உலகில் பலருக்கும் தெரியாத ஆங்கிலோ-சன்சிபர் போர்தான் வரலாற்றிலேயே மிகச் சிறியப் போர் என்று கருதப்படுகிறது. இந்த போர் மொத்தமே 38 நிமிடங்கள் தான் நடைபெற்றது.
இந்த விசித்திரமான போர் எப்படித் தொடங்கியது? யார் வென்றது? யார் தோற்றது. என விரிவாக பார்க்கலாம்.
மொத்தகதையும் 1890ம் ஆண்டு பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு இடையில் ஹெலிஹோலண்ட் - சாசின்பார் ஒப்பந்தம் கையெழுத்தானபோது தொடங்குகிறது.
இந்த ஒப்பந்தம் ஆதிக்க சக்திகளாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குள் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிகளை பிரித்துக்கொள்வது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி தான்சானியாவின் பிரதான நிலப்பகுதி ஜெர்மனிக்கு வழங்கப்பட்டது.
சாசின்பார் பிரிட்டிஷ் காலனியாக அறிவிக்கப்பட்டது.
இதன் பிறகு பிரிட்டிஷ் சான்சிபாரில் தனது கைப்பொம்மையாக இருக்கும் ஹமத் பின் துவைனி என்பவரை சுல்தானாக நியமித்தது.
1893ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஹமத் மூன்று ஆண்டுகளுக்கு அமைதியான ஆட்சியை வழங்கினார். 1896ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.
இவருக்கு அவரது உறவினரான காலித் பின் பார்கஷ் விஷம் வைத்ததாக நம்பப்படுகிறது. ஏனென்றால் ஹமத் இறந்த சில மணி நேரத்திலேயே காலித் அரண்மனைக்கு சென்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்த சம்பவம் உள்ளூர் பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. முக்கிய பிரிட்டிஷ் பிரமுகரான பாசில் கேவ் காலித் பதவியிறங்க வேண்டும் எனக் கூறினார்.
கேவின் எச்சரிக்கைகளை புறக்கணித்த காலித் தனது அரண்மனையை சுற்றிப் படைகளை குவித்தார். இந்த படையினர் நல்ல ஆயுதங்களைப் பெற்றிருந்தனர். அவற்றில் பெரும்பாலான துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் பிரிட்டன் அரசின் பரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
25ம் தேதிக்குள் காலித் 3000 வீரர்கள் பல பீரங்கிகள் துப்பாக்கிகள் கொண்ட படையுடனும். துறைமுகத்தில் ராயல் படகுடனும் பாதுகாப்பை பலப்படுத்தினார்.
ஆனால் அப்போது துறைமுகத்தில் இரண்டு போர்கப்பல்களை பிரிட்டிஷ் நிறுத்தி வைத்திருந்தது. ஆங்கிலேய தூதரகத்தை பாதுகாக்க வீரர்கள் இருந்தனர். கேவ் கேட்டுக்கொண்டதன்படி, மேலும் ஒரு கப்பல் அங்கு வந்தது.
துறைமுகத்தில் கேவ் குறிப்பிடத்தக்க இராணுவ பலத்தை கூட்டிவிட்ட போதிலும் அவரால் அரசு அனுமதில் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே அவர், “அனைத்து அமைதி நடவடிக்கைகளும் பயன் பெறாத நிலையில், அரண்மனையை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த எங்களுக்கு அனுமதி உள்ளதா?” எனக் கேட்டு அரசுக்கு தந்தி அனுப்பினார்.
மறுபக்கம் காலித்தை தொடர்ந்து எச்சரித்து வந்தார் கேவ். மறுநாள், பிரிட்டிஷ் கடற்படையின் தளபதி ரியர்-அட்மிரல் ஹாரி ராவ்சன் இரண்டு போர்கப்பல்களுடன் அங்கு வந்தார்.
பிரிட்டிஷ் அரசிடம் இருந்து, “உங்களுக்கு அத்தியாவசியம் எனத் தோன்றும் எந்த நடவடிக்கையையும் நீங்கள் எடுக்கலாம். நாங்கள் உங்களுக்கு துணையிருக்கிறோம். வெற்றி பெற முடியாத எந்த முயற்சியையும் மேற்கொள்ள வேண்டாம்” என அவருக்கு தந்தி வந்தது.
ஆகஸ்ட் 26ம் தேதி காலித்துக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர் மறுநாள் காலை 9 மணிக்குள் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும் என கேவ் கூறினார்.
இரவோடு இரவாக போருக்கு தயாராகும் வகையில் போர்கப்பல் அல்லாத பிற கப்பல்களை துறைமுகத்தில் இருந்து நீக்கினார். மறுநாள் விடிந்தது.
8 மணியளவில் காலித்திடம் இருந்து ஒரு செய்தி வந்தது அதில், “நமது கொடியை கீழிறக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டீர்கள் என நம்புகிறேன்” என அவர் கூறியிருந்தார்.
அதற்கு கேவ், “நீங்கள் சொன்னபடி நடந்துகொண்டால் நாங்களும் அப்படியே நடந்துகொள்வோம்” என பதில் அனுப்பினார்.
ஆனால் 9 மணிக்கு அரண்மனையை நோக்கி பிரிட்டிஷ் கப்பல்கள் குண்டுகளை வீசத் தொடங்கின. 9:02க்கு காலித் பின்வாசல் வழியாக அரண்மனையை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அரண்மனையில் இருந்த 3000 வீரர்கள் செய்வதரியாது திடுக்கிட்டனர். மரத்தாலான அரண்மனை நொருங்கியது. 9:40க்கு குண்டு வீசுவது நிறுத்தப்பட்டது. சுல்தானின் கொடி இறக்கப்பட்டது. உலக வரலாற்றில் சுருக்கமான போராக 38 நிமிடத்தில் போர் முடிந்தது.
இந்த சிறிய போரிலும் காலித்தின் 500 வீரர்கள் காயமடைந்தனர். இதில் சிலர் மரணிக்கவும் செய்தனர். ஒரு பிரிட்டிஷ் வீரருக்கு காயம் ஏற்பட்டது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார்.
காலித் இல்லாததால் சான்சபாரில் பிரிடிஷ் கைப்பொம்மை சுல்தானுடன் சுதந்திரமாக ஆட்சி செய்தது.
காலித் தனக்கு விசுவாசமான சிலருடன் ஜெர்மனிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அவரை நாடுகடத்த பலமுறை பிரிட்டிஷ் அழைப்பு விடுத்தது. 1916ல் ஜெர்மன் படையினர் அவரை இன்றைய தான்சானியா இருக்கும் பகுதிக்கு அழைத்து வந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவை பிரிட்டிஷ் படைகள் ஆக்கிரமித்த போது காலித் கைது செய்யப்பட்டு ஹெலனாவுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கு அவர் பிரிட்டிஷ் அரசு குறிப்பிட்ட நாள் வரை சேவை செய்து மீண்டும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டார். 1927ல் கிழக்கு ஆப்பிரிக்காவில் மறைந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust