உலக வரலாற்றில் பல சின்னங்கள் நீங்காத இடம்பெற்றுவிடுகின்றன. கட்டிடக்கலை, இயற்கை வளம் போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டினராலும் பண்டைய அடையாளங்கள் பேணிக்காக்கப் படுகின்றன. அப்படியானவற்றில் மிகச் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, உலகின் பாரம்பரிய தளங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அவற்றில் சில பற்றி இங்கே காண்போம்.
கிசாவின் பெரிய பிரமிடு என்று அழைக்கப்படும் இந்த பிரமிடு, எகிப்தில் காணப்படும் மூன்று பிரமிடுகளில் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய பிரமிடாகும். இந்த பிரமிடு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது. இது எட்டாவது வம்சத்தைச் சேர்ந்த பாரோவின் குஃபுக்காக கட்டப்பட்டது . கி.மு 2580 முதல் 2560 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டது.
இதில் ராஜா மற்றும் ராணிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அறைகள், ராபர்ஸ் டன்னல், ஒரு நவீன திறப்பு வாயில், கிராண்ட் கேலரி மற்றும் பிரமிடின் உள்ளே ஒரு பெரிய வெற்றிடத்தைக் கொண்டுள்ளது.
இந்த பிரமிடு தயாரிக்க சுமார் 2.3 பில்லியன் பாறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கிசா பிரமிடு மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக கொண்டாடப்படும் அளவிற்கு அங்கிருக்கிற மற்ற பிரமிடுகள் இல்லை. எனவே தான் யுனெஸ்கோ இதனை புராதனச் சின்னமாக அறிவித்து கௌரவித்தது.
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்துள்ள கொலோசியம் ஒரு பிரம்மாண்டமான அரங்கமாகும். போர் வீரர்களின் சண்டை, விலங்குகள் சண்டை, குற்றவாளிகளுடன் விலங்கு சண்டை, யுத்த நாடகங்கள், மரண தண்டனைகள் எல்லாம் அரங்கேறிய இடம். மேற்கூரையில்லாத இந்த வட்ட வடிவக் கட்டிடத்தின் நடுவில் உள்ள களத்தில்தான் சண்டைகள் நடைபெற்றன. களத்தைச் சுற்றி உள்ள வட்ட வடிவப் படிகளில் மக்கள் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள். இது ஃபிளேவியன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அதனால் இதை ‘ஃபிளேவியன் ஆம்பி தியேட்டர்’ என்று முதலில் அழைத்தார்கள்.
‘கொலோசஸ் ஆஃப் நீரோ’ என்றழைக்கப்படும் நீரோ மன்னனின் பிரம்மாண்டமான சிலையின் பக்கத்தில் இந்த அரங்கம் அமைந்ததால் இதற்கு ‘கொலோசியம்’ என்ற பெயர் பின்னர் வந்தது.
இந்த கொலோசியம் பேரரசர் வெஸ்பாசியனால் கி.பி. 72ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. பின் அவருடைய மகன் டைட்டஸ் கி.பி. 81ல் கட்டி முடித்தார். ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கொலோசியம், 620 அடி நீளம், 512 அடி அகலம், 158 அடி உயரம் கொண்டது. மொத்தம் ஒரு லட்சம் கன மீட்டர் அளவுள்ள மார்பிள் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.
இதில் மொத்தம் நான்கு கேலரிகள் கட்டப்பட்டன. முதல் கேலரியில் அரசரும் அவரது குடும்பத்தினரும்; இரண்டாம் கேலரியில் பிரபுக்களும் முக்கிய விருந்தினரும்; மூன்றாம் கேலரியில் குடிமக்களும் போர் வீரர்களும்; நான்காம் கேலரியில் பெண்களும் அடிமைகளும் உட்காருவார்கள். இதோடு கீழே சுரங்கப் பாதைகளும், நிலவறைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அவை ஆயுதங்கள் வைக்கும் இடமாகவும், அடிமைகள், விலங்குகள் காத்திருக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன. தற்போது ரோம் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாகக் கொலோசியம் உள்ளது. மேலும், இது உலக அதிசயங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது.
இந்தியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற மற்றும் வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற ஒரு இடமாக இருப்பது தாஜ்மஹால். இது இந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் இருந்து வருகிறது . காதலின் அடையாளாமாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் தற்போதைய உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. முகலாய மன்னர் ஷாஜகானால் அவரின் மனைவி மும்தாஜின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவிடம்தான் தாஜ்மஹால் என்பது யாவரும் அறிந்ததே.
தாஜ்மஹால் கட்டுவதற்கு பல வகையான பளிங்கு கற்கள் பயன்படுத்தினர். இதில் பூக்கள் போன்ற பளிங்குக் கற்கள் தாஜ்மஹால் சுவர்களில் பொறிக்கப்பட்டிருக்கும், இந்த பூக்களை செதுக்க இத்தாலியில் உள்ள கலை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள் . இந்த தாஜ்மஹாலில் வெளிப்புறத்தில் 4 தூண்கள் கட்டப்பட்டுள்ளது.
இந்த 4 தூண்கள் வெளிப்புறமாக சாய்ந்தது போல் காணப்படும் இது ஏன் இவ்வாறு கட்ப்படுள்ளதென்றால் இயற்கை சீற்றத்தால் இந்த தூண் தாஜ்மஹால் மீது விழாமல் இருக்க வெளிப்புறம் சாய்ந்த மாதிரி கட்டப்பட்டுள்ளது.இதன் மையத்தில் ஒரு தங்க கோபுரமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் 1653ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது.
யோஸ்மைட் தேசியப் பூங்கா (Yosemite National Park) கலிபோர்னியாவின் மேற்கு சியேரா நிவாடாவில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பூங்காவின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்காவின் பரப்பளவு 747,956 ஏக்கர்கள் (1,168.681 ச மை; 302,687 எக்டேர்; 3,026.87 கிமீ2) ஆகும். இது 1984இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இங்கு காணப்படும் கருங்கல் முகடுகள், அருவிகள், தெளிந்த நீரோடைகள், ஏரிகள், மலைகள்,புல்வெளிகள், பனிப்பாறைகள் போன்றவை உலகளவிலான உயிரியற் பல்வகைமைக்காக (bio diversity) அறியப்படுகின்றது. கிட்டத்தட்ட 95% பூங்காப் பகுதி அடர் காட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் இந்த பூங்காவிற்கு வருகை புரிகின்றனர். வருபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் நேரத்தை யோஸ்மைட் பள்ளத்தாக்கின் 5.9 சதுர மைல்கள் பரப்பில் கழிக்கின்றனர். 2016இல் இப்பூங்காவின் வரலாற்றில் சாதனையளவாக 5 மில்லியன் பேர் வந்துள்ளனர்.
தொடக்க காலத்தில், காலென் கிளார்க் என்பவர் தலைமையில் மற்றவர்களும் யோஸ்மைட் பூங்காவை பாதுகாக்கப் போராடினர். இறுதியில் 1864இல் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் யோஸ்மைட் பூங்கா அனுமதியில் கையெழுத்திட்டார். பின்னர் ஜான் முயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கை மட்டுமன்றி சுற்றியுள்ள மலைத்தொடர்களையும் வனங்களையும் உள்ளடக்கிய பெரியத் தேசியப் பூங்கா அமைக்கப் போராடினார். இதுவே ஐக்கிய அமெரிக்க தேசியப் பூங்கா அமைப்பு நிறுவப்பட வழிகோலியது.
வடக்கு கம்போடியாவில் அமைந்துள்ள இந்த அங்கோர் வாட் கோயில் உலகின் மிகப்பெரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். அங்கோர் வாட் ஒரு பொக்கிஷமான புத்த கோவில் ஆகும். சியெம் ரீப்பிலிருந்து வடக்கே 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அங்கோர் வாட், அங்கோர் இடிபாடுகளின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. இந்த கோயில் கம்போடியாவின் தேசிய சின்னமாகவும் பெருமைக்குரியதாகவும் போற்றப்படுகிறது. மேலும் இது அவர்களின் தேசியக் கொடியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
அங்கோர் வாட்டின் பெருமைக்கு இணையாக பூமியில் எந்த இடமுமே இல்லை எனக் கூறலாம். இதுவரை கட்டப்பட்ட மதம் சார்ந்த மிகப்பெரிய நினைவுச்சின்னங்களில் இதுவே மிகப்பெரியதாகும். 12 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் கெமர் பேரரசின் மேலாண்மையில் இரண்டாம் சூர்யவர்மனின் கோவிலாகவும் கல்லறையாகவும் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கோவிலின் மிகப்பெரிய பொக்கிஷமாக இருப்பது அதன் வெளிப்புற கேலரியின் சுவர்களைச் சுற்றி 2 கிமீ நீளமுள்ள புதைபடிவங்கள், தேவதாக்கள் மற்றும் அப்சரஸ்களின் நூறு உருவங்களும் சிற்பங்களும் ஆகும். இந்த நுணுக்கமான செதுக்கப்பட்ட காட்சியகம் விஷ்ணு கடவுள் மற்றும் இரண்டாம் சூர்யவர்மன் போர்க்களத்தில் பெற்ற வெற்றிகளைப் பற்றிய கதைகளைக் கூறுகிறது. முழு வளாகமும் 81 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த அற்புதமான கட்டிடக்கலை அதிசயத்தை வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் பெரிய தடுப்பு ரீஃப் (The Great Barrier Reef) தான், உலகிலேயே மிகப் பெரிய ரீஃப் அமைப்பு எனக் கருதப்படுகிறது. 2,900 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட திட்டுகள், 900 தீவுகள் மற்றும் 133,000 சதுர மைல்கள் (344,400 சதுர கி.மீ) பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் அங்கீரிக்கப்பட்டிருக்கிறது. கிரேட் பேரியர் ரீஃப் என்பது தனித்துவமானது, அது விண்வெளியில் இருந்து காணக்கூடிய அளவிற்கு அதிசயம் மிக்க ஒரு பகுதியாக அது விளங்குகிறது.
2,900-க்கும் மேற்பட்ட தனித்தனி திட்டுகள் மற்றும் 900 தீவுகளை உள்ளடக்கிய இங்கு, சில தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் ரீஃப் பகுதிக்கு சுற்றுலா வருகிறார்கள். இது ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
சீனாவில் நிறைய பாரம்பரிய இடங்கள் உள்ளன அதில் மிகவும் புகழ்பெற்றது ’சீனப் பெருஞ்சுவர்’. இது கி.மு. 220ல் கட்டப்பட்டது. ஆனால் அதன் கட்டுமானப் பணி 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. இச்சுவற்றின் நீளம் 20,000 கிமீ என்று சொல்லப்படுகிறது. கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருக்கும் ஷாஸ்கால்குயான் என்னும் இடத்திலிருந்து தக்லாம்கான் பாலைவன ஓரம் வரை இந்தச் சுவர் நீண்டு கிடக்கிறது.
சீனப் பெருஞ்சுவர் மிக நீளமானது மட்டுமல்ல, மிகவும் பழமையானதும் கூட. அதாவது, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது இச்சுவர்.
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெரு மன்னனைப் பற்றித்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னன் ஷி ஹூவாங்டி என்பவராவார்.
செரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். ஆண்டுதோறும் இங்கு நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு என்பது உலகளவில் புகழ் பெற்றது. இந்நிகழ்வின் போது சுமார் ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildbeast), 200,000 வரிக்குதிரைகளும் இடம் பெயர்கின்றன. 1981ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலக மரபுச் சின்னமாக இந்த பூங்கா அறிவிக்கப் பட்டது.
இந்த பூங்காவின் உருவாக்கத்தின் போது அப்பகுதிகளில் வாழ்ந்த மசாய் இன மக்கள் இன்கோரொங்கோரோ மேட்டுநிலப் பகுதிகளுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். இது தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவில் சர்ச்சைகள் இன்றும் நிலவுகின்றன. இம்முயற்சியின்போது மக்களைக் கட்டாயப்படுத்தியதாகவும், வஞ்சகமாகச் செயற்பட்டதாகவும் குடியேற்றவாத அரசு மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனாலும், தான்சானியாவின் பெருமை மிகு அடையாளமாகத் திகழ்கிறது. மேலும், இது நாட்டின் சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust