ஆனந்த சுப்ரமணியன் : கோடிகளில் பங்கு சந்தை மோசடி, இமாலய குருவின் செல்லப்பிள்ளை- யார் இவர்?

இப்போது ஆனந்த் சுப்ரமணியன் வீட்டில் நெய்தோசை சாப்பிட்டுக் கொண்டு தன்னைக் குறித்து வரும் செய்திகளை படித்து விட்டு சிரித்துக் கொண்டு கடந்து போவார்.
சித்ரா ராமகிருஷ்ணன்

சித்ரா ராமகிருஷ்ணன்

NewsSense

Published on

தேசியப் பங்குச் சந்தையின் (NSE) முன்னாள் தலைமை நிர்வாகியும், மேலாண்மை இயக்குநருமான சித்ரா ராமகிருஷ்ணா ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். முறைகேடாக நபர்களை பதவியில் நியமித்தது, அலுலக இரகசிய தகவல்களை இமலாய சாமியாரிடம் பகிர்ந்து கொண்டது என இரு முக்கியக் குற்றச்சாட்டுகளை இவர் மீது இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று மையம் (SEBI) முன்வைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இவர் பதவியில் சேர்த்த முக்கியமான நபர் ஆனந்த் சுப்ரமணியன். அந்த இமயமலை சாமியார் இவர்கள் இருவருக்கும் மின்னஞ்சல் அனுப்பித்தான் தேசியப் பங்குச் சந்தையையே மூன்றாண்டுகள் இயக்கியிருக்கிறார். சித்ரா ராமகிருஷ்ணாவை தெரிந்த அளவுக்கு ஆனந்த சுப்ரமணியனை பலருக்கும் தெரியாது. அவரது தகவல்கள் டிஜிட்டல் உலகில் எங்கும் இல்லை. சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் என்எஸ்இ-யின் நிகழ்வு ஒன்றில் இவரும் மற்ற அலுவலர்களும் இருக்கும் புகைப்படம் ஒன்றுதான் இணையத்தில் காணக்கிடைக்கிறது. சுபரமணியனுக்கு சென்னையில் வீடு ஒன்று இருக்கிறது. அங்கே சிபிஐ இந்த முறைகேடு குறித்து சிலநாட்களுக்கு முன்பு விசாரித்திருக்கிறது.

<div class="paragraphs"><p>வட்டத்தில் இருப்பவர்&nbsp;ஆனந்த் சுப்ரமணியன்</p></div>

வட்டத்தில் இருப்பவர் ஆனந்த் சுப்ரமணியன்

NewsSense

வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா?

சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன், முந்தைய என்எஸ்இ தலைவரான ரவி நரேய்ன் மூன்று பேரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என சிபிஐ லுக்அவுட் நோட்டிஸ் கொடுத்திருக்கிறது.

ஏப்ரல் 1, 2013 அன்று சித்ரா ராமகிருஷ்ணா தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மேலாண்மை இயக்குநராகவும் பதவி ஏற்கிறார். உடனே அவர் ஆனந்த் சுப்ரமணியனை தலைமை மூல உத்தி அலுவராக பணியில் அமர்த்துகிறார். இந்த பணி நியமனம் என்எஸ்இ நிறுவனத்தின் மனித வளத்துறையால் நடத்தப்படவில்லை. சித்ராவே நேரடியாக பணி நியமனம் செய்கிறார். சுப்ரமணியன் பணி நியமனம் குறித்து தேசியப் பங்குச் சந்தையின் எந்த அலுவலக பதிவேடுகளிலும் இல்லை. மேலும் ஆனந்த் சுப்ரமணியனுக்கு மூலதனச்சந்தை, பங்குச் சந்தை குறித்து எந்த அனுபவமோ அறிவோ கிடையாது.

இதற்கு முன் அவர் பால்மர் அண்ட் லாவிரி எனும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமான ட்ரான்ஸ்சேஃப் சர்வீசஸ் நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார். இந்நிறுவனம் கன்டெயினர் போக்குவரத்தை நடத்தி வருகிறது. அங்கே அவருக்கு ஆண்டுச் சம்பளமே ரூபாய் 15 இலட்சம் மட்டுமே. மாதத்திற்கு ஒன்றே கால் இலட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரு சாதாரண லாஜிஸ்டிக்ஸ் ஊழியர்தான் ஆனந்த் சுப்ரமணியன்.

