பீகார்: 60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள் - ஓர் ஆச்சர்ய திருட்டு

"பல வருடங்களாக பாலத்தில் பயன்படுத்தப்பட்ட மரங்கள் அனைத்தும் சிதைந்து போய் விட்டது. இரும்பும் துருப்பிடித்து விட்டது. திருடர்கள் உலோகத் துகள்களைத் திருடி சில்லறை ரூபாய்களுக்காக விற்பார்கள். ஆனால் கடந்த வாரம் நடந்தது என்னவோ பகல் கொள்ளை"
60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள்
60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள்NewsSense

வடிவேலுவின் கிணற்றைக் காணோம் காமடியை பார்த்திருப்பீர்கள். அதை தோற்கடித்திருக்கிறார்கள் சில பீகார் திருடர்கள்.

ஒரு பாலத்தை திருடுவது எப்படி?

பீகார் மாநிலத்தின் சசரம் நகருக்கு அருகிலுள்ள அமியாவர் கிராமத்திற்கு நான்கைந்து பேர் வந்தார்கள். அவர்களில் மாநில அரசின் நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றுபவர்களும் உண்டு. அவர்களிடத்தில் மண்ணைத் தோண்டும் ஜேசிபி எந்திரங்களும், இரும்பை துண்டிக்கும் கேஸ் கட்டர்களும் இருந்தன.

தமது கிராமத்தில் உள்ள பயன்படாத பாலத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பதாக கிராமவாசிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மூன்று நாட்களுக்கு அந்த ஆண்கள் சரியாக காலை 7 மணிக்கு வந்து அந்தி சாயும் வரை வேலை செய்தார்கள். பாலத்தின் மர மற்றும் இரும்பு பொருட்களை உடைத்து, துண்டித்து பின்னர் அதை ஒரு வாடகை சிறு லாரியில் ஏற்றினார்கள். அதை உள்ளூர் பழைய இரும்பு வாங்கும் வியாபாரியின் கிடங்கில் கொட்டினார்கள்.

உண்மையில் இது ஒரு பாழடைந்த பாலத்தை அகற்றும் பணி இல்லை. பக்காவான ஒரு திருட்டு.

“இது ஒரு திருட்டு என்று யாரும் சந்தேகப்படவில்லை" என்கிறார் இந்த பாலத்தின் அருகில் வசிக்கும் உள்ளூர் பத்திரிகையாளர் ஜிதேந்திர சிங்.

தான் தினமும் காலை நடைப் பயிற்சிக்கு செல்வதாகவும், பாலத்தை அகற்றும் பணியை தான் மட்டுமல்ல கிராமத்தில் உள்ள அனைவரும் பார்த்தார்கள் என அவர் மேலும் கூறினார்.

பகுதி நேர நீர்ப்பாசனத் துறை ஊழியரான அரவிந்த் குமார் என்பவர் இந்த இடிப்பு பணியை மேற்பார்வையிட்டிருக்கிறார். அவரிடம் யார் கேட்டாலும் "இந்தப் பணிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி உள்ளது" என்று வாயை அடைத்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட எட்டு பேரில் அவரும் ஒருவர் என்று விசாரணைக்கு தலைமை தாங்கும் மூத்த போலீஸ் அதிகாரி ஆஷிஷ் பார்தி தெரிவித்தார்.

"நீர்ப்பாசனத் துறை அதிகாரி ராதே ஷியாம் சிங், வேன் உரிமையாளர் மற்றும் பழைய இரும்பு வியாபாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். மேலும் நான்கு பேரையாவது தேடி வருகிறோம்," என்று திரு பார்தி கூறினார்.

60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள்
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை
NewsSense

இடிந்து விழுந்து கொண்டிருந்த பாலம்

சுமார் 60 அடி நீளமும் 12 அடி உயரமும் கொண்ட ஆரா கால்வாயில் இந்த இரும்புப் பாலம் 1976 இல் கட்டப்பட்டது. மற்றும் 2000 ம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து அருகில் ஒரு கான்கிரீட் பாலம் கட்டப்பட்ட பின்னர் இந்தப் பழைய பாலம் பயன்பாட்டில் இல்லை.

இது மிகவும் மோசமான நிலையில் இருந்தது என கிராமவாசி சைலேந்திர சிங் கூறினார்.

