முலாயாம் சிங் யாதவ்: ஒரு சகாப்தத்தின் மறைவு - யார் இவர்? வியக்க வைக்கும் வரலாறு

முலாயாம் சிங் யாதவின் மறைவை ஒட்டி, மாநில அளவில் மூன்று நாள் துக்கம் அணுசரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
முலாயாம் சிங் யாதவ்
முலாயாம் சிங் யாதவ்NewsSensetn
Published on

தென்னிந்தியாவில் வாழும் பல மக்களுக்கு, தங்கள் பகுதியில் இருந்து அதிக எண்ணிக்கையில் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்கிற ஆதங்கம் இருப்பதை உணர முடியும்.

அதற்கு நேர்மாறாக உத்தரப் பிரதேசம் இதுவரை இந்தியாவுக்கு அதிகப்படியாக எண்ணிக்கையில் பிரதமர்களை வழங்கியுள்ளது என்கிற பெருமிதத்தோடு இருப்பதைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு இந்தியாவின் ஒன்றிய மைய அரசியலில் உத்தரப் பிரதேசத்துக்கு முக்கியப் பங்குண்டு.

மக்கள் தொகை எண்ணிக்கை, இந்துத்வா கொள்கை, ராமர் கோயில், பாபர் மசூதி இடிப்பு, ஓ பி சி இட ஒதுக்கீடு... என இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் உத்தரப் பிரதேசம் எப்போதும் இந்திய ஒன்றிய அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அப்பேற்பட்ட மாநிலத்தை மூன்று முறை முதல்வராக இருந்து நிர்வகித்த பெருமை முலாயாம் சிங் யாதவைச் சேரும்.

காங்கிரஸின் கோட்டையாக இருந்த உத்தரப் பிரதேசத்தில், எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் எதிரணியில் இருந்து செயல்பட்டவர் முலாயாம் சிங்.

பல அரசியல்வாதிகள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே வட்டமடித்து, பதவி சுகத்தை அனுபவிப்பர். வெகுசிலர் மட்டுமே துணிந்து தனக்கென ஒரு சொந்த கட்சியைத் தொடங்குவர். அதில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே ஆட்சிக் கட்டலில் அமர்வர். அப்படி துணிச்சலான ஒரு சில வட இந்திய அரசியல்வாதிகளில் முலாயாம் சிங் யாதவ்வுக்கு நிச்சயம் ஓர் இடமுண்டு.

அப்பேற்பட்ட அரசியல் தலைவர் தன் 83ஆவது வயதில் உடல்நலக் குறைவால் குருகிராம் பகுதியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இன்று இயற்கை எய்தினார்.

நரேந்திர மோதி அஞ்சலி:

"முலாயாம் சிங் யாதவின் மரணம் எனக்கு தாங்கமுடியாத வேதனையைத் தருகிறது. அவர் ஒரு குறிப்பிடத்தக்க நபர். அவரை பலரும் முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர். மிகவும் பணிவான, எளிதில் அணுகக் கூடியத் தலைவர் அவர்" என இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோதி புகழ்ந்துள்ளார்.

முலாயாம் சிங் யாதவின் மறைவை ஒட்டி, மாநில அளவில் மூன்று நாள் துக்கம் அணுசரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

யார் இவர்?

1939 நவம்பர் 22ஆம் தேதி இன்று உத்தரப் பிரதேசம் என்றழைக்கப்படும் மாநிலத்தில் இடாவா மாவட்டத்தில் சஃபாய் என்கிற கிராமத்தில் பிறந்த முலாயாம் சிங் யாதவ், அந்த காலத்திலேயே மெத்தப் படித்தவர். முதுகலை அரசியல் அறிவியல், பி எட் பட்டம் பெற்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளக் கட்டுரை ஒன்று சொல்கிறது.

அரசியல் அறிவியல் படித்ததாலோ என்னவோ, இளம் வயதிலேயே உத்தரப் பிரதேச அரசியலில் முலாயாம் சிங்குக்கு ஆர்வத் தீ பிடித்தது. சோசியலிஸ்ட் கட்சித் தலைவர் ராம் மனோஹர் லோஹியா இந்திரா காந்தி தேர்தலில் வென்றது செல்லாதென நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு பெற்ற ராஜ் நாராயண் நினைவிருக்கிறதா? அவர்கள் எல்லாம் முலாயாம் சிங்கின் அரசியல் குருமார்கள்.

தொடக்கத்திலேயே சோசியலிஷத்தைக் கையில் எடுத்ததாலோ என்னவோ பிற்காலத்தில் தனக்கென ஒரு கட்சியைத் தொடங்கிய போது சோசியலிஷத்தை அதன் கொள்கைகளாகப் பொறித்தார்.

ஒரு தேர்தலுக்கு ஒரு கட்சி

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 1960ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை எந்த ஒரு முதல்வராலும் ஐந்து ஆண்டு ஆட்சியை முழுமை செய்ய முடியவில்லை.

இந்த டிரெண்டை மாயாவதி தான் 13 மே 2007 முதல் 15 மார்ச் 2012 வரை (4 ஆண்டு 10 மாதங்கள்) ஆட்சி செய்து உடைத்தார் என்றால் அம்மாநிலத்தின் அரசியல் நிலையற்றதன்மையை உணர்ந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட சூழலில்தான் முலாயாம் சிங் யாதவ் அரசியலில் குதித்தார்.

1967ஆம் ஆண்டிலேயே சம்யுக்த சோசியலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஜஸ்வந்த் நகரில் நின்று எம் எல் ஏ ஆனார் முலாயாம் சிங். 1974 - 77-ல் அதே ஜஸ்வந்த் நகரில் பாரதிய கிராந்தி தள் கட்சி வேட்பாளராக நின்று வென்றார். இந்த காலகட்டத்தில் மிசாவில் சிறை சென்ற தலைவர்களில் முலாயம் சிங்கும் ஒருவர்.

முலாயாம் சிங் யாதவ்
UAE : ஐக்கிய அரபு அமீரக அதிபர் மரணம் - 40 நாட்கள் இரங்கல் கடைபிடிக்க முடிவு

1977 - 80 காலத்தில் பாரதிய லோக் தள் கட்சி வேட்பாளராக அதே தொகுதியில் நின்று எம் எல் ஏ ஆனார். 1985 - 89 தேர்தலில் லோக் தள் கட்சி வேட்பாளராக நின்று ஜஸ்வந்த் நகரில் எம் எல் ஏ ஆனார்.

1989 - 91 காலத்தில் ஜனதா தள் கட்சி வேட்பாளராக ஜஸ்வந்த் நகரில் நின்று எம் எல் ஆ ஆனார். அதோடு முதல் முறையாக உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகவும் பதவி ஏற்றார்.

1991 - 93 காலத்தில் ஜனதா கட்சி வேட்பாளராக நின்று எம் எல் ஏ ஆனார். 1993ஆம் ஆண்டுக்குள்ளேயே, உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் அமைச்சர், எதிர்கட்சித் தலைவர், முதல்வர், இந்திய ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர்... என அனைத்து முக்கிய அரசியல் பதவிகளையும் அனுபவித்திருந்தார்.

இப்படி தன் 54 வயது வரை பல கட்சிகளில் இருந்த மனிதர் இனி தனக்கென ஒரு கட்சியைத் தொடங்கினாதால் சரிபட்டு வருமென சமாஜ்வாதி கட்சியை1992 அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கினார். பகுஜன் சமாஜ் கட்சி 1984ஆம் ஆண்டிலேயே தோற்றுவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதிய சகாப்தம்:

தமிழகத்தில் திமுக, அதிமுக என்கிற இருபட்சங்கள் எப்படி இன்று வரை முக்கிய அரசியல் சக்திகளாக இருக்கிறதோ, அப்படி உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி என்கிற இரு துருவங்கள் வலுவாக செயல்பட வழிவகுத்தது.

உத்தரப் பிரதேசம் சமூக ரீதியாக, ஓ பி சி மக்கள் அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் சமாஜ்வாதி கட்சியும் அதற்குத் தகுந்தாற் போல தன் செயல்பாடுகளை கட்டமைத்தது.

தனக்குத் தேவை என்று வரும் போது யாரை பிடித்தாவது காரியத்தை சாதித்துக் கொள்வது ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அப்படி தன் கட்சிக்கும் தனக்கும் லாபம் கிடைக்கும் என்றால் கட்சி பாரபட்சமின்றி, பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் என அனைவரோடும் நட்பு பாராட்டிய புத்திசாலி முலாயாம் சிங் யாதவ்.

2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தன் மகன் அகிலேஷ் யாதவ்விடம் உத்தரப் பிரதேச அரசியலைக் கொடுத்துவிட்டு, நாடாளுமன்றத்தில் அதிகம் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

முலாயாம் சிங் யாதவ் அரசியலில் குதித்ததில் இருந்து இதுவரை 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அண்ணாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

முலாயாம் சிங் யாதவ்
Rakesh Jhunjhunwala: இந்தியாவின் வாரன் பஃபெட் என்றழைக்கபட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com