தேசாந்திரியின் தடங்கள் : 1500 கி.மீ, 19 மணி நேரம் உலகின் வடமுனையில் ஒரு பயணம் - | பகுதி 3

கோதன்பர்கில் இருந்து கிருனா நோக்கி ஐரோப்பாவின் மிக பெரிய ஏரியின் நதிக்கரையில் பயணித்தோம்...
Aurora Lights

Aurora Lights

Twitter

Published on

உலகின் வடமுனையில் நள்ளிரவில் அலைந்த கதை !

ஆர்டிக் பகுதியினை ஒட்டிய நோர்வே நாட்டின் வடமுனை தொட்ட பயணத்தைக் கடந்த பகுதியில் பார்த்தோம். 7 ஆண்டுகள் கழித்து, அதே டிசம்பர் 24-31 நாட்களில், அதே கடும் குளிரில், மீண்டும் வட துருவ ஒளியினைத் தேடி, ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள, சுவீடன் நாட்டின் வடக்கு முனைக்கு மகிழ்ந்துப் பயணம் திட்டமிட்டோம்.

இம்முறை, மூன்று குடும்பங்கள் – 3 இணையர்களும் 3 குழந்தைகளும் என மொத்தம் 9 பேர். பெரிய மகிழுந்து, கடந்த முறை நான் மட்டுமே 5 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்டியது போல் இல்லாமல், இம்முறை என்னோடு என் நண்பர் கீர்த்தியும் என் உறவினர் தணிகையும் சேர்த்து மூன்று வாகன ஓட்டிகள்!

7 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு சுவையான, திகிலான அனுபவங்களை வடமுனைப் பயணத்தில் பெற்றுவிட்டதாலும், ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தொடர்ந்து மகிழுந்து ஓட்டிய அனுபவம் நிரம்பியிருப்பதாலும், நோர்வே மலைகளில் கடுமையான பனிப்பொழிவு, பனிப்புயல்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டதால் கூடுதல் தன்னம்பிக்கையும் இருந்தன.

இம்முறை, கொரொனா கால விதிமுறைகளினால், ஃபின்லாந்து நாட்டிற்கோ, நோர்வே எல்லையினைக் கடந்தோ செல்ல வேண்டாம் என திட்டமிட்டிருந்தோம். அதனால், சுவீடனின் வட முனை நகரமான, உலகப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்துக்கொண்டிருக்கும் கிருணா நகரத்தினை அடைவதே இலக்கு! அங்கிருந்து வடதுருவ ஒளியினைத் தேடி, நோர்வே எல்லை (130 கிமீ தொலைவு) ரிக்சுகிரண்சன் வரை செல்வது எனத் திட்டமிட்டோம்.

அவ்வூர்களின் வரலாறும், வியக்க வைக்கும் மக்களின் வாழ்வியலையும் பார்க்கும் முன் பயணங்களின் கதை வழியே சுவீடனின் கோத்தென்பர்க் நகரம் முதல் கிருணா வரை கடப்போம் வாருங்கள்!

கிருனா

கிருனா

Twitter

1500 கிமீ சாலைப் பயணம் !

டிசம்பர் 24 அன்று காலை 10 மணி எனத் திட்டமிட்டு, 11:00 மணிக்கு மேல் ஆகி, பொறுமையாகக் கிளம்பினோம். அடுத்த நாள் மதியம் 2 மணியளவில் கிருனா சென்றடைந்து, முதலில் பனிக்கட்டி தங்குமிடம் பார்த்துவிட்டு, மற்றதை பிறகு திட்டமிட்டுக் கொள்வதாகப் பயணம் தொடங்கியது.

வழியெங்கும் கடுமையான பனிப்பொழிவு இருக்குமெனக் கணித்திருந்த வேளையில், ஆங்காங்கே மட்டும் கடுமையான வெண் பனிப்பொழிவும், பல இடங்களில் உறை நிலைப் பனிகளும் எனச் சாலைப் பயணம் அமைந்தது.

குழந்தைகளோடு சென்றாலும் காலை முதல் இரவு வரை மூன்று குழந்தைகளுமே எவ்வித இடர்பாடுகளுமின்றி அழகாய் பயணத்தை அமைத்துக்கொண்டு வந்தார்கள்.

கோத்தென்பர்க் நகரிலிருந்து முதலில் ஐரோப்பிய E45 சாலை வழியாக டுரோல்லாட்டன் (Trollhättan) சென்று அங்கிருந்து சாலை எண் சுவீடன் 44 வழியாக லீட்சோப்பிங்க்(கு?) (Lidköping), அங்கிருந்து மீண்டும் ஐரோப்பிய E20 சாலையினைப் பிடித்து சுடோக்கோம் (Stockholm) செல்லும் பாதையில் பயணித்து, ஊரப்ரோ (Örebro) சென்றடைந்து, அங்கிருந்து இணையும் ஐரோப்பிய சாலைகளான E18 -E20 ஊடாக வசுடுரசு (Västerås) வழியாக என்சாப்பிற்கு (Enkjöping) சென்று மீண்டு சுடோக்கோம் பாதையிலிருந்து விலகி சாலை எண் 55 வழியாக உப்சலா சென்றடைந்து அங்கிருந்து ஐரோப்பிய வழித்தடம் E4 வழியாக லூலியா வரையிலான 835 கி.மீ கடற்கரை ஓரம் அமைந்துள்ள நெடும் பாதை வழியே பயணிப்பது என ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.

Gothenburg to Kiruna

Gothenburg to Kiruna

Twitter

பகல் நேரத்தில் நான், நண்பர் கீர்த்தி, உறவினர் தணிகை என மாறி மாறி ஓட்டுவது, பிறகு இரவு முழுமைக்கும் நான் வாகனம் ஓட்டி அதிகாலை மீண்டும் இருவரிடமும் மகிழ்ந்துவை வழங்குவது எனப் பயணத்தினை வகுத்திருந்தோம்.

இதில், மிகச் சவாலாக இருக்கப்போவது, டிசம்பர் 24 மாலை நேரத்திற்குப் பிறகு, 25 மதியம் வரை தேநீர்க் கடைகள் கூட பூட்டப்பட்டிருக்கும். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கூட தானியங்கி மட்டுமே இயங்கும், கடைகள் இருக்காது! 7 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் படிப்பினை, இவற்றை எதிர்கொள்ள தைரியத்தை வழங்கியிருந்தது.

எனக்கு, இரவில், தனிமையில், நெடும் பயணங்கள் செல்வதென்றால் அதுவும் மனதிற்கினிய பாடல்களோடு வாகனம் இயக்குவது என்றால் சொல்லில் அடங்கா விருப்பமான செயல்! இரவின் பயணங்கள் பற்றி அடுத்து சில பகுதிகளில் விரிவாக எழுதுகிறேன். அதுவரை வடமுனைப் பயணத்தினை ரசிப்போம் வாருங்கள்!.

கோத்தென்பர்க் நகரிலிருந்து டுரோல்லாட்டன் சென்ற பிறகு சாலை 44 பல வரலாறுகளை வைத்துள்ள பகுதியாகும்.

வானர்ன் ஏரி

வானர்ன் ஏரி

Twitter

வானர்ன் ஏரி

சாலை எண் 44இல், டுரோல்லாட்டன் முதல் மேரிசுடாடு (Mariestad) வரை எங்கள் பாதையின் இடது புறம் முழுமைக்கு, கிட்டத்தட்ட 120 கி.மீ தூரத்திற்கு ஏரியின் கரையின் ஊடாகவே பயணித்தோம்

வானர்ன் ஏரி சுவீடனில் மட்டமல்ல, ஒட்டுமொத்த 33 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே பெரிய ஏரி, ஐரோப்பியக் கண்டத்தைப் பொறுத்தவரை 3வது பெரிய ஏரி. குறைந்தது 10000 ஆண்டுகளுக்கும் முன்பு நடந்த பனிப்பாறை உருகு காலங்களில் உருவாகி இருக்கலாம். 2009இல் வைக்கிங்க் இனத்தின் கப்பல் (1000 வருடப் பழமையான) ஒன்றைக்கூட, இவ்வேரியின் அடிப்பகுதியிலிருந்து கண்டெடுத்தார்கள்.

நாங்கள் பயணித்த காலம், கடுமையான குளிர் காலம் என்பதால் பெரும்பாலான சாலைகள் மட்டுமல்ல, ஏரியின் கரைகளுமே கூட உறைந்து, வெள்ளைப் பனிக்கட்டிகளாலும் வெள்ளைப் பனிச்சிதறல்களாலும் நிரம்பியிருந்தது.

வானர்ன் ஏரியினை ஒட்டிய எங்கள் பயணத்தின் வழித்தடத்தில், நாங்கள் ஓய்வெடுக்கவும் மதிய இடைவேளைக்காகவும் லிட்சோப்பிங்க் நகரில் நிறுத்தினோம்.

வழக்கம் போல, தமிழர் பண்பாட்டின் நீட்சியான புளிச்சோறும், தயிர்ச்சோறும், தக்காளிச்சோறும் தான் அடுத்த நாள் மதியம் வரை.

லிட்சோப்பிங்க் நகரினைப் பொறுத்தவரை மிக முக்கிய வரலாற்றுச் செய்திகளை வைத்துள்ளப் பகுதி, அதனோடு, சோப்பிங்க் என்னும் சுவீடனின் பல ஊர்களில் இதுவும் வகைப்படுத்தக்கூடிய பெயர் தாங்கிய நகரம் என்பதும் இன்னொரு செய்தி.

Aurora Lights

Kamal Haasan 'விக்ரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு ; வீடியோ வெளியிட்ட லோகேஷ்

சோப்பிங்க்

சோப்பிங்க்

Twitter

சோப்பிங்க்

சுவீடிஷ் மொழியில் Köping என்று முடியும் ஊர்கள் சுடோக்கோம் – கோத்தென்பர்க் நகரங்களுக்கு இடையே நிறைய உண்டு. நியுசாப்பிங்க் (NyKöping), என்சாப்பிங்க் (En Köping), யான்சாப்பிங்க் (JonKöping), லின்சாப்பிங்க் (LinKöping), ஃபால்சாப்பிங்க் (FalKöping), சோடெர்சாப்பிங்க்(SöderKöping), நோர்சாபிங்க் (NorrKöping), லீட்சாப்பிங்க் (LidKöping). அதேபோல, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு.

பொதுவாக, shopping என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான வணிகம் சார்ந்த இடம் என்ற பொருளில், இன்றைய சுவீடிஷ், நோர்வேஜிய, டேனீஷ் மொழிகளுக்கு மூதாதையான பண்டைய நோர்டிக் (OLD NORSE)/ பண்டைய ஸ்காண்டினேவிக் மொழியின் Kaupang என்ற சொல்லின் தழுவலே பிறகு மூன்று மொழிகளிலும் வெவ்வேறு சொல்லானது. (டேனீஷ் købing நோர்வேஜியன் kjøpstad).

வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில், 13ஆம் நூற்றாண்டில் வணிகர்களில் கூடுகைக்கான இடமாக இருந்ததால், அப்பெயரினை சுட்ட சோப்பிங்க் என்னும் முதற் பெயர் ஒரு சிற்றூருக்கு வந்தது. அவ்வூர் இன்றும் Köping என்ற அழைக்கப்படுகிறது. அவ்வூர், லிட்சோபிங்கில் இருந்து 220 கி.மீ மற்றும் சுவீடன் தலைநகர் சுடோக்கோம் நகரில் இருந்து 150 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது

இன்றும் கூட, மிகச்சிறிய நகரமென்றே சொல்லலாம், அல்லது பெரிய கிராமம் என்ற வரிசையிலேயே வைக்கலாம். ஒட்டுமொத்தப் பரப்பளவே 11.86 சதுர கி.மீ தான், மக்கள் தொகையும் தோராயமாக 20,000 தான்.

சுவீடனின் பழமையான ஊர்களில் இதுவும் ஒன்றெனலாம். 1000 வருடப் பழமையான வைக்கிங்க் மனிதர்க்ள் வாழ்ந்ததற்கான தடையங்கள் இங்கு உண்டு. மதப்பேராயர்களின் (Bishops) ஒன்றுகூடல் கி.பி. 1257இல் நடந்ததற்கான ஆவணக் குறிப்புகளும் உண்டு.

1641இல், அரசி கிருஷ்டினா அவர்கள் ஆற்றங்கரைக்கு அருகாமையை வீடுகள் கட்ட அனுமதி வழங்கியப்பின், சிற்றூராக வளர்ந்துள்ளது.

1864இல், சுவீடன் நாட்டில் முதன் முதலில் உள்ளாட்சி அரசமைப்புகள் உருவானப்பின், நகரச் சட்டங்கள், சிற்றூர் சட்டங்கள் என வகைப்படுத்தியுள்ளனர். சிற்றூர் சட்டங்களின் அடிப்படையிலேயே, சோப்பிங்க் நகரோடு சேர்த்து 8 ஊர்களுக்கும் சோப்பிங்க் `பட்டம்` வழங்கியுள்ளனர். 20ஆம் நூற்றாண்டு தொழிற் புரட்சிக்காலங்களில் சோப்பிங்க் நகரங்கள் பலவும் பலமடங்காக வளர்ந்துவிட்டச் சூழலிலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெருநகரங்களும் தங்கள் வரலாற்றுப் பட்டமான `சோப்பிங்க்` பெயரைத் தாங்கி வருகின்றனர்.

இப்படியான பல வரலாற்றுக் கதைகளை கொண்ட ஊர்களின் ஊடாகவே, சுவீடனின் மேற்குத் திசையில் தான் லீட்சோப்பிங்க் வருகிறது.

Warren Lake

Warren Lake

witter

லீட்சோப்பிங்க்:

லீட்சோப்பிங்க், 40000 மக்கள் தொகை கொண்ட, 14.95 சதுர கீமீ, பரப்பளவு கொண்ட சுவீடனின் அழகிய நகரம். வார்னன் ஏரியின் குறுக்கு வெட்டாக நடுப்பகுதியின் ஒருகரையில் கார்ல்சுடடு (Karlstad) நகரமெனில், மற்றொரு தரைப்பகுதியினை ஒட்டி வருவது லீட்சோப்பிங்க்.

இவ்வூரின் நகர அமைப்பு வரலாறு 1446இல் இருந்து தொடங்குகிறது. பல மதபேராயர்களின் தலைமையில் மாறி மாறி இருந்து வந்த இவ்வூர் 1655இல் சுவீடன் மன்னராட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்டார்கள். அதனை ஈடுகட்ட, அதுவரை இந்நகரைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த மதப்பேராயர் ஜாகஃப் டே லே கார்டி (Jakob De la Gardie) அவர்களுக்கு இவ்வூரின் மையத்தில் ஓடும் லிடன் நதிக்கு மேற்கு கரையில் இடம் கொடுத்து, புது நகரை அமைத்துக்கொள்ள அனுமதி தந்துள்ளனர். மீண்டும் 1683இல் இரு நகரத்தையும் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர்.

இவ்வூருக்கு, வடமுனைப் பயணத்தின் வழித்தடத்தில் ஓய்வெடுக்க இன்று வந்திருந்தாலும், இதற்கு முன்பே கூட, கடந்த ஆண்டு, நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் சுற்றிப்பார்க்க வந்திருந்தோம்.

இந்த ஊரைச் சுற்றிப்பார்க்க வந்திருந்தோம் என்பதை விட, வார்னன்ர் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் லேக்கோ காவற்கோட்டை (அரண்மனை)யினைக் காண வந்தோம் எனச் சொல்லலாம்.

லேக்கோ காவற்கோட்டை

லேக்கோ காவற்கோட்டை

Twitter

லேக்கோ காவற்கோட்டை:

லீட்சோப்பிங்கின் நகர அமைப்புத் தொடங்குவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவதூ, கி.பி. 1298இல், லீட்சோப்பிங்கில் இருந்து 25 கி.மீ தொலைவில் வானர்ன் ஏரியின் கரையில் மதப்பேராயர் பிரினால்ஃப் அல்கோட்சன் (Brynolf Algotsson) கோட்டைக்கான அடித்தளம் இட்டிருக்கிறார். கி.பி 1470இல் நடந்த தீ விபத்து நடந்து கோட்டைக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

சுவீடன் அரசியல் சீர்த்திருத்தங்களின் தொடர்ச்சியாக மன்னர் குசுடாவ் வாசா (Gustav Vasa) இக்கோட்டையை தன் கட்டுப்பாட்டில் கி.பி.. 1527 கொண்டு வந்தபின், சுவீடனின் படைத்தளபதி ஜாகப் பொன்டுச்சன் (Jacob Ponstusson) அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் அரசக்குடும்பம் வழங்கியும் உள்ளது. அதன் பின், கோட்டைக் கட்டிடங்கள் பல வகையில் உருமாற்றம் அடைந்து, பல்வேறு மாறுதல்களையும், புதிய அருகாமை கட்டிடங்களையும் தன்னகத்தே சேர்த்துள்ளது எனலாம்.

இப்பயணக்கதையின் ஊடாக சுருக்கமாக இக்கோட்டையைக் கண்ட உணர்வைச் சொல்ல வேண்டுமென்றால், லீட்சோப்பிங்க் நகரத்திலிருந்து, காடுகளின் வழியாகப் பயணித்து, ஆள் அரவமே தென்படாத தனிப்பகுதிக்குள் நுழைந்து, வானர்ன் ஏரியின் கரையைத் தொடும்பொழுது, இக்கோட்டைக் கண்ணுக்குத் தென்பட்டது. நம் மனக்கண்ணில் உள்ள சோழர்களின் கட்டிடத்தின் பிரமிப்பிலிருந்து இதனை ரசிக்க முடியாது. ஆனால், ஒரு சிறு மலையின் மேலே, வானர்ன் ஏரியின் முழுமையான அழகை ரசிக்கும் உயரத்தில், பழமையான சுவீடனின் காலத்தை மனக்கண் முன் காட்டும் அமைப்பைச் சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து வைத்துள்ளனர் என்ற அளவில் பெரிய பாராட்டுதலுக்கு உரியவை இக்கட்டிடம்.

