இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு உரைக்கிறது.
அவ்வாறு மூழ்கியுள்ள அந்த கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்து உணர்த்தக் கடலுக்கு அடியில் நடக்கும் ஒரு தேடுதலே தொலைந்த நகரம் துவாரகா.
குஜராத் மாநிலத்தில் தற்போது இருக்கும் துவாரகா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
துவாரகா இந்தியாவில் உள்ள புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நகரின் மீது மதவியலாளர்கள் மட்டுமல்லாது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
மகாபாரத கதைப்படி கிருஷ்ணர் இறந்தவுடன் துவாரகா நகரம் கடலுக்குள் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
கோமதி ஆறு கடலை சந்திக்கும் இடத்திலிருந்து சுமார் 84 கிலோமீட்டர் தொலைவில் இந்த நகரம் இருந்ததாகக் கதைகளில் கூறப்படுகிறது.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் இந்த நகரம் உண்மையிலேயே இருந்தது என்பதை நிரூபிப்பதற்காகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துவாரகாவை பற்றிய ஆதாரத்தை திரட்டுவதற்காக கடலில் ஆராய்ச்சியை தொடங்க முடிவு செய்தனர்.
இவ்வாறு கடலுக்கு அடியில் அவர்கள் செய்த ஆராய்ச்சியில் அவர்களுக்கு பழங்கால கட்டிடங்களின் மிச்சங்களான சுவர்களும் செங்கற்களும் தூண்களும் கிடைத்தன.
ஆனால் இவை எந்த காலத்தை சேர்ந்தது என்பது இப்போது வரை சர்ச்சையில் உள்ளது.
இதன்பிறகு இந்த பழைய சுவர்களின் அடிமட்டத்தை தேட கடலுக்குள் இன்னும் ஆழமாக தேட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்தனர்.
இப்படி கடலுக்கு அடியில் செய்யவிருக்கும் துவாரகா தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைக்கும் ஆதாரங்கள் இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
1960களில் புனேவின் இருக்கும் டெக்கான் கல்லூரியில் இருந்து முதன்முறையாக தற்போது இருக்கும் துவாரகாவிலிருந்து கடலுக்கு அடிக்கு சென்று தேடலை தொடங்கினர்.
அதன் பிறகு 1979ல் சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் கடலுக்கு அடியில் ஆராய்ச்சி செய்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்களுக்கு கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் சில கிடைத்தன.
அதேபோல கடலுக்கு அடியில் நடத்தப்பட்ட அந்த ஆராய்ச்சியில் சில சுவர்களும் தூண்களும் கிடைத்தன. ஆனால் இவை எவையும் தற்போது இருக்கும் துவாரகா நகரில் உள்ள பொருள்களோடு ஒத்துப் போகவில்லை.
துவாரகாவில் தொல்பொருள் ஆராய்ச்சி முதன் முதலில் தொடங்கியது தற்போது உள்ள கோவிலில் தான்.
அங்கு கிடைத்த தடயத்தின் படி கடல் மட்டம் உயர உயர கோவில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் மிகப் பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான எஸ் ஆர் ராவுக்கும் பிற ஆராய்ச்சியாளர்களுக்கும் கடலுக்கு அடியில் ஆய்வு செய்யும் ஆர்வத்தை தூண்டியது.
கடலுக்கு அடியில் துவாரகாவை தேடும் ஆய்வு துவங்கிய போது பெரும்பாலும் மேற்கு பகுதியிலேயே தேடத் தொடங்கினர்.
புராணங்களிலும் இலக்கியங்களிலும் மேற்கு பகுதியிலேயே துவாரகா இருந்ததாக கூறப்பட்டிருந்தது.
முதலில் 400 சதுர அடிக்கு ஒரு பகுதியை தேட முடிவு செய்து அதில் ஆய்வை நடத்தினர்.
அதில் 50 அடியிலேயே தேவையான ஆதாரங்கள் கிடைத்தது. துவாரகாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தற்போது இருக்கும் துவாரகா நகரம் ஏழாவது வாழ்விடம் ஆகும்.
அதாவது மகாபாரத கதையில் குறிப்பிடப்பட்ட கிருஷ்ணர் உருவாக்கிய துவாரகா நகரம் கடலின் நடுவில் இருந்தது. அதுவே பழைய துவாரகா ஆகும். இது துவாரகா மக்களின் முதல் படுகையாக பார்க்கப்படுகிறது.
அந்த முதல் துவாரகா நகரம் கிமு 15 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கிமு பத்தாம் நூற்றாண்டில் இன்னும் சற்று தள்ளி இரண்டாவது படுகை அமைந்தது.
பிறகு கிமு ஒன்றாம் நூற்றாண்டில் மூன்றாவது படுகையும் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் நான்காவது படுகையும் அமைந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆறாம் படுகை கிபி 12ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இருக்கும் தகவலின்படி 3500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் பின்வாங்கி இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் மகாபாரத கதையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் காலமும் தற்போது கடலின் அடியில் கிடைக்கும் இந்த ஆதாரமும் துவாரகா என்ற நகரம் இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
இது மகாபாரதம் உண்மையில் நடந்திருக்கலாம் என்பதையும் உணர்த்துவதாக மதவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust