Morning News Today : வரலாறு காணாத புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை - இதுதான் நிலவரம்

இன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்Twitter
Published on

வரலாறு காணாத புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை!

கடந்த 10 நாட்களில் 9-வது நாளாக நேற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 75 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 106 ரூ, 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி 106 ரூபாய் 66 காசுக்கும் விற்பனை செய்யப்பட்ட விலைதான் அதிகபட்ச விலையாக இருந்தது. தற்போது அதைக் கடந்திருக்கிறது. டீசல் விலை நேற்று லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 96 ரூபாய் 76 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

Stalin , Modi
Stalin , ModiTwitter

டெல்லி சென்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அண்ணா - கலைஞர் அறிவாலயம் எனப் பெயரிடப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது டெல்லி திமுக அலுவலகம். இதனை மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி திறந்துவைக்கிறார். இதற்காக டெல்லி சென்றுள்ள ஸ்டாலின். இன்று மதியம் 1 மணிக்குப் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அறையில் நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவித்தல், மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியை வழங்கவேண்டும், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை விவகாரம், மேகதாது அணை திட்டம் ரத்து செய்தல், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு மற்றும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்த இருக்கிறார். மேலும் ஏப்ரல் 2-ந்தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கிறார்.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபைTwitter

ஏப்ரல் 6 முதல் மே -10 வரை தமிழக சட்டசபை கூடுகிறது!

தமிழக சட்டசபையில் கடந்த 18-ம் தேதி பொது பட்ஜெட்டும், 19-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில், மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காகத் தமிழக சட்டசபை வருகிற ஏப்ரல் 6-ம் தேதி கூடுகிறது எனவும், இந்த கூட்டத்தொடர் மே 10-ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார். இந்த விவாதத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை சார்ந்த விவாதங்கள் நடைபெறும்.


Pan , Adhar
Pan , AdharTwitter

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் - பாண் எண் வழங்கப்படுகிறது. அதனுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தியிருக்கிறது. இதற்கான காலக்கெடுவை அவ்வப்போது நீட்டித்து வந்தது. இதற்கிடையே, கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்றுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதின்கட்கரி
நிதின்கட்கரி Twitter

ஹைட்ரஜன் காரில் பயணித்தது ஏன் - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி!

தண்ணீரிலிருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட்டு, அதை வாகன எரிபொருளாகப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. சோதனை அடிப்படையில், டயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் அதிநவீன மின்சார காரைத் தயாரித்திருக்கிறது.

‘டயோட்டா மிராய்’ என இந்த கார் அழைக்கப்படுகிறது. இந்தக் காரை சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின்கட்கரி அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், நேற்று நிதின்கட்கரி நாடாளுமன்றத்துக்கு அந்த டயோட்டா மிராய் காரில் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார். தூய்மையான எரிசக்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், அவர் இந்தக் காரில் பயணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

 மார்க் வந்தே ஹெய்
மார்க் வந்தே ஹெய்Twitter

விண்வெளியில் 355 நாட்கள் தங்கியிருந்து விண்வெளி வீரர் சாதனை!

கடந்த 2021, ஏப்ரல் 9-ம் தேதி நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காகப் பூமியிலிருந்து புறப்பட்டார். இதனிடையே இன்று காலை அவர் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் (355 நாட்கள்) தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி என்ற வீரர் விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது.

RCB vs KKR
RCB vs KKRTwitter

ஐ.பி.எல் போட்டிகள் நிலவரம்!

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com