"பல வருடங்களாக பாலத்தில் பயன்படுத்தப்பட்ட மரங்கள் அனைத்தும் சிதைந்து போய் விட்டது. இரும்பும் துருப்பிடித்து விட்டது. திருடர்கள் உலோகத் துகள்களைத் திருடி சில்லறை ரூபாய்களுக்காக விற்பார்கள். ஆனால் கடந்த வாரம் நடந்தது என்னவோ பகல் கொள்ளை" என்றார் அவர்.

இந்த திருட்டு சம்பவத்திற்கு முன்பு பாலம் சுகாதாரக் கேடாக மாறியதால் அதை அகற்றுமாறு கிராம தலைவர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமான மனு அனுப்பியதாக பத்திரிகையாளர் ஜிதேந்திர சிங் கூறினார்.

பல சமயம் கால்வாயில் வெள்ளம் வரும்போது கால்நடை மற்றும் மனிதர்களின் உடல்கள் மிதந்து வந்து பாலத்தின் அடியில் சிக்கிக் கொள்வதைக் கண்டதாகவும், துர்நாற்றம் தாங்க முடியாது என்றும்அவர் மேலும் கூறினார்.

60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள்
5 மனைவிகள்; 1400 கோடி பணம்; சிறைத் தண்டனை - பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் கதை
NewsSense

திருடர்கள் பிடிபட்டது எப்படி?

இந்த பாலத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் பவன் குமார். பாலம் அகற்றப்பட்ட கடைசி நாளில் அவர் இது பற்றி கேள்விப்படுகிறார்.

உடனே அவர் இது குறித்து நீர்ப்பாசனத்துறை ஊழியரான ராதே ஷியாம் சிங்கிற்கு தொலைபேசி மூலம் அழைத்தார். அவர் பதிலளிக்கவில்லை என்பதால் மூத்த அதிகாரியிடம் கேட்டார். ஏன் இந்தப் பாலம் முறையாக அகற்றுவதற்கு டென்டர் விட்டு பணி கொடுக்கப்படவில்லை என்று அவர் கேட்டார்.

அதற்கு அந்த அதிகாரி தான் பாலத்தை அகற்றுவதற்கு எந்த உத்திரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், பாலம் அகற்றப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

உடனே பவன் குமார் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்து விசாரணை துவங்கியது.

இதுவரை ஒரு ஜேசிபி எந்திரம், கேஸ் கட்டிங் மிஷின், சிலிண்டர், பிக்கப் வேன், மற்றும் 247 கிலோ இரும்பு பொருளை கைப்பற்றியிருப்பதாக போலீஸ் அதிகாரி பார்தி கூறினார்.

60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள்
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு!

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும்

இந்தியாவின் பல பகுதிகளில் திருடர்கள் வழக்கமாக தண்ணீர் குழாய்களைத் திருடி, சிறிய நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பவர்களுக்கு விற்கிறார்கள். பாதாளச் சாக்கடையின் இரும்பு மூடிகளை திருடுகிறார்கள். ரயில் பெட்டிகளின் கழிப்பறை குவளைகளைக் கூட விடுவதில்லை.

இதன் பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரயில்வே இத்திருட்டை தடுக்க உலோக குவளைகளை சங்கிலியால் கட்டி திருடமுடியாதபடி அமைத்திருக்கிறது. இப்படி ஒரு ரயில் கழிப்பறை உலகில் எங்கும் இருக்க முடியாது. நம் மக்களது வறுமையின் கோரத்தை இது காட்டுகிறது.

ஆனால் இந்த உலோகத் திருட்டுகள் இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் நடக்கிறது.

ரஷ்யாவின் மர்மன்ஸ்க் பிராந்தியத்தில் சில திருடர்கள் ஒரு உலோகப் பாலத்தை 2019 ஆம் ஆண்டில் அபகரித்திருக்கிறார்கள்.

பிரிட்டனில் மின்சாரம் மற்றும் சிக்னலிங் கேபிள்கள், தண்டவாளங்களில் பயன்படும் கிளிப்புகள் போன்றவை திருடப்படுவதால் ஆண்டுதோறும் ரயில்களின் பயணம் ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கான மணிநேரம் தாமதமாகிறது.

யூரோபோல் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் போலீசு என்று சொல்லலாம். அதன் கூற்றுப்படி உலோகத் திருட்டு என்பது உள்ளூர் வணிகங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஐரோப்பா முழுவதும் அத்திவசிய பொது சேவைகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது.

ஆக பாலங்களை பீகாரில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள பலே திருடர்கள் திருடுகிறார்கள். இனி ஏதாவது பாலத்தை காணோம் என்று வடிவேலு சொன்னால் அது காமடி இல்லை. நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com