Boredom : The Desire For Desires (சலிப்பு : ஆசைகளுக்கான ஆசை) என்பார் லியோ டால்ஸ்டாய். “ சலிப்பு என்பது கற்பனை வளம் இல்லாத சலிப்பான மனிதர்களுக்கானது” என்கிறது ஆங்கில பொன்மொழி. நவீன உலகில் சுவாரஸ்யமற்ற ஒரே மாதிரியான தினசரிகளைக் கொண்ட மனிதர்கள் எதிர் கொள்ளும் மிக முக்கிய உளவியல் சிக்கல் சலிப்பு தான். இப்போது இந்த உலகின் மிகச் சலிப்பான மனிதர் யார் எனக் கண்டறியும் ஆய்வு ஒன்றை இங்கிலாந்தைச் சேர்ந்த எசெக்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
சலிப்பின் பின்னாலிருக்கும் அறிவியலைக் கண்டறியும் முயற்சியில் இறங்கிய ஆய்வாளர்கள், தனி நபர்கள் அடிப்படையில் அல்லாமல் சலிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
தனிநபர்களுக்கு இருக்கும் குணங்களை ஆராய்ந்த ஆராய்ச்சிக் குழுவினர் அவற்றில் எவையெல்லாம் மற்றவர்களால் சலிப்பானதாகக் கருதப்படுகிறது என்பதைக் கண்டறிந்தனர். கிடைக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் உலகின் சலிப்பான மனிதர் இவர் தான் என ஒரு நபருக்கான சுய விவரத்தை உருவாக்கினர். மற்றவர்கள் பார்வையில் சலிப்பாக இருப்பது வாழ்க்கை முறையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் ஆராய்ச்சிக் குழுவினர் மதிப்பிட்டனர்.
சலிப்பை மதிப்பிடும் இந்த ஆய்வு எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் Dr Wijnand Van Tilburg தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவாக அவர் சலிப்பு மற்றும் தனிமை பல எதிர்மறையான பிரச்னைகளை ஏற்படுத்தும் எனக் கூறினார். ஏதேனும் ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாக்கும், மனநல பாதிப்புகளை உருவாக்கும் என அவர் எச்சரிக்கிறார்.
மேலும் அவர், “சலிப்பு குறித்து ஆராய்வது மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. சலிப்பு மக்களிடத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தோம். மக்கள் சலிப்பானவராக கருதும் நபரிடம் பழகுவதற்கு விருப்பமில்லாமல் இருக்கின்றனர். சலிப்பான வேலை அல்லது பொழுது போக்கைக் கொண்டிருப்பவர்கள் சுவாரஸ்யமான நபர்களாக இருந்தாலும் அதனை நிரூபிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை” என்றார். எந்த ஒரு நபரையும் 'இவர் போர்' என ஒதுக்கி வைத்துவிடக் கூடாது. சமூகத்தில் எல்லோரும் மிக முக்கியமான பங்குடையவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் Dr Wijnand Van Tilburg கூறுகின்றார்.
ஆய்வின் படி மிகச் சுவாரஸ்யமான மற்றும் மிகச் சலிப்பானவற்றை ஆய்வாளர் பட்டியலிடுகிறார். அதற்கு முன் மிக போரான அந்த நபரைப் பற்றிக் காணலாம்.
சலிப்பு ஏதேனும் ஒரு தொழில் அல்லது பழக்கத்தினால் மட்டும் ஏற்படுவதில்லை. ஒரு விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கை முறையின் விளைவாகவே சலிப்பு இருக்கிறது. ஆய்வின் படி உலகின் சலிப்பான நபர் ஒரு டேட்டா என்ட்ரி வேலையில் இருக்க வேண்டும். மதச் சடங்குகளை பின் பற்றுபவராகவும் தொலைக்காட்சி பார்ப்பது அவரின் முக்கிய பொழுது போக்காகவும் இருக்க வேண்டும். அத்துடன் அவர் ஒரு நகர வாசியாக இருக்க வேண்டும்.
இத்துடன் சில போரான வேலைகளைப் பட்டியலிடுகிறார் ஆய்வாளர். தரவு பகுப்பாய்வு ( Data Analysis ), கணக்கியல் (Accountant), வரி அல்லது காப்பீட்டில் பணிபுரிதல் (Tax or Insurance), சுத்தம் செய்தல் மற்றும் வங்கிப்பணி (Banking) ஆகியவை சலிப்பான வேலைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. உறங்குவது, டிவி பார்ப்பது, மதம் பார்ப்பது, விலங்குகளைப் பார்ப்பது போன்றவை சலிப்பான பொழுதுபோக்குகளில் அடங்குகிறது.
கலைஞர்கள், அறிவியலாளர்கள், பத்திரிகையாளர், சுகாதார நிபுணர் அல்லது ஆசிரியராக பணிபுரிபவர்கள் மிகவும் சுவாரஸ்யமானவர்கள் என ஆய்வு கூறுகிறது.
போரான வேலையையோ அல்லது பொழுதுபோக்கையோ கொண்டிருப்பவர்கள் மேலும் சலிப்படைய வேண்டாம். “Boredom is the Great Motivator” என்பார் ஹாலிவுட் நடிகை உமா துர்மன். சலிப்பு கற்பனைகளுக்கான, ஊக்குவிப்புக்கான கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும். அதில் நுழையும் போது எல்லோரும் சுவாரஸ்யமானவர்களாக வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust