சூடானில் கடந்த 2019-ம் ஆண்டு சர்வாதிகார அதிபர் ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் திரண்டனர். இதனால் ராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கூட்டாச்சியை நிறுவினர். அதன் பிரதமராக அப்தல்லா ஹம்டோக் பதவி வகித்தார்.
இந்நிலையில் கடந்த அக்டோபரில் நாட்டின் அரசியல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்த அப்தல்லா ஹம்டோக் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் நவம்பரில் மீண்டும் இராணுவத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பிரதமானார். ஆனாலும் அதிகாரப் பரவல் உள்ளிட்டவற்றில் சரியான போக்கு இல்லாததால் தற்போது மீண்டும் பிரதமர் பதவியை துறப்பதாக அப்தல்லா ஹம்டோக் அறிவித்திருக்கிறார்.
இதனால், மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் நிலை வந்துள்ளது. மக்கள் ராணுவத்துக்கு எதிராக வீதிகளில் “power for people” என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில் இருவர் பலியாகியிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
உத்திர பிரதேசம் மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, “உத்திர பிரதேசத்தில் முந்தைய ஆட்சிக்காலங்களில் மாபியாக்கள், குற்றவாளிகள்தான் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நில அபகரிப்பில் ஈடுபட்டனர்” எனப் பேசினார்.
தொடர்ந்து விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் பங்கேற்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், நம் இளைஞர்கள் விளையாட்டைப் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் தொழிலாகவும் மேற்கொள்ள வேண்டும்” என்றும் முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர அஞ்சுவார்கள் ஆனால் இப்போது நட்சத்திரங்களைப் போல மின்னுகிறார்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.
மேஜர் தியான் சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகம் 700 கோடி ரூபாய் செலவில் உருவாவதாக அவர் கூறினார்.
சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பர் லண்டனில் வங்கி ஊழியராக பணியாற்றியவர். கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்குக் குடியேறி ஒரு தனியார் வங்கியில் பணியாற்றியிருக்கிறார். அவரது மனைவியும் வங்கியில் பணியாளர்.
மணிகண்டன் பெட்ரோல் நிலையம் ஆரம்பிப்பதாக் கூறி நண்பர்களிடம் 75லட்சம் பணம் பெற்றிருக்கிறார். ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டு மற்றும் ஷேர் மார்கெட்டில் அந்த பணத்தைச் செலவு செய்து இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டு அழுத்தம் கொடுக்க மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் இரண்டு மாதமாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையில் தொடர்ந்து சண்டை நடைபெற்றுள்ளது.
நேற்று மதியம் மணிகண்டன் வீடு பூட்டியிருந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிலிருந்தவர்களை அழைத்துப் பார்த்துள்ளனர். பதில் இல்லாததால் சந்தேகப்பட்டுக் காவல் நிலையத்துக்கு அழைத்திருக்கின்றனர். அப்போது மணிகண்டன், அவரது மனைவி மற்றும் இரு மகன்களும் இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் உலகநாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கிவீட்டதால், இரண்டாவது அலையில் வலிமையான ஆயுதமாகச் செயல்படுத்தப்பட்ட தடுப்பூசிப் போடும் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது அரசு.
அதன் பகுதியாக, 15 வயது முதல் 18 வயதிலான சிறாருக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசு 1.9 பில்லியின் டாலர்கள் கடனுதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
முதற்கட்டமாக அந்நிய செலாவணி பரிமாற்ற அடிப்படையில் 400 மில்லியன் டாலர்களும், கடனுதவி அடிப்படையில் 500 மில்லியன் டாலர்களும் இந்த மாதம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த நிதி எரிபொருள் கொள்முதல், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கொள்முதலுக்குப் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இலங்கை அரசு ஏற்கெனவே சீனாவிடம் அதிக கடன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 10-ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருகை தர உள்ளார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.