'இனி கடன் எல்லாம் கொடுக்க முடியாது' என எஸ்பிஐ வங்கியே டாடா குழுமத்தை கைவிட்ட காலம் ஒன்றுண்டு. அது முதலாம் உலகப் போருக்குப் பிறகான காலம்
முதலாம் உலகப் போரில் டாடாவின் இரும்பு ஆலை எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ, அதே வேகத்தில் 1918ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின், அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாத அளவுக்கு சூழல் மோசமானது.
தொழிலாளர்களுக்கு சம்பளம் போடக் கூட காசில்லாத அளவுக்கு சோதனை மேகம் சூழ்ந்தது. இன்று ஸ்டேட் பேங்க் ஆ ஃப் இந்தியா என்றழைக்கப்படும் வங்கிதான், 1920களில் இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா என்றழைக்கப்பட்டது. அவர்கள் தான் டாடா இரும்பு ஆலையின் வங்கியாளராக இருந்தனர். டாடா இரும்பு ஆலையில் நிதி நிலை மோசமடைவதைப் பார்த்து, ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கடன் கொடுக்க முடியாதென கை விரித்தனர்.
போர் காரணமாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, வங்கி கடன் வட்டி விகிதங்கள் அதிகரிப்பால் புதிய தொழில்கள் தொடங்க முடியாமல் போனது, வேலையில்லா திண்டாட்டம் என எல்லா பிரச்சனையும் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கின. சுருக்கமாக டாடா இரும்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சரக்கை வாங்க ஆளில்லை.
போர் காலத்தில் டாடா இரும்பு ஆலையின் கதவைத் தட்டி இரும்பை வாங்கிச் சென்ற பிரிட்டன், இப்போது இந்தியாவை சந்தையாகப் பார்த்தது. பிரிட்டனிலிருந்து இரும்பை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்கத் தொடங்கியது. இது போக டாடா இரும்பு ஆலையிn தொழிலாளர்கள் யூனியன் சார்ந்த பிரச்சனைகள் வேறு தலை தூக்கின.
1924ஆம் ஆண்டு வாக்கில் ஒரு சில குழுவினர், இரும்பு ஆலையை விற்றுவிடலாம் என்றனர். ஆனால் தொராப்ஜி டாடா சம்மதிக்கவில்லை.
பிரச்சனைகளிலிருந்து விடுபட விரும்பாமல், அதை எதிர்கொண்டு தீர்க்க விரும்பினார். தொராப்ஜி டாடா ஒவ்வொறு பிரச்சனைக்கும் தனித்தனி தீர்வுகளைக் கண்டார். ஆனால் ஒட்டுமொத்தத்தில் ஆலையை நடத்தியே தீர வேண்டும் என்பதில் டாடா குழுமம் தீர்மானமாக இருந்தது.
முதலில் அன்றாட நிதிச் சிக்கலை சமாளிக்க, தன் சொத்தை விற்று, தன் மனைவி மெஹர்பாயின் நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாயைத் திரட்டினார். பிறகு குவாலியரின் திவான் எஃப்.இ.தின்ஷாவிடமிருந்து ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி நிதி நிலையை ஓரளவுக்கு சரி செய்து, தொழிலாளர்களுக்கு சம்பளம் ஒழுங்காகச் சென்று சேர்வதை உறுதி செய்தார்.
அடுத்து, பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வரும் இரும்பைத் தடுக்க, அவரது உறவினர் ஆர்.டி டாடா மூலம் ஜவஹர்லால் நேரு மற்றும் மொஹம்மத் அலி ஜின்னாவைத் தொடர்பு கொண்டு, பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் இரும்பின் மீது கூடுதல் வரி விதிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்தார். அதிர்ஷ்டவசமாக, டாடாவின் இந்த கணக்கும் பலித்தது. அது டாடா மீண்டும் இரும்பு வணிகத்தில் பிழைக்க வழிவகுத்தது.
