முன்பு நினைத்ததை விட நீர் சுழற்சி தீவிரமடைந்திருப்பதாக ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. இதன்படி உலகளாவிய வெட்ப நிலை உயர்வதால் வெட்பமான பகுதிகளில் இருக்கும் நன்னீர் பூமியின் துருவப் பிரதேசங்களை நோக்கி செல்கிறது.
காலநிலை மாற்றம் உலகளாவிய நீர் சுழற்சியின் தீவிரத்தை 7.4% அதிகப்படுத்தியுள்ளது. முந்தைய மதிப்பீடுகள் இத்தீவிரத்தை 2% முதல் 4% வரை இருக்குமென சொன்னது தற்போதைய புதிய ஆய்வுகளின் படி தவறு என தெரிகிறது. இதை நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
நீர் சுழற்சி என்றால் என்ன? உலகில் இருக்கும் நீர் ஆவியாகிறது, உயர்ந்து வளிமண்டலத்தில் கலக்கிறது, குளிர்ந்து மழையாகவோ, பனியாகவோ நிலப்பரப்பில் மீண்டும் விழுகிறது. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் நீர் எங்கெங்கெல்லாம் பயணிக்கிறது - இயங்குகிறது என்பதை எடுத்துரைப்பதே நீர் சுழற்சி.
நீர் சுழற்சி என்பதை முன்பெல்லாம் அது அணைகள், ஏரிகள் மற்றைய நீர் ஆதாரங்களில் இருந்து ஆவியாகி மீண்டும் நிரப்பும் மாறாத நடவடிக்கை என்று கருதினோம் என்கிறார் இந்த ஆய்வின் முன்னணி ஆசிரியரும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலையைச் சேர்ந்தவருமான டாக்டர் தைமூர் சொஹைல்.
ஆனால் உலக வெட்பநிலை உயர்ந்து வருவதால் உலக நீர் சுழற்சி தீவிரமடையும் என்பதை விஞ்ஞானிகள் நீண்ட காலமாக அறிந்திருந்தனர். நீர் சுழற்சி தீவிரமடைந்தால் நன்னீரின் பயணம் ஈரமான பகுதியை நோக்கி இருக்கும். இதனால் வறண்ட மற்றும் மிதவெட்ப மண்டல பகுதிகள் மேலும் வறண்டு போகும்.
கடந்த ஆகஸ்டில் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளிக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை எச்சரித்திருந்தது. அதில் கால நிலை மாற்றம் நீர் சுழற்சியில் நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்துமென கூறியிருந்தது. இதன் விளைவாக உலகம் முழுவதும் சில பகுதிகளில் தீவிர வறட்சியும், சில பகுதிகளில் தீவிர மழைப்பொழிவும் அடிக்கடி நடக்கும். அதாவது உலகின் ஒரு பகுதியில் சில ஆண்டுகளாக மழையே பெய்யாமல் வறட்சியில் இருக்கும் போது ஒரு பகுதி அதி தீவிர மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும்.
முந்தைய காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மாதிரிகள் குறிப்பிடுவதை விட இந்த புதிய ஆய்வு குறிப்பிடும் மாதிரியின் படி என்ன நடக்கும்? நீர் சுழற்சி தீவிரமடைவதன் விளைவாக ஏற்கனவே பூமியின் துருவப் பகுதிகளுக்கு தள்ளப்பட்ட கூடுதல் நன்னீரின் அளவு மிக அதிகரித்திருக்கிறது.
1970 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெட்பமான பகுதிகளில் இருந்து மாற்றப்பட்ட கூடுதல் நன்னீரின் அளவு 46,000 முதல் 77,000 கன கிமீ வரை இருக்குமென விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
நாங்கள் எதிர்பார்த்தை விட நீர் சுழற்சியின் தீவிரம் அதிகரித்திருப்பதால் நாம் புவியின் வெட்பத்தை குறைக்க கார்பன் உமிழ்வு என்பது பூஜ்ஜியமாக இருக்கும் நிலை நோக்கி விரைவாக செல்ல வேண்டும் என்கிறார் டாக்டர் சோஹைல்.
இந்த புதிய ஆய்வை நடத்திய ஆய்வுக் குழு மழையின் அளவை வைத்து நீரின் இருப்பை மதிப்பீடு செய்வதற்கு மாற்றாக கடலின் உப்புத்த் தன்மையை பயன்படுத்தி மதிப்பீடு செய்திருக்கிறது.
இதன்படி கடலின் சில இடங்களில் உப்பு அதிகமாகவும், சில இடங்களில் உப்பு குறைவாகவும் உள்ளது. கடலில் மழை அதிகம் பெய்தால் அங்கே உப்புத் தன்மை குறைவாகவும், கடலில் மழை இல்லாமல் ஆவியாதல் அதிகம் இருக்கும் இடத்தில் உப்பு குறைகிறது. அதாவது வறட்சி அதிகரிக்கும் கடல் பகுதிகளில் உப்பு அதிகமாகவம், அதிக மழை பெய்யும் இடங்களில் உப்பு குறைவாகவம் உள்ளது.
அதே நேரம் நீர் கடலில் கலப்பதோடு ஏற்கனவே கடலில் இருக்கும் நீரோட்டங்கள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட வேண்டியிருந்தது.
கடலின் உப்புத்தன்மை எப்படி மாறுகிறது என்பது குறித்து புதிய முறை ஒன்றை உருவாக்கி கண்காணிப்பதாக டாக்டர் சோஹைல் குறிப்பிடுகிறார். இது மழைமானி போல நிலையாக கடலின் உப்புத்தன்மையை கண்காணிக்கும்.
இந்த ஆய்வில் ஈடுபடாதவரும், CSIRO காலநிலை அறிவியல் மையத்தின் தலைமை ஆராய்ச்சி விஞ்ஞானியுமான டாக்டர் ரிச்சர்ட் மேட்டர் இந்த புதிய ஆய்வின் முக்கியத்துவத்தை கூறுகிறார். எப்படி காலநிலை மாற்றம் நீர் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கணிக்கும் பழைய முறைகள் அந்த பாதிப்பை குறைத்து மதிப்பிட்டிருந்ததை இந்த புதிய ஆய்வு கண்டுபிடித்திருப்பதை அவர் கூறினார். மேலும் கடலைக் கண்காணிக்கும் நமது திறன் அதிசயத்தக்க அளவில் முன்னேறியிருக்கிறது என்கிறார்.
கண்காணிக்கும் தரவுகள் பற்றிய துறை முன்னேறியிருப்பதால் தற்போது புவி வெட்பமயமாதல் எப்படி காலநிலை மாற்றம் மற்றும் நீர் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்த ஆய்வு துல்லியமாக கூறிகிறது.
சாரமாகச் சொன்னால் இனி வருங்காலம் நமக்கு இயற்கைப் பேரிடர் நிறைந்த காலமாக இருக்கும். வறட்சி, பஞ்சங்கள் மேலும் மேலும் அதிகரிக்கும் போது சில இடங்களில் அதிக மழை பொழிவால் வெள்ளத்தில் சிக்கித் திணறுவதும் நடக்கும். முக்கியமாக பூமியில் மக்கள் பயன்படுத்தும் நன்னீர் இருப்பு குறைந்து துருவங்களை நோக்கி பயணிப்பதால் வறட்சியும், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும்.
எனவே புவி வெப்பமடைவதைக் குறைப்பது என்பது இனியும் ஏதோ அறிஞர்கள் பேசிக் கொள்ளும் விசயமல்ல. உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் உலகப் போர் இல்லாமலே பூமியின் வாழ்க்கை அழியும்.