மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் அங்கு நிலவும் அதீத போக்குவரத்து பிரச்னையால்தான் ஏற்படுகிறது என அம்மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அமிர்தா ஃப்டனாவிஸ் தெரிவித்துள்ளார்.
இது அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் டெல்லி, நொய்டா, மும்பை போன்ற இடங்களில் ஏற்படும் அதீத போக்குவரத்து நெரிசல் நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து ஏற்படுகிறது என்று முன்னாள் முதல்வரின் மனைவி கூறுவது வெறும் அரசியல் காரணங்களுக்காகவா அல்லது நிலைமை அத்தனை மோசமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்று பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்ருதா ஃபட்னாவிஸ், “இதை நான் ஒரு சாதாரண குடிமகளாகச் சொல்கிறேன். வெளியே சென்றால் குண்டும் குழியுமான சாலை, போக்குவரத்து நெரிசல் போன்ற பல பிரச்னைகளை நான் பார்க்கிறேன். போக்குவரத்து நெரிசலால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை. மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் இதனால்தான் ஏற்படுகின்றன. மாநில அரசு தனது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்” என்றார்.
அதேபோல ஆளும் கட்சியையும் கடுமையாக சாடினார் அம்ருதா ஃபட்னாவிஸ்.
மும்பையில் தற்போது சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராகவுள்ளார்.
அம்ருதாவின் இந்த கூற்றுக்கு மும்பை மேயர் கிஷோரி பெட்னோகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் விவாகரத்து பல காரணங்களை கேட்டுள்ளேன். ஆனால் இந்த காரணம் மிக வித்தியாசமாக உள்ளது. இதை நான் முதல் முறையாக கேட்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல சிவ சேனாவை சேர்ந்த பிரியங்கா சத்ருவேதி, அம்ருதாவின் கருத்தில் எந்த லாஜிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அம்ருதாவின் கருத்து சமூக வலைத்தளங்களில் சிலர் கிண்டல் செய்ய தொடங்கினர். பிறகு அம்ருதா மும்பையின் போக்குவரத்து நெரிசலால் பலர் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பணியின் திறன் குறைகிறது. அதேபோல விவாகரத்து ஏற்படுகிறது என ஆய்வு ஒன்று தெரிவித்திருப்பதாக மேற்கொள்காட்டி தனது கூற்றுக்கு பலம் சேர்க்க முயற்சித்தார்.