சுவீடன் : 110 மொழிகளுக்கு தாய்மொழிக் கல்வி வழங்கும் நாடு

மொழி என்பதில் சிறியது, பெரியது என்று ஒன்றுமே இல்லை! வீட்டின் மொழியையும் கற்பிக்கப்படும் மொழியையும் இணைப்பதால், தாய் மொழிக்கல்வியே சிறந்தது. தாய் மொழியினை குழந்தை முழுமையாக பகுத்துணரும் வரையில் கல்வி மொழி தாய் மொழியிலேயே இருத்தல் வேண்டும். – UNESCO 1953.
சுவீடன் : 110 மொழிகளுக்கு தாய்மொழிக் கல்வி வழங்கும் நாடு

சுவீடன் : 110 மொழிகளுக்கு தாய்மொழிக் கல்வி வழங்கும் நாடு

Pexels

ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவிலும் பல்வேறு மொழிப் பேசும் இனக்குழுக்கள் வாழ்ந்து வருவதால், அவரவருக்கான தாய்மொழியினை தங்கள் பள்ளிகளில் மொழிப்பாடமாக கற்றுக்கொடுக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளினுள், குறிப்பாக, நார்டிக் நாடுகள் (நோர்வே, ஃபின்லாந்து, டென்மார்க், சுவீடன் மற்றும் ஐஸ்லாந்து) தாய்மொழிக் கல்விக்கென நடைமுறையில் வைத்திருக்கும் சட்டங்கள் உலகிற்கே வழிகாட்டல் எனலாம். இதில், சுவீடன் நாடு 2019 வரை 70 மொழிப் பேசும் மக்களுக்கு தாய்மொழிக் கல்வியினை வழங்கி வந்தது. 2020 முதல் 110 மொழிகளுக்கான கல்வி வழங்கவும் தயாராகி வருகிறது. தோராயமாக, 3000 மொழிப்பிரிவு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். வருடத்திற்கு, மொழிகளை கற்பிக்க மட்டும் 2 லட்சம் யூரோ நிதியினை சுவீடன் அரசு செலவு செய்து வருகிறது.

சிறப்பாக, நோர்வே நாட்டில் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் பாடங்களில் பெறும் மதிப்பெண்களை மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்கலைக்கழக உயர்கல்விக்கான மதிப்ப்பீட்டில் சேர்க்கப்படுகிறது.

இவை அனைத்தும், ஐரோப்பிய ஒன்றிய கல்வி மொழிக்கொள்கை, நோர்டிக் நாடுகளின் வரலாற்று ரீதியிலான தாய்மொழி கல்விக் கொள்கை, ஐக்கிய நாடுகள் பரிந்துரைக்கும் இடம்பெயர்ந்தோர்/சிறுபான்மையினருக்கான தாய்மொழிக் கல்வி உரிமையின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.

Swedan

Swedan

Pexels

சுவீடனில் தாய்மொழிகளின் கல்வி:

சுவீடனில் பல நாட்டு, பன்மொழி இனக்குழுக்களின் அதிகரிப்பின் பின்னர், 2009இல் புதிய மொழிக் கொள்கையை அந்நாட்டு அரசு நிர்ணயிக்கிறது. அதில்தான், ”சுவீடனில் வாழும் அனைவருக்கும் அவரவர் தாய்மொழியினை கற்கும் உரிமைகள் குறித்தும் அதற்குரிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கப்பட்டன”.

அதில் மேலும், ”சுவீடனிற்கு புலம்பெயர்ந்து வருபவரின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சுவீடன் நாட்டு தம்பதியர், வேறு ஒரு நாட்டில் இருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தாலும், அக்குழந்தை தன் தாய் மொழியை வீட்டில் பேசாமல் இருந்தாலும் கூட, அக்குழந்தை தாய் மொழியில் பேச, பயில, கற்க இத்திட்டம் துணை நிற்கும்” எனவும் கூட தெளிவுப்படுத்தினர்.

சுவீடனைப் பொறுத்தவரை, அதன் கல்வியியல் தேசிய ஆணையம் கல்வி மொழித் தொடர்பான கட்டுப்பாட்டினை முன்மொழிந்து நடைமுறைப்படுத்துகிறது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கட்டாய இலவசக் கல்வியினை வழங்குவது அரசின் கடமையாகிறது.

அப்படி வழங்கப்படும் கல்வியில் அவரவர் தாய்மொழியினை கற்கும் உரிமையை சுவீடன் எப்படி கையாள்கிறது?

சுவீடன் நாட்டின் அலுவலக சிறுபான்மை மொழியாக இருக்கும் மியாங்கியாலி, சமி, ரோமானி சிப்ஃ, யித்தீஷ் மொழிகள் முதல் மொழியாக இருப்பவர்களுக்கு முழுமையாக தாய்மொழி வழியிலேயே கல்வி கற்கும் உரிமையையும் சுவீடன் கல்வித்துறை நடைமுறைப்படுத்தி வைத்திருக்கிறது.

அதேப்போல, அரசுப் பள்ளியின் பாடத்திட்டத்தில், புலம்பெயர்ந்து வந்தோருக்கு, சுவிடீஷ் மொழியினை இரண்டாவது மொழி என்ற அடிப்படையிலும் அவரவர் தாய் மொழியினை முதலாவது மொழி என்ற அடிப்படையிலும் வகுத்து வைத்திருக்கிறார்கள். அவரவர் தாய்மொழி இல்லாத சமூக மொழியினை அல்லது முதல் மொழியினை கற்க வேண்டியச் சூழலில், தாய்மொழி வழியாகத்தான் பிற மொழியினை கற்க முடியும் என்பதால், சுவீடனில் குழந்தைகளுக்கான தாய் மொழியை கற்பிக்கும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

பள்ளிகள் ஒவ்வொன்றிலும் 5 மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட மொழியினை கற்கும் விருப்பத்தினை அல்லது குறிப்பிட்ட மொழி வழியாக முதல்நிலைப்பாடத்தினை கற்கும் விருப்பத்தினைத் தெரிவிக்கும் பொழுது அந்தந்தப் பள்ளிகள் அதற்குரிய மொழிப்பாட ஆசிரிய-ஆசிரியைகளை நியமிக்கலாம். இல்லாதபட்சத்தில் கூட, அருகாமை பள்ளிகளில் இருந்து 5 முதல் 8 மாணவ, மாணவிகள் இணைத்துக்கூட தாய்மொழிப் பாடம் சொல்லித்தரப்படுகிறது.

நான் வசிக்கும் கோத்தென்பர்க் நகரில் மட்டும் 70 மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்திய மொழிகளில் தமிழ், பஞ்சாப், இந்தி ஆகியவற்றிற்கு கல்வித்துறை செயற்பாட்டிற்கான அலுவலகம் இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 280000 குழந்தைகள் தாய்மொழிக் கல்விக்கு உகந்தவர்களாக இருப்பினும் 170000 குழந்தைகளே தாய்மொழியினை கல்வியில் பெற்று வருகிறார்கள். ஒட்டுமொத்த சுவீடனில் 200 சிறுபான்மை மொழிப் பேசும் பிரிவினர் வாழ்கிறார்கள். 2019இல் Organization for Economic Co-operation and development என்ற நிறுவனத்தின் ஆய்வு அறிக்கைக்குப்பின், அடுத்தடுத்த காலங்களில் குறைந்தது 110-140 மொழிகளில் கல்வி வழங்க ஏற்பாடாகி வருகிறது.

தாய்மொழிக் கல்விப் பயிற்றுநர்கள் மாணவ, மாணவிகளுக்கு தாய்மொழிப் பாடத்தினையும், அதன் வழி சுவிடீஷ் மற்றும் பிறப்பாடங்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களின் துணையோடும் தனியாகவும் கற்றுத்தருகிறார்கள், மேலும், பள்ளிக்கும், பெற்றோருக்கும், மாணவ/மாணவிகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Norway

Norway

Pixabay

நோர்வே, சுவீடன், ஃபின்லாந்தின் பூர்வக்குடி சமி மக்கள்:

நோர்வே, சுவீடன், ஃபின்லாந்து நாடுகளின் வடக்குப் பகுதி மக்கள் சமி இன மக்கள் ஆவர். அவர்களே, இப்பகுதிகளின் பூர்வக்குடி மக்கள், அவர்கள் இனம், மொழி, பண்பாடு முற்றிலும் வேறுபாடானது. இம்மூன்று நாடுகளின் பெரும்பான்மை மொழியாக முறையே நோர்வேஜியன், சுவிடீஷ், ஃபின்னீஷ் இருக்கும்பட்சத்தில் இந்நாடுகள் பின்பற்றும் மொழியியல் மனித உரிமை சாசனப்படியும், 1949களில் ஏற்படுத்தப்பட்ட, ஐரோப்பிய ஆணையத்தின் மனித உரிமை சாசனம் இவற்றின் படி, சமி இன மக்களுக்கான தாய்மொழிக் கல்வி உரிமை மூன்று நாடுகளும் வழங்கியது.

ஐரோப்பிய மண்ணிற்குள் இடம்பெயர்ந்து குடியேறியவர்களும், பல காரணங்களால் ஐரோப்பிய மண்ணிற்கு புலம்பெயர்ந்தோரும் பேசும் மொழிச் சிறுபான்மை மொழி என்ற அடிப்படையில், கல்வியில் சிறுபான்மை மக்களுக்கான மனித உரிமை மற்றும் கல்வி உரிமை சாசனத்தின் படி, கல்வியில் தாய் மொழியினை மட்டும் வழங்க முடியும், ஆனால், சமி போன்ற பூர்வக்குடிக்கள் வாழும் சூழலில் கல்வி உரிமை அவர்களின் அரசியல் உரிமைகளோடும், அம்மக்களின் இறையாண்மை உள்ளிட்டவைகளோடும் தொடர்புடையதாக ஆகிறது. நோர்டிக் நாடுகள் கல்வியியல் உரிமையினை அரசியல் தன்னாட்சி உரிமை வழியாகவே நிலைநாட்டியுள்ளது எனலாம்.

விஜய் அசோகன்

விஜய் அசோகன்

NewsSense

ஜெர்மன் உதாரணங்கள்:

ஜெர்மன் நாட்டினைப் பொறுத்தவரை அது ஒரு கூட்டாட்சி நாடு. மாநிலங்கள் அதனதன் சட்டங்களை முழுமையாக அவர்களாகவே வரையறுத்துக்கொள்ளலாம். ஜெர்மன் நாட்டில் பொதுவான கல்வி மொழியாக ஜெர்மானிய மொழி இருந்து வருகிறது. ஆனால், பிரண்டன்பர்க் மற்றும் சாசோணி மாநிலங்களில் சோர்ஃப் மொழி பேசும் இனக்குழுக்கள் வாழுகின்றனர். அவர்களின் தாய்மொழி பேசும் உரிமையினையும் தாய்மொழிக் கல்வி, கல்வியில் சோர்ப்ஃ மொழியினர் வரலாறு உள்ளிட்டவைகளை பாதுகாக்க அந்த இரு மாநிலங்களிலும் சிறப்புச் சட்டங்கள் உள்ளன.

அதேப்போல, ரோமானி மற்றும் ஃபிரிசன் மொழிகளுக்கும் தாய்மொழிக் கல்வி உரிமையினை ஜெர்மன் நாட்டின் பல மாநிலங்கள் வழங்கியுள்ளன. இந்த மொழிகள் எல்லாம் உயர்கல்வி உள்ளடங்களாக பாலியல் கல்வி வரைக்கும் அவசியமெனவும் சட்ட வரைமுறைகளில் அனுமதி வழங்கியுள்ளனர்.

அதேப்போல, சுலேசுவிக்-ஓல்ச்டைன் மாநிலத்தில் டேனீஷ் மொழியினருக்கான சிறப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

அதேபோல, ஃபின்லாந்து நாட்டில் சுவீடிஷ் மொழியினருக்கான முழு அலுவல் பள்ளிகள் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஃபின்லாந்து நாட்டில் சுவீடிஷ் மொழியினருக்கான முழு அலுவல் பள்ளிகள் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் அசோகன்

தாய்மொழிக் கல்வி ஆராய்ச்சிகளும் சட்டங்களும்

ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், 1998, 2004, 2006, மற்றும் 2007இல் வெளியிட்ட கல்வி வழிகாட்டல் நெறிமுறைகளில், ”எந்தவொரு குழந்தையும் அதன் குடும்பச் சமூகத்தின் முதன் மொழியினை கற்காமல் இரண்டாவது மொழியினைக் கற்கும் நிலை இருக்கக்கூடாது. அது, அக்குழந்தையின் இரண்டாவது மொழியினை கற்கும் திறனையே பாதிக்கும். அதேப்போல, பன்மொழிச் சமூக வாழ்வியலில், அவரவர் தாய்மொழியினை முறையே கற்று, புலம்பெயர்ந்தச் சூழலின் அலுவலக மொழியினைக் கற்பது, அக்குழந்தையினை புலம்பெயர்ந்த நாட்டினுள் நல்லிணக்கத்துடன் வெற்றிகரமாகவும் அமைத்துக் கொடுக்கும்” என எடுத்துக்கூறியது.

மேலும் கும்மின் (1989, 2002, 2010) மற்றும் கார்சியா (2008) வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில், ”ஒரு குழந்தை தாய்மொழி வழியாக பிற மொழிகளைக் கற்கும் நிலை என்பது இரண்டாவது மொழியினை வலுவாக கற்க மட்டுமல்லாது, தன்னுடைய உலகத்தினை புது உலகம் நோக்கி இணைக்கவும் பயன்படுகிறது. முதன் மொழியே பிற மொழிகளுக்கு அறிவுப்பாலமாகவும் திகழ்கிறது. பலமொழிகள் கற்கும் பன்மொழிச் சூழலில் மனித மூளையின் அறிவுப்பகிர்விற்கும் குழந்தையின் தாய்மொழி அவசியமாகிறது.” எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாய் மொழிக் கல்வி

தாய் மொழிக் கல்வி

Pexels

உலக நாடுகளும் தமிழ்மொழிக் கல்வியும்

ஆஸ்திரேலியா7 போன்ற நாடுகளில் சில மாகாணங்களில்/ சில மாவட்ட நிர்வாகத்தின் சட்டத் திட்டத்திற்கு ஏற்ப தமிழ் மொழி அரசுப் பள்ளிகளிலேயே கற்றுக்கொடுக்கப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் சர்வதேசப் பாடத்திட்டத்தில், தமிழ் மொழிக்கான தேர்வு O, AS and A level பிரிவுகளில் நடத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவின், SEAL OF BILITERACY தேர்வின் கீழ் கணக்கில் எடுக்கப்படும் 22 மொழிப் பாடத் தேர்வு மற்றும் அமெரிக்காவின் ACTFL நடத்தும் 122 மொழிகளுக்கான தேர்வில் தமிழ் மொழியும் அடங்கியுள்ளது.

சுவீடன் : 110 மொழிகளுக்கு தாய்மொழிக் கல்வி வழங்கும் நாடு

செளதி அரேபியா கதை - 1 : அடர் வனம் பாலைவனம் ஆக மாறிய வரலாறு!

சுவீடனில் எங்கள் அனுபவம்

நோர்வேயில் பிறந்து வளர்ந்த எங்கள் மூத்த மகன் கவின் திலீபன், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு நிதி உதவிப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

சுவீடன் வந்ததும், சுவீடன் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். மாநகராட்சிக் கல்வித்துறையின் ஏற்பாட்டில் இன்று அவனுக்கு தகுதிச் சோதனை நடந்தது. வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதால், அவனின் நிலை அறிந்து அதற்கேற்றவாறு பள்ளிக்கூடத்தில் பயிற்சி வழங்க இது போன்ற சோதனைகளை செய்வது வழக்கம்.

அவனது தாய்மொழி தமிழ் என்பதாலும் தமிழ் மட்டுமே தெரியும் என்பதாலும், மாநகராட்சி கல்வித் துறையில் பதியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் (ஆசிரியையும்) உடன் இருந்தார். முதல் ஒரு மணி நேரம் நானும் என் மனைவியும் உடன் இருந்தோம், அடுத்த ஒன்றரை மணி நேரம் தமிழ் ஆசிரியை, சுவீடன் கல்வித்துறை ஆசிரியை இருவர் மட்டும் திலீபனது தமிழ், கணக்கு மற்றும் பொது அறிவியல் அறிவை சோதித்தனர்.

சுவீடிஷ் மொழியில் கேட்கப்படும் கேள்வியை தமிழ் ஆசிரியை மொழி பெயர்த்து வழங்க, திலீபன் தமிழில் பதிலளித்துக்கொண்டிருந்தான்.

இங்கு, அவனது வாழ்க்கையில் அவன் பெற்ற அறிவை சோதித்தனரேத் தவிர எந்த மொழியில் அந்த அறிவினைப் பெற்றான் என்பது பொருட்டாகப் பார்க்கவில்லை. ஏனென்றால், சுவீடனில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மொழியை மட்டும் வைத்து அறிவைச் சோதிக்கும் மனப்பான்மை இல்லை.

எங்கள் மகன் தமிழில் பேசுவதும் படிப்பதும் ஒரு காலத்திலும் எவ்வகையிலும் குறைந்ததல்ல எனச் சொல்லி வளர்க்கப்பட்டதால், இன்றைய சோதனையை அவ்வளவு அழகாகவும் குழந்தைத்தனத்துடனான தன்னம்பிக்கையுடனும் நிறைவு செய்தான்.

சோதனை முடிவில், சுவீடிஷ் பெண்மணி திலீபனின் வயதிற்குரிய அறிவைப் பாராட்டியதுடன், தொடர்ந்தும் தமிழ் மொழியினை கற்க வேண்டும், அதுவே நீண்ட காலத்திற்கு நன்மையை விளைவிக்கும் எனவும் அறிவுறுத்தினார்.

சுவீடனைப் பொருத்தவரை, உயர் நிலை கல்விப் பருவத்தில் (6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) தமிழ் பாடத்தில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் மதிப்பீட்டுத் தொகை, மேல் நிலை பள்ளிக் கல்வியில் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது, அதோடு, மேல் நிலை கல்விப் பருவத்தில் பெறப்படும் தமிழ் மொழிப் பாடத்தின் மதிப்பெண் கல்லூரி-பல்கலைக்கழகக் கல்விப் பிரிவை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.

கல்வியின் ஒவ்வொரு நிலையிலும் சுவீடனில் தமிழ் மொழிப் பாடத்தின் மதிப்பெண் மதிப்பு பெறுகிறது!

தாய் மொழிக் கல்வி

மொழி என்பதில் சிறியது, பெரியது என்று ஒன்றுமே இல்லை! வீட்டின் மொழியையும் கற்பிக்கப்படும் மொழியையும் இணைப்பதால், தாய் மொழிக்கல்வியே சிறந்தது. தாய் மொழியினை குழந்தை முழுமையாக பகுத்துணரும் வரையில் கல்வி மொழி தாய் மொழியிலேயே இருத்தல் வேண்டும். அந்நிலத்தில் பெரும்பான்மையினர் பேசும் மொழியினை தாய் மொழியென கொள்ளல் ஆகாது – UNESCO 1953.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com