தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். சமீபத்தில் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நீட் விவகாரத்தைக் குடியரசுத் தலைவரின் பார்வைக்குக் கொண்டு செல்லாததே அதற்குக் காரணம் என சட்டமன்றத்தில் பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் கவர்னர் ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்திக்க முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதற்கு மத்தியில் கேரள ஆளுநராக எச்.ராஜா ஆகிறார் என்ற தகவல் அதிகார மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான தேசியக்கொள்கை, போதுமான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்குத் தொழில் பயிற்சியை அங்கீகரிக்கிறது எனத் தெரிகிறது. இதன் மூலம், நாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழில் பயிற்சி விழா நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியைப் பயிற்சி இயக்குநரகத்துடன் இணைந்து திறன் இந்தியா நடத்துகிறது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வெல்டர், எலெக்ட்ரீசியன், அழகுக்கலை நிபுணர், பராமரிப்பு பணியாளர், மெக்கானிக் போன்ற 500-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை தகுதிக்கேற்றபடி வாய்ப்புகள் வழங்கப்படும் என திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, எனப் பலவற்றின் விலையும் உச்சத்தை அடைந்திருக்கிறது. மக்களால் அவற்றை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டிருக்கிறது. இதையொட்டி தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிய கொரோனா பாதிப்புகளைக் கண்காணிக்கவும், தொற்று பரவுவதைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்துவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதியவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களைக் கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் போன்றவற்றைத் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com