நான்கு அடுக்கு மாளிகையான இக்கோட்டையினை முதல் அடுக்கு கி.பி 1527இலும், இரண்டாம் மூன்றாம் அடுக்கு கி.பி. 1615லும் நான்காம் அடுக்கு கி.பி 1654லும் வெவ்வேறு பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஏற்ற வடிவமைப்பில் அழகு படுத்தியுள்ளனர்.

இரண்டாம் தளத்தில், கோட்டை ராணிக்கென்று இருந்த அறையும், படுக்கையும், நம்மூர் பழையத் திரைப்படங்களின் மன்னர் கதைகளை நினைவுபடுத்தியது.

அவ்வறையின் அருகாமையில், கோட்டை அரசிக்கென்று ஓவிய அறையும், அதனை ஒட்டி, சிறிய மைதானம் போன்ற பரப்பளவில் உணவு அறை இருந்தன. அரசி அறையின் இன்னொரு புறம் அரசியல் சந்திப்புகளுக்கான அறையும், அங்கிருந்து வெளிச்சென்றால், மிகப்பிரமாண்டமான மக்கள் கூடும் மன்றமும் இரண்டாம் தளத்திலேயே இருந்தன.

கோட்டை அரசியின் தனிப்படுக்கை அறையின் அருகாமையில் பல சிறிய அறைகளும் இருந்தன. அதில் ஒன்றில் ஒவ்வொரு காலத்துக் கோட்டை அரசர்கள்-அரசிகளின் படங்கள், அரசர் அரசி படங்களும், அவர்களின் நினைவுப் பொருட்களும் இருந்தன.

பெரும்பாலான இடங்களில் கோட்டை முழுவதுமே, அரசிகளின் தனிப்படங்கள் நிறையத் தென்பட்டன. கோட்டை அரசர்களின் படங்கள் ஆங்காங்கே இருந்தாலும்,, அரசர்-அரசி, அரசக் குடும்பப் படங்கள் எனப் பல காலத்தின் தொடர்ச்சியான கதைகளைக் கூறும் விதமாகவும் இருந்தன.

கோட்டையின் மைய மண்டபத்தில், போர்க் காட்சிகள் நிறைந்த ஓவியங்கள் சுவர்களிலும், கூரைகளிலும், தரைகளிலும் எனப் பல கதைகளைக் கூறியது.

பயணம்

பயணம்

Twitter

மீண்டும் வடமுனைப் பயணத்தைத் தொடங்குவோமா?

கோத்தென்பர்க் நகரத்தில் இருந்து, மெல்ல மெல்ல நகர்ந்து 135 கி.மீ தொலைவு வந்து மதிய உணவு எடுக்கும் தருணத்திற்குள், சுவீடன் நாட்டின் பல சுவையான கதைகளையும் வரலாறுகளையும் கண்டுவிட்டோம்.

இன்னும் 1500 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது வடமுனையை அடைய, வான்வெளி வண்ணக் கோலங்களின் கோர்வை வடமுனை ஒளி, ஆர்டிக் பகுதியின் பூர்வக்குடிகளான சமி மக்களின் வாழ்க்கை, வடமுனை மான்களின் விலங்கியல் பூங்கா, பனிக்கட்டிப் படுக்கை தங்குமிடம், இவையெல்லாம் ரசித்துக்கொண்டே வடமுனை மான் உணவு என எத்தனையோ சுவைக்க வேண்டியுள்ளதே!

வடமுனை ஒளி வானில் வந்தால் தெரியப் போகுது! அதில் என்ன வியப்பு? வானத்தில் வண்ண வண்ண கோலங்கள் வந்தால், படம் பிடிக்கப் போகிறோம், இதில் என்ன புதிய செய்தி? ஆர்டிக் பகுதியின் -24 டிகிரி கடுமையான குளிரில் நின்று பார்த்து, ஓடியோடிச் சென்று, மலைகளில் நடந்து, மூன்று நாட்கள் தேடித் தேடி அலைந்துத் திருந்த கதையினையும் கேட்டு, வடமுனை ஒளியினை ரசித்தால் தானே, அதன் வியப்பு பன்மடங்காகும்.

வாங்களேன், அடுத்தப் பகுதியில் விரிவாகப் பார்ப்போம்!.

முந்தையப் பகுதியை படிக்க

Aurora Lights

தேசாந்திரியின் தடங்கள் : பனிக்கட்டி படுக்கை – 24 மணி நேர இருட்டு – பதட்டமான பயணம்| பகுதி 2

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com