1920களிலேயே டாடா இரும்பு ஆலையில் சுமார் 55,000 பேர் வேலை பார்த்தனர். அதில் கிட்டத்தட்ட 23,000 பேர் சுரங்கப் பணியாளர்கள். இயல்பாகவே இத்தனை அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருக்கும் போது யூனியன் கோரிக்கை எழுவது சகஜம்தான். 1920ஆம் ஆண்டில் டாடா இரும்பு ஆலையில் தொழிலாளர்களுக்கான யூனியன் அமைக்கப்பட்டது. அதன் முதல் செயலாளராக மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்குரியவரான சி எஃப் ஆண்ட்ரூவ்ஸ் பொறுப்பேற்றார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கூட டாடா இரும்பு ஆலையின் தொழிற்சங்கத்தில் ஆர்வம் காட்டினார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திரப் பிரசாத், தன் சொந்த மாநிலமான பீகாரில் நடக்கும் ஆலை பிரச்சனை என்பதால் (அன்று ஜாம்செட்பூர் பீகாரோடு தான் இருந்தது) அவரும் ஆர்வம் காட்டினார். 1924ஆம் ஆண்டு மகாத்மா காந்தியே நேரடியாக டாடாவின் இரும்பு ஆலைக்கு வந்து பார்வையிட்டார்.
ஒருவாரு ஆலையில் பிரச்சனைகள் எல்லாம் அடங்க, பங்குதாரர்கள் தங்களுக்கு 12 ஆண்டுகளாக எந்தவித ஈவுத் தொகையும் வழங்கப்படவில்லை என்று முறையிட்டனர், கோபத்தில் கொந்தளித்தனர். ஆலை வளரும் நிலையில் இருப்பதால், இப்போதைக்கு தொடர் முதலீடுகள் தேவை, வரும் லாபங்கள் கூட ஆலையிலேயே மறு முதலீடு செய்யவிருப்பதாக முதலீட்டாளர்களை சமாதானப்படுத்தினார் தொராப்ஜி டாடா.
சொன்னது போல அடுத்த 1925 ஆம் ஆண்டு 65 லட்சம் ரூபாயை லாபமாக ஈட்டியது டாடா இரும்பு ஆலை. மொத்த பணத்தையும் மீண்டும் ஆலையிலேயே முதலீடு செய்தார் தொராப்ஜி.
தந்தைக்கேற்ற தமையனாக, தந்தையின் கனவுத் திட்டங்களான ஐ.ஐ.எஸ் சி ஆகட்டும், இரும்பு ஆலையாகட்டும், ஹைட்ரோ மின் திட்டம், அவர் தொடங்கி வைத்த நிறுவனங்களை வளர்த்தெடுப்பது என்றே தொராப்ஜியின் காலம் கடந்துவிட்டது.
38 வயதில் மெஹெர் பாயைத் திருமணம் செய்து கொண்ட தொராப்ஜி டாடாவுக்கு சொந்தக் குழந்தைகள் என யாரும் கிடையாது. அதனாலோ என்னவோ, தன் சொத்து பத்துக்கள் அனைத்தையும் டிரஸ்டுகளுக்கு மாற்றிவிட்டார். 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாணிக்கக் கல்லைக் கூட டிரஸ்டுக்கு எழுதி வைத்துவிட்டார். இப்படி தன் சொத்துக்களை எல்லாம் டிரஸ்டுக்கு தானமளித்த நபர் தான் இன்றும் டாடா சாம்ராஜ்ஜியத்தின் தலைமையகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாம்பே ஹவுஸ் கட்டடத்தைக் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மனைவியின் இறந்த தினத்தில் அவரது கல்லறைக்குச் சென்று வழிபட விரும்பிய சர் தொராப்ஜி டாடா, 1932ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். அவரைத் தொடர்ந்து நவ்ரோஜி சக்லத்வாலா, டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இவர் ஜாம்செட்ஜி டாடாவின் சகோதரி வீர்பாயின் மகன். டாடா குடும்பத்தின் நேரடி வாரிசல்லாத டாடா குழுமத்தின் முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் நிறுவனம் இவர் காலத்தில் தான் நிறுவப்பட்டது. அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த டாடா குழுமத்தை நிர்வகிக்க, நவ்ரோஜியின் அறைக்கு அருகிலேயே ஓர் இளைஞர் அனைத்து கோப்புகளையும் வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாபெரும் டாடா சாம்ராஜ்ஜியத்தை அந்த இளம் தோலில் ஏந்திக் கொண்டார். அவர் பெயர் ஜெஹாங்கீர் ரத்தன் ஜி தாதாபாய் டாடா. சுருக்கமாக ஜே.ஆர்.டி டாடா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust