கூடுதல் மானியம் வழங்குவது (supplementary demand of grants) தொடர்பாக இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் மஹுவா மொய்த்ரா, ப சிதம்பரம் உள்ளிட்ட பல தலைவர்களும் கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்கும், மற்ற அவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் விடை கொடுக்கும் விதத்தில், நேற்று (டிசம்பர் 21, புதன்கிழமை) இந்திய அரசின் நிதி & கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மணி நேரத்துக்கு மேல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியவற்றின் சுருக்கத்தை இங்கே கொடுத்திருக்கிறோம்.
இந்திய அரசு கூடுதல் மானியம் வழங்க நாடாளுமன்ற அவை உறுப்பினர்களும் அனுமதி கேட்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. பல நேரங்களில் இரண்டு முறையும் ஒரு முறை மூன்று முறையும் கூடுதல் மானியம் வழங்க கோரி இதே நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது.
அதுவும் கூடுதல் மானியம் வழங்கக் கோரும் தொகையானது, மதிப்பீட்டு பட்ஜெட்டில் (Budget Estimate) கூறப்பட்டிருந்த அளவில் 20% எல்லாம் கேட்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு சுட்டுதலுக்குரியது. இந்த முறை 2022 - 23 நிதி ஆண்டின் மதிப்பீட்டு பட்ஜெட்டில் வெறும் 8 சதவீதத்தை மட்டுமே இந்த அரசு கூடுதல் மானியமாக வழங்க கோரியுள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் நாமினல் ஜிடிபி 11.1 வளர்ச்சி காணலாம் என 2022 ஜனவரி மாதத்தில் கணிக்கப்பட்டது. சர்வதேச பன்னாட்டு நிதியம் (ஈ எம் எஃப்) கூட 2022 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் சுமார் 9% சதவீதம் வளர்ச்சி காணலாம் என தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது இங்கு நினைவு கூரத்தக்கது.
2022 பிப்ரவரி மாத காலத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் வெடித்ததன் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, பல நாட்டு பொருளாதாரங்களும் தடுமாற்றத்தை சந்தித்தன. இந்தியாவும் அதில் விதிவிலக்கல்ல.
இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது, விவசாயிகளுக்கு வழங்க போதுமான உரங்கள் இருக்க வேண்டும், ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு போதுமான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்கிற காரணத்திற்காக இந்த அவையிடம் கூடுதல் மானியம் வழங்க கோரியுள்ளோம்.
கூடுதல் மானியமாக 3.25 லட்சம் கோடி ரூபாயை இந்த அரசு கோரி இருக்கிறது. இந்த பணத்தை கடன் வழியாகத் திரட்டும் திட்டம் இல்லை.
2022 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில் தோராய வரி வருவாய் (Gross Tax Receipts) சுமார் 18 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டின் 7 மாத காலத்தோடு ஒப்பிட்ட தரவு.
1994 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் காலத்தில் 45 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 40 சதவீதமாக குறைக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைத்தார். அதோடு சர் சார்ஜ் வரியையும் நீக்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.
2000 ஆண்டு வாக்கில் மீண்டும் சர் சார்ஜ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 36 முதல் 38 சதவீதமாக இருந்தது.
2005 ஆம் ஆண்டு வாக்கில் அப்போது நிதியமைச்சராக இருந்த ப சிதம்பரம், மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதமாக குறைத்தார். சர் சார்ஜ் எல்லாம் சேர்த்து கார்பப்ரேட் நிறுவனங்களுக்கான வரி, சுமார் 33 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் நிதியமைச்சர் முதலீடு செய்யுமாறு பல்வேறு வணிக கூட்டமைப்புகள் & சங்கங்களில் கூறுவதாக முன்னாள் நிதியமைச்சர் கூறினார். ஆம், இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வணிக நிறுவனங்களிடம் நான் கூறினேன். அதைத் தொடர்ந்து மேற்கொள்வேன்.
உணவு அல்லாத துறைகளுக்கு கொடுக்கும் கடன்களின் அளவு 2022 ஏப்ரல் எட்டாம் தேதி முதல் இரட்டை இலக்கங்களில் வளர்ச்சி கண்டு வருகிறது. 2022 டிசம்பர் இரண்டாம் தேதி நிறைவடைந்த வார கணக்குப்படி உணவு அல்லாத துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களின் அளவு 17.9 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
என் பி ஏ (NPA) என்று அழைக்கப்படும் செயல்படாத சொத்துக்களின் அளவு கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது 2022 மார்ச் நிலவரப்படியான தகவல்.
1990 - 91 காலத்தில் 25 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் ஜிடிபி, அடுத்த 12 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் கோடியாக அதிகரித்தது என்றும், அடுத்த பத்தாண்டு காலத்தில் இது சுமார் 99 லட்சம் கோடியைத் தொட்டது என்றும் கூறினார் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம்.
2014 - 15 நிதி ஆண்டு முதல் 2019 - 20 நிதியாண்டு வரை இந்திய பொருளாதாரம் சராசரியாக 6.6 சதவீத வளர்ச்சியைக் கண்டு வந்தது. திடீரென 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் இந்திய பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சி கண்டு மீண்டெழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்தியா மட்டுமின்றி ஏறத்தாழ உலக நாடுகள் அனைத்தும் இப்பிரச்சனையை எதிர்கொண்டன.
இருப்பினும் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி இரட்டிப்பு ஆவதற்கு வெகு அருகிலேயே இருக்கிறது எனலாம். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பிற்கு வந்து தன்னுடைய பத்தாவது ஆண்டு நிறைவு செய்வதற்கு இன்னும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இருக்கிறது என்பதால் இந்த இலக்கு சாத்தியமே என்றும் அழுத்தமாகப் பதிவு செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
உலக அளவில் பல்வேறு நாடுகளும் ரெசசன் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் கொரோனா சூழ்நிலையைக் கையாண்ட விதத்திற்கும் இந்தியா கொரோனா பிரச்சனையை கையாண்டு விதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
கொரோனா காலத்தில் மக்கள் கையில் பணத்தைக் கொடுக்க வேண்டும், கடனை வாங்கியாவது செலவழிக்க வேண்டும், பணத்தை அச்சடித்தாவது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் கூறினார்.
அவர் கூறியதைப் போலவே பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்ட பல நாடுகள் தற்போது ரெசசன் பிரச்னையை எதிர் கொண்டு வருகின்றன.
ஆனால், யார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என கண்டுபிடித்து இலக்கு வைத்து அவர்களுக்கு உதவியது, அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு மேம்பட்டு வர உதவியது போன்ற நடவடிக்கைகளால் நம் நாடு இப்போது ரெசசன் பிரச்சனையை எதிர்கொள்ளவில்லை.
உலக வங்கி சர்வதேச பன்னாட்டு நிதியம் போன்ற உலகின் முன்னணி நிதி நிறுவனங்களே, உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று பல முறை குறிப்பிட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
2022 ஏப்ரல் காலகட்டத்தில் இக்ரா என்கிற ரேட்டிங் நிறுவனம் இந்தியாவில் உள்ள பல தொழில் துறைகள், ஆரோக்கியமான முதலீட்டு செலவினங்களை காட்டுவதாக குறிப்பிட்டு இருந்தது. எரிசக்தி, மின்சார உற்பத்தி, மின் பகிர்மானம், கச்சா எண்ணெய், எரிவாயு, பசுமை ஹைட்ரஜன்... போன்ற துறைகளை குறிப்பிட்டு இருந்தது.
இதுபோக டேட்டா சென்டர்கள், சிமென்ட், உலோகம், ஆட்டோமொபைல் பார்மசியூட்டிகல், ரசாயனம், ஜவுளி என பல துறைகளை குறிப்பிட்டு இருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
2022ஆம் ஆண்டின் மத்தியில், இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், சுமார் 12,000 கோடி ரூபாயை தங்களுடைய உற்பத்தியை பெருக்க மட்டுமே முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தது.
இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் முதலீட்டு செலவினங்கள் ஒவ்வொரு ஆண்டும் 35 சதவீதம் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு முந்தைய காலத்தோடு தனியார் முதலீட்டு செலவீனங்களை ஒப்பிட்டால் இது சுமார் 50 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் ”நான் கூறவில்லை” ஒரு தனியார் ஈக்விட்டி ஆராய்ச்சி நிறுவனம் தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
2022 டிசம்பர் காலத்தில் மகிந்திரா குழுமம் மகாராஷ்டிராவில் சுமார் 10,000 கோடி ரூபாயை மின்சார வாகனங்கள் தொடர்பாக முதலீடு செய்யவுள்ளதாகக் கூறியது.
இந்திய அரசின் பி எல் ஐ திட்டம் மூலம் இந்தியாவில் 14 தொழில் துறைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2022- 23 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தனியார் நுகர்வுச் செலவீனங்கள் 58.4 சதவீதமாக இருக்கிறது. இது 2013 - 14 நிதியாண்டு முதல், எல்லா இரண்டாவது காலண்டை விடவும் பதிவான உச்சம்.
அதேபோல 2022 - 23 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இந்தியாவின் ஜிடிபியில் 23 சதவீதமாக இருக்கிறது. இதுவும் 2015 - 16 நிதியாண்டில் இருந்து இரண்டாவது காலாண்டில் பதிவான மிகப்பெரிய வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய பணப் பயன்பாட்டு சான்றிதழை (Utilization Certificate) இந்திய அரசிடம் சமர்ப்பித்த உடனேயே இந்திய அரசு, உடனடியாக மாநிலங்களுக்கான பணத்தைக் கொடுத்து விடுகிறது.
ஒருவேளை எந்த மாநில அரசாவது தங்களுக்குரிய யூடிலைசேஷன் சான்றிதழை கொடுக்கவில்லை எனில், இந்திய அரசால் எதுவும் செய்ய முடியாது. அது மாநில அரசுகளின் தவறு என்றும் குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.
இந்திய பொருளாதாரத்தில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 2022 செப்டம்பர் மாதத்தில், Net payroll addition 46 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அமைப்புசாரா துறையினர், அமைப்பு சார் துறைக்குள் வருவதையும் இது பிரதிபலிக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழி கருணாநிதி அவர்கள் எம் எஸ் எம் இ குறித்து சில கேள்விகளை எழுப்பினார். அவர்களுக்கு போதுமான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றெல்லாம் கூறினார்.
நேஷனல் கிரெடிட் கேரண்டி டிரஸ்டி கம்பெனி லிமிடெட் தரவுகள் படி, Emergency Credit Line Guarantee Scheme திட்டத்தின் கீழ் சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது. அதில் 13,964 கோடி ரூபாய் மட்டுமே செயல்படாத கடன்களாக இருக்கின்றன. இதை விகிதாச்சாரத்தில் கணக்கிட்டால் வெறும் 3.89 சதவீத கடன்கள் மட்டுமே செயல்படாத கடன்களாக இருக்கின்றன.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் விவசயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 11.3 கோடி விவசாயிகள் பலனடைந்து இருக்கிறார்கள். விவசாயிகளின் விளைச்சல் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, உற்பத்தி விலையில் இருந்து 1.5 மடங்கு அதிகமாக வைக்கப்பட்டிருக்கிறது என பல உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தரவுகளோடு விடையளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust