பொது சிவில் சட்ட மசோதாவை விரைந்து இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கு ஒரு குழுவை அமைத்து பொது சிவில் சட்டங்களை உருவாக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பாஜகவின் எம்.பி கிரோடி லால் மீனா முன்மொழிந்தார்.
இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த வைகோ, திருச்சி சிவா உட்பட பலரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் வைகோ அவர்கள் இது குறித்து தன் கருத்தை பதிவு செய்வார் என மாநிலங்களவைத் தலைவரும் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவருமான ஜகதீப் தன்கர், வைகோவுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தியா என்பது பல மதங்கள், பல நம்பிக்கைகள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல தேசிய இனங்களை உள்ளடக்கியது. இது வெறுமனே ஒரு பெரிய தேசிய இனத்தைக் கொண்டது அல்ல என்று தன் பேச்சைத் தொடங்கிய உடனேயே ஒட்டுமொத்த அவையிலும் பலத்த சலசலப்பு ஏற்பட்டது.
அதற்கு பதிலளிக்கு விதத்தில்... "இது என்னுடைய கருத்து... நான் என்னுடைய கருத்தை இந்த அவையில் எடுத்துரைக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது" என்று கூறினார் வைகோ.
தேசபக்தி என்பது உங்களுக்கு மட்டுமே உரித்தான, நீங்கள் மட்டுமே ஏகபோக உரிமை கொண்டாடக் கூடிய ஒரு விஷயம் அல்ல. உங்களிடம் எண்ணிக்கை அடிப்படையில் அசுரத்தனமான பெரும்பான்மை இருக்கலாம்... என பேசிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அவைத் தலைவர் என்கிற முறையில், அவையைக் கட்டுப்படுத்த முயன்றார் ஜகதீப் தன்கர்.
வைகோ அவர்கள் மட்டுமே எழுந்து நிற்பார், மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அமருமாறு கேட்டுக்கொள்கிறேன். வைகோ அவர்கள் இந்த முக்கிய பிரச்னை குறித்து தன் கருத்தை பதிவு செய்ய நேரம் வழங்கப்படும். அவர் என்ன சொல்கிறார் என்பதில் நாம் அனைவரும் கவனம் செலுத்துவோம். தயவு செய்து யாரும் இடைமறித்து பேசவோ உணர்ச்சிவசப்படவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவைத் தலைவர்.
வைகோ அவர்கள், என்ன கூற விரும்புகிறாரோ அதை முழுமையாக கூற அவருக்கு உரிமை இருக்கிறது. இந்த அவையில் உள்ள உறுப்பினர்கள் யாரும் அவர் பேசும்போது இடையூறு செய்யவோ குறுக்கிடவோ கூடாது.
மற்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்தை கூற வேண்டுமானால் அவரவர்களுக்கான நேரம் வரும் போது அதை வெளிப்படையாக கூற முழுமையாக அனுமதிக்கப்படுவீர்கள். வைகோ அவர்களே நீங்கள் உங்கள் உரையை தொடரலாம் என அவையைக் கட்டுப்படுத்தினார் ஜகதீப் தன்கர்.
வைகோ நன்றி கூறி மீண்டும் தன் உரையைத் தொடர்ந்தார்.
என் கருத்தை இந்த சபையில் முன்வைக்க அனுமதித்ததற்கு அவை தலைவர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தொடர்ந்தவர் பாஜகவை கடுமையாகச் சாடினார்.
அவர்கள் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இவர்கள் இப்போது பொது சிவில் சட்டத்திற்கு வந்திருக்கிறார்கள்.
இந்த நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது. நாம் எதை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.... நாம் இந்த நாட்டை அழிவை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம். இந்த நாட்டை பிரிவினை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.
மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்த மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வு மிக மோசமாக புண்பட்டுள்ளது.
இன்று இந்த அவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படவில்லை. கடந்த முறையும் இதே போல அறிமுகப்படுத்த முயன்றனர், ஆனால் பெரும்பான்மை கிடைக்காது என தெரிந்த பின் அவர்கள் அத்திட்டத்தை கைவிட்டனர்.
இந்த முறை அவர்களுக்கு இந்த அவையிலும் பெரும்பான்மை கிடைக்கும் என நம்பி பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் அதை திணிக்கிறார்கள். இது நம் நாட்டை பேரழிவிற்கும் அபாயத்திற்குமே இட்டுச் செல்லும்.
எனவே அவைத் தலைவர் அவர்களே, உங்களுக்கு நான் கூறியது திருப்திகரமாக இருந்தால் பொது சிவில் சட்ட மசோதா தொடர்பான தனிநபர் மசோதாவை இந்த அவையில் தாக்கல் செய்ய அனுமதிக்காதீர்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதுவே என் கருத்து என்று கூறினார்.
ஒருகட்டத்தில் வாக்கெடுப்புக்குச் சென்ற இந்த மசோதா, 63 உறுப்பினர்களின் ஆதரவோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது என இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust