சமீபத்தில் டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம், ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் 470 புதிய விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது, பல்வேறு வணிக மற்றும் பொருளாதார நாளிதழ்களில் தலைப்புச் செய்தியானது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 460 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்ததே உலக அளவில் மிக பெரிய விமான ஆர்டராக இருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
தற்போது டாடா குழுமம் கொடுத்திருக்கும் இந்த பிரம்மாண்டமான ஆர்டர் காரணமாக, ஏர் இந்தியாவின் வசமாக போகும் விமானங்களின் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரிக்கும், அதனுடைய வியாபார வழி தடங்களின் எண்ணிக்கையும் பிரம்மாண்டமாக விரிவடையும் என பல்வேறு வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன், எந்த டாடா குழுமத்திடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசு கையகப்படுத்தியதோ, அதே டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனத்தை திருப்பிக் கொடுத்தது.
டாடா குழுமம் ஏர் இந்தியாவின் நிர்வாகத்தை கையில் எடுத்த பின், அந்நிறுவனத்தின் வசம் இருக்கும் பழைய விமானங்களை ஓய்வு பெற செய்து விட்டு, தன்னுடைய ஒட்டுமொத்த விமான கையிருப்புகளையும் நவீனமயமாக்க ஒரு புதிய ஐந்தாண்டு திட்டத்தை தொடங்கியது. அந்தத் திட்டத்தின் படி இந்த ஆண்டின் இறுதிக்குள் தன்னுடைய முதல் புதிய விமான பயணத்தை ஏர் இந்தியா மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
டாடா குழுமத்தின் இந்த திட்டங்களை எல்லாம் பார்க்கும் போது, ஏற்கனவே இந்திய சிவில் விமானத் துறையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக ஏர் இந்தியா நிறுவனத்தை உருவாக்கவும், அந்த வியாபாரத்தில் ஒரு கணிசமான சந்தையை ஏர் இந்தியா கைப்பற்றவும் விரும்புகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறதென சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகள், பெரும்பாலும் கத்தார் ஏர்வேஸ், இதிஹாட் ஏர்வேஸ் போன்ற மத்திய கிழக்கு விமான சேவை நிறுவனங்களையே அதிக அளவில் சார்ந்திருக்கிறார்கள். டாடா குழுமத்தின் திட்டப்படி ஏர் இந்தியாவில் புதிய விமானங்கள் களமிறக்கப்பட்டால், இந்த நிலை மாறலாம்.
ஏ 350 போன்ற அகலமான உடலை கொண்ட விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் கையகப்படுத்திக் கொண்டால், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய நகரங்களுக்கு நான் ஸ்டாப் சேவை வழங்குவதன் மூலம் அந்நாட்டுச் சந்தையிலும் தன் கால் தடத்தைப் பதிக்கலாம். பொதுவாகவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் எங்கு நினைவு கூறத்தக்கது.
ஆனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்களை எதிர்த்து போராடுவது அத்தனை எளிதான காரியம் அல்ல என சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த பல ஆண்டுகாலமாக, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் பல்வேறு புகார்களை வாடிக்கையாளர் தரப்பிலிருந்து எதிர்கொண்டு வருகிறது. சிறப்பாக பராமரிக்கப்படாத கேபின்கள், சரியாக இயங்காத பொழுதுபோக்கு அமைப்புகள், அவ்வளவு ஏன் ஸ்மார்ட்போன்கள், ஐபோன்கள், ஐ பேட்கள் போன்றவைகளை சார்ஜ் செய்து கொள்வதற்கு கூட சரியான வசதிகள் இல்லாதது, ஒருவேளை இருந்தாலும் அது சரியாக செயல்படாதது என புகார்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தற்போது ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமானங்களைக் களத்தில் இறக்கப் போவதால், இந்த பயணிகளின் அனுபவம் சார்ந்த விஷயங்கள் விரைவில் சரி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இதற்கு தேர்ந்த விமான சேவை பணியாளர்கள் களத்தில் தேவை.
அதே நேரத்தில், 1950 களில், இந்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு முன், உலக அளவில் சிறப்பான சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா திகழ்ந்ததும் எங்கே நினைவு கூறத்தக்கது.
ஏர் இந்தியா நிறுவனம் அரசாங்கத்தின் கைகளுக்கு சென்ற பின், அடுத்தடுத்து பல்வேறு அரசாங்கங்களின் மோசமான நிர்வாகங்கள் காரணமாக, அதீத கடனை எதிர்கொண்டது.
ஒரு கட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய பழம்பெருமையை நிலைநாட்ட முடியாமல் தரை தட்டியது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு மீண்டும் டாடா குழுமத்துக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்தின் வசமானது.
ஏர் இந்தியா நிறுவனம் உலக அளவில் ஒரு தனித்தடத்தை பதிப்பதற்கு, வெறுமனே இந்திய அளவில் தன் தரப்பில் மட்டும் வேலை பார்த்தால் போதாது. அரசு தரப்பிலும் சில அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு டெல்லி மும்பை போன்ற இந்தியாவிலேயே அதிக விமான பயணிகள் பயன்படுத்தும் விமான நிலையங்களில், குறிப்பாக வெளிநாட்டுக்கு செல்லவிருக்கும் விமான பயணிகள் இமிகிரேஷன் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய, மணி கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பயணிகள் வந்து விட்டால் அவர்களை இமிகிரேஷன் தரப்பில் இருந்து சரிபார்த்து விரைந்து அனுப்பும் அளவுக்கு இந்தியா தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.
ஆனால் மறுபக்கம் இதே நாட்டில் குறைந்தபட்சமாக 80 புதிய விமான நிலையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டப்படவிருக்கின்றன. கொரோனா வைரஸ் பெருந்துற்றுக்குப் பிறகு இந்திய விமான சேவையை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை தடாலடியாக கிட்டத்தட்ட பழைய நிலையைத் தொட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 122 மில்லியன் (12.2 கோடி பேர்) இந்தியர்கள் இந்திய நகரங்களுக்குள்ளேயே விமான சேவையை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், எதிர்காலத்தில் இன்னும் எவ்வளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
சுருக்கமாக சரியான நேரத்தில் தான் ஏர் இந்தியா டாடா குழுமத்தின் வசம் வந்திருக்கிறது. டாடா குழுமத்தின் ஐந்தாண்டுத் திட்டத்தின் படி புதிய விமானங்கள் கைவசம் வந்து, இந்திய அரசு தரப்பில் சில அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எல்லாம் இன்னும் மேம்படுத்தப்பட்டால், ஏர் இந்தியா புதிய உயரங்களைத் தொடலாம். வாழ்த்துகள் ஏர் இந்தியா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust