இல்லை

பிறகு எதன் அடிப்படையில் எங்கள் கொள்கைகளை உங்களுக்காக மாற்றிக்கொள்ள வேண்டும்? இது என்ன அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய சொர்கத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட கட்டளையா?

என்ன பேசுகிறீர்கள் நீங்கள்?" என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார். நிதியமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைத் தளங்களில் ட்ரெண்ட் ஆனது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com