அதிரடித் திருப்பமாக மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார், உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் இன்று, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னவிஸை, மும்பையில் உள்ள அவரது வீட்டில், ஏக்நாத் ஷிண்டே சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து, மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க, ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டனர். ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே, தங்களுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமைக் கோரினர்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக, இன்று இரவு 7:30 மணிக்கு, ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்பார். இதைத் தொடர்ந்து அமைச்சரவை பதவி ஏற்கும். பாஜக மற்றும் சிவசேனா எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவி ஏற்பார்கள். நான், அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன்.”என்று கூறினார்.
சரி உத்தவ் தாக்கரே வீழ்ந்த கதையை பார்ப்போம்.
உத்தவ் இந்தப் பதவிக்கு வந்ததே அதிரடியாகத்தான் இருந்தது; நீண்ட காலக் கூட்டாளியான பா.ஜ.க.வை விட்டுவிட்டு நீண்ட கால எதிரியான காங்கிரசுடன் கைகோர்த்து, கூட்டணி அரசாங்கத்தை நடத்திவந்தார். பிரச்னைகளைத் தாண்டி, பதவிக்காலத்தில் பாதிக்காலத்தை ஓட்டியபின்னரே அவர் பதவிவிலகியுள்ளார்.
மகாராஷ்டிரம் என்றால் சிவசேனா என்கிற அளவுக்கு தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறிப்போன கட்சி, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் திடீரென பிட்டுக்கொண்டது. சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும் என சிவசேனா மிகப் பெரும் பிளவைச் சந்தித்துள்ளது.
சரிபாதியாகப் பிரியும்போது, செங்குத்தான பிளவு என்பார்களே, இந்த முறை அதைவிட மிகவும் அதிகமாக குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் தலைமைக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு கட்சித் தலைமையின் மீது கடுமையான அதிருப்தி!
ஏக்நாத் ஷிண்டே என்னதான் உறுதிமொழி அளித்திருக்கட்டும், கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவே நேரில் வந்து பேசுங்கள் என்று அழைப்பு விடுத்தபோதும், அதிருப்தியாளர்கள் தரப்பில் யாரும் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
இதற்கு முன்னரும் இந்தக் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறியுள்ளனர். அப்போது அதனால் கட்சிக்கு சொல்லும்படியாக பிரச்னை எதுவும் இருந்ததில்லை. இந்த முறை அப்படி அல்ல.
சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே காலத்திலேயே, முக்கிய பிரமுகரான சகன் புஜ்பால் 1991ஆம் ஆண்டில் கட்சியைவிட்டு வெளியேறினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், பின்னர் தேசியவாத காங்கிரஸ் உருவானதை அடுத்து அதில் சேர்ந்து இன்றுவரை அதே கட்சியில் நீடித்துவருகிறார். உத்தவ் தாக்கரேயின் அமைச்சரவையிலும் இடம்பெற்று இருந்தவர், நேற்று நடைபெற்ற உத்தவ் அமைச்சரவையின் கடைசிக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். அவருடைய விலகலுக்குக் காரணம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி.
அவரையடுத்து, 1999இல் ஓராண்டுக்கும் குறைவாக முதலமைச்சராக இருந்த நாராயண் ரானே 2005ஆம் ஆண்டில் சிவசேனாவிலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். அங்கு முதலமைச்சர் பதவி தரப்படவில்லை எனக் கூறி, பா.ஜ.க.வில் சேர முயன்றார்.
2009-ல் சிவசேனா, பா.ஜ.க. அணியிலிருந்து விலகும்வரை அது நடக்கவில்லை. தனிக்கட்சி தொடங்கிய அவரை பா.ஜ.க.வில் சேர்த்தால், கூட்டணியை முறித்துவிடுவேன் என மிரட்டி வைத்திருந்தார், உத்தவ் தாக்கரே.