இவரது மனைவி தேசியப் பங்குச் சந்தையில் பணிபுரிவதாகவும் அவர் சித்ரா ராமகிருஷ்ணாவிற்கு தெரிந்தவர் என்று ஒரு செய்தி ஊடகங்களில் அடிபடுகிறது. பங்குச் சந்தையின் எந்த அனுபவமும் இல்லாத ஒருவரை எப்படி சித்ரா அலுவலக விதிமுறைகளை மீறி நியமித்தார் என்று கேட்டால் அதற்கு சித்ராவின் பதில் அவரை ஆலோசகரமாக மட்டும் நியமித்தேன், அதற்கு எனக்கு உரிமை உண்டு என்கிறார். அப்படி ஆலோசனை சொல்லுமளவுக்கு ஆனந்த் சுப்ரமணியத்திற்கு எந்த முதலீட்டுச் சந்தை அனுபவமும் இல்லை எனும் போது இவர் என்ன ஆலோசனை சொல்வார் என்பது ஒருகேள்வி!

<div class="paragraphs"><p>NSE</p></div>

NSE

NewsSense

நான்கு கோடி ஊதியம்

மேலும் 15 இலட்ச ரூபாய் ஆண்டு சம்பளம் வாங்கிய ஒரு அரசு ஊழியரை ஆலோசகர் என நியமித்துவிட்டு சித்ரா அவருக்கு ஒதுக்கிய ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 68 இலட்ச ரூபாய். அதாவது மாதம் 14 இலட்ச ரூபாய். இதற்கு முன் ஆண்டுச் சம்பளம் என்ன வாங்கினாரோ அது இப்போது மாதச் சம்பளம். இதை விட அயோக்கியத்தனம் என்னவென்றால் இருவருடத்தில் ஆனந்த் சுப்ரமணியத்தின் ஊதியம் ஆண்டுக்கு 4.21 கோடி ரூபாயாக சித்ரா உயர்த்தியிருக்கிறார். இதற்கு முன் வாரம் நான்கு நாள் வேலை பார்த்த சுப்ரமணியன் இப்போது ஊதிய உயர்விற்கு பிறகு ஐந்து நாட்கள் வேலை பார்க்க வேண்டுமாம். மற்றும் அவரது பதவியை குழு அமலாக்க அதிகாரி மற்றும் எம்.டியின் ஆலோசகர் என்று உயர்த்தியிருக்கிறார் சித்ரா.

மேலும் ஆனந்த் சுப்ரமணியன் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ விமானத்தில் பறந்தால் பிசினஸ் வகுப்பில் பறப்பதற்கு சலுகை. தங்குவதற்கு உயர்தர நட்சத்திர விடுதிகளில் அனுமதி. இப்படி நிலத்திலும், வானிலும் ராஜவாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் சுப்ரமணியன்.

இத்தனைக்கும் இந்த பதவி குறித்து தேசியப் பங்குச் சந்தை எந்த விளம்பரமும் கொடுக்கவில்லை. அதாவது இப்படி ஒரு வேலை இருக்கிறது, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எங்கேயும் ஒரு வரி விளம்பரம் கூட வந்ததில்லை.

அதன் பிறகு இமாலய குருவிற்கு சித்ரா அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புகிறார். அதில் தேசியப் பங்குச் சந்தையின் ஊழியர் நியமனம், நிதி நிலை முடிவுகள், நிதி நிலை ஊகித்தல்கள், பங்குச் சந்தையின் பங்குதாரருக்கு தரப்படும் டவிடண்ட் எனப்படும் ஈவுத் தொகை, அதன் விகிதம், இயக்குநர் குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், அது குறித்த ஆலோசனைகள் கேட்பது என மொத்த தேசியப் பங்குச் சந்தையின் நிர்வாகம் குறித்து அந்த மர்ம சாமியாரிடம் மின்னஞ்சல் மூலம் பேசுகிறார். சாமியாரும் இது குறித்து அவ்வப்போது உத்தரவுகள் போடுவார். அந்த பதில் மின்னஞ்சல் சித்ராவுக்கு மட்டுமல்ல சிசி போட்டு ஆனந்த சுப்ரமணியத்திற்கும் செல்கிறது. ஒரு சாதாரண அரசு குமாஸ்தாவாக இருந்த ஆனந்த சுப்ரமணியம் இப்போது இமயமலை சாமியாருடன் சேர்ந்து தேசியப் பங்குச் சந்தையை இயக்குகிறார். இந்த இயக்கத்தில் கூட்டாளியாகவும், சேவகராவும் சித்ரா ராமகிருஷ்ணா இருக்கிறார்.

இத்தனை நடந்த பிறகும் தேசியப் பங்குச் சந்தையின் இயக்குநர் குழுமம் செபியிடம் புகாரோ, கடிதமோ அளிக்கவில்லை. மாறாக சித்ராவிடமும், சுப்ரமணியத்திடமும் பதவியை விட்டுத்தருமாறு கோருகிறது. கவனியுங்கள் பதவி விலகுமாறோ பதவி விலக்கமோ இல்லை. அவர்களாகவே ஏதோ பார்த்துவிட்டு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். இதன்படி சித்ரா டிசம்பர் 2016-லும், சுப்ரமணியன் அக்டோபர் 2016 லும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறார்கள். அப்போது இயக்குநர் குழு சித்ராவின் தலைமைப் பங்கை பாராட்டி ஒரு பத்திரமே வாசித்து வழி அனுப்புகிறது.

Pexels

மர்மசாமியார் இவரா?

இமாலய குருவுடன் அம்மாவும் அய்யாவும் பங்குச் சந்தையை இயக்கிய கதையை அவர்கள் பதவி விலகிய பின்னர் தேசியப் பங்குச் சந்தை எர்னஸ்ட் & யங் எனும் தடயவியல் புலனாய்வு நிறுவனத்திடம் விடுகிறது. அந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பு படி அந்த மர்ம சாமியார் வேறு யாருமல்ல ஆனந்த் சுப்ரமணியன்தான். ஆனந்த் சுப்ரமணியனின் கணினியில் உள்ள ஸ்கைப் கணக்கில் அவர் பெயரிலும், சிரோனமி என்ற பெயரிலும் இரண்டு கணக்கு இருந்திருக்கிறது. மேலும் சாமியாரிடம் இருந்து வந்த மின்னஞ்சல் ஆவணங்களை சுப்ரமணியன் எடிட் செய்திருக்கிறார். அதன் பிறகே அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் இதை சித்ரா அம்மாவும், சுப்ரமணிய அய்யாவும் மறுக்கிறார்கள். உண்மையிலேயே இமயமலையில் ஒரு பரமஹம்சர், சித்த புருஷர் வாழ்கிறார், அவரோடுதான் பேசினோம் என்று சத்தியம் செய்கிறார்கள். மேலும் சாமியாரை 20 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தான் பார்த்ததாகவம் அப்போது அவர் மின்னஞ்சல் முகவரி கொடுத்ததாகவும் சித்ரா கூறுகிறார்.

செபி இதை மறுக்கிறது. சாமியாரும், சித்ராவும் இடைய விடுமுறையின் போது பார்த்திருக்கிறார்கள், சுற்றுலா பயணம் செய்திருக்கிறார்கள் என்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அந்த இமயமலை சாமியார் சாட்சாத் இந்த ஆனந்த் சுப்ரமணியன்தான் என்று நம்பவுதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஏனெனில் அவரது புகைப்படத்தை தவிர அவரைப் பற்றிய தகவல்கள், வரலாறு எங்குமில்லை.

இப்போது இவ்வளவு பெரிய ஊழல் நடந்த பிறகும் சித்ராவுக்கும், ஆனந்த் சுப்ரமணியனுக்கும் என்ன தண்டனை தெரியுமா? அம்மாவுக்கு மூன்று கோடி அபராதம், அய்யாவுக்கு இரண்டு கோடி அபராதம், மற்றும் இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டு சந்தையில் எந்த வர்த்தகமோ, நடவடிக்கையிலோ ஈடுபடக்கூடாது. அவ்வளவுதான்.

இப்போது ஆனந்த் சுப்ரமணியன் வீட்டில் நெய்தோசை சாப்பிட்டுக் கொண்டு தன்னைக் குறித்து வரும் செய்திகளை படித்து விட்டு சிரித்துக் கொண்டு கடந்து போவார்.

ஏனெனில் சாமியார், சித்ரா, சுப்ரமணியன் என்ற இந்த மூவர் கூட்டணி அல்லது இருவர் கூட்டணி அடித்த கொள்ளை எவ்வளவு, அதை எந்த வரியில்லா சொர்க்க தீவுகளில் பதுக்கியிருக்கிறார்கள், அதன் குலம் கோத்திரம் என்ன யாருக்கும் தெரியாது!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com