ரானேவின் கதை இப்படி என்றால், ராஜ் தாக்கரேயின் கதை வேறு. பால் தாக்கரேவுக்கு அடுத்து ராஜ்தான் என்று இருந்த நிலையில், அதே ஆண்டில் பெரியப்பாவிடமிருந்து பிரிந்தார், ராஜ் தாக்கரே. சிவசேனா கட்சியின் அதிகார மையமான குடும்பத்திலிருந்தே இப்படியொரு பிரிவை யாரும் எதிர்பார்க்கவில்லை.
அப்போது ராஜ் தாக்கரே, அவருடைய பெரியப்பா பால் தாக்கரேவைச் சுற்றியிருக்கும் உள்வட்டம் கட்சிக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது எனக் குற்றம்சாட்டினார். அந்த உள்வட்டம் உத்தவ் தாக்கரே இல்லாமல் இல்லை என்பது வெள்ளிடைமலை.
சகன் புஜ்பலைத் தவிர்த்து, இப்போதைய சூத்திரதாரியான ஏக்நாத் ஷிண்டே உள்பட மற்ற மூவரும் உத்தவ் தாக்கரே மீதான அதிருப்தியில்தான் விலகவேண்டிய நிலை ஏற்பட்டது.
மூன்று அதிருப்தி தலைவர்களும் உத்தவ் மீது முன்வைத்திருக்கும் சாட்டுகளில் பொதுவான சில அம்சங்கள் முக்கியமானவை.
அவர்களின் கருத்துப்படி, உத்தவ் தாக்கரே எளிதில் அணுகக்கூடிய நபராக இருப்பதில்லை; அதாவது இருந்ததும் இல்லை. அவரைச் சுற்றி ஓர் உள்வட்டம் இருக்கிறது; அதைத் தாண்டி அவர் யாரிடமும் இயல்பாகப் பேசுவதோ விசயங்களைக் கேட்டுக்கொள்வதோ இல்லை.
அந்த உள்வட்டத்தைக் கருதாமல் அவரை அணுக யார் முயன்றாலும் அவ்வளவு எளிதில் அவரின் தரிசனம் கிடைத்துவிடுவது இல்லை என்கிறபடி, மிகவும் இறுக்கமான வளையத்துக்கு உள்ளேயே உத்தவ் எப்போதும் தன்னை இருத்திவைக்கிறார்.
இப்படி தன்னுடைய கட்சியினர், ஆட்சியினர் குறிப்பாக அமைச்சர்களிடமிருந்து எப்போதும் தள்ளியே இருக்கும் ஒருவிதமான அந்நியமான அணுகுமுறையை அவர் நீண்டகாலமாகவே கடைப்பிடித்துவருகிறார்.
மேல்மட்டத் தலைவர்களுக்கே இதுதான் என்றால் மாநிலத்தின் கிராமப்புற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு இந்த அணுகுமுறையானது எரிச்சலையும் இடைவெளியையும் உண்டாக்கியது. என்னதான் சிவசேனா கட்சியின் மீது ஈடுபாடு இருந்தாலும் தலைமையின் இந்த அணுகுமுறை, மென்மேலும் ஆர்வத்தோடு செயல்படத் தூண்டுவதாக இல்லை. மாறாக, அதற்கு எதிரான மனநிலையையே உருவாக்கிவிட்டது.
மற்றவர்கள் விலகியபோதெல்லாம் தாக்கரே குடும்பத்து கோதாவை வைத்து சமாளித்த கட்சித் தலைமை, இந்த முறை அதில் வெற்றிபெற முடியவில்லை. ஏனென்றால் அப்படி சமாளிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள் அல்லது பணியாற்றியவர்களே இப்போது கலகக்குரல் எழுப்பியவர்கள்.
எப்படி நடந்துகொண்டாலும் வேர்மட்டத் தொண்டர்களிடம் எடுபட்டுவிடும் என்கிற காலம் மலையேறிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள, தாக்கரேக்களுக்கு மூன்றாவது தலைமுறை தலையெடுக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், அதற்கு விலையாக ஓர் ஆட்சியையே பறிகொடுக்க வேண்டியதாகிவிட்டதே எனப் பரிதவித்து நிற்கிறார்கள், அப்பாவி சிவசேனா தொண்டர்கள்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust