ஆடல்வல்லானாகிய சிவபெருமானுக்கு ஓர் ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாதத்தில் திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகள் என இந்த ஆறுதினங்களிலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இன்று 15/02/2022 அன்று மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகும். அபிஷேகப்பிரியனுக்கு இன்று நம்மால் முடிந்த அபிஷேக பொருட்கள் கொடுத்து, இயன்றோருக்கு அன்னமிட்டும். ஈசனின் திருவருளைப்பெறுவோமாக.
பாலாபிஷேகம் - ஆயுள் விருத்தி அடையும்.
தயிர் அபிஷேகம் - சந்ததி விருத்தி உண்டாகும்
விபூதி அபிஷேகம் - ஞானம் கிடைக்கும்.
தேன் அபிஷேகம் - நல்ல குரல் வளம் உண்டாகும்
சந்தன அபிஷேகம் - நல்ல பிறவி கிடைக்கும்
பஞ்சாமிர்த அபிஷேகம் - எதிரிகள் இருக்க மாட்டார்கள்.
நாட்டுச் சர்க்கரை அபிஷேகம் - நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
இளநீர் அபிஷேகம் - சௌக்கியமான வாழ்வை வழங்கும்.
அருகம்புல் நீர் - நஷ்டமான பொருட்கள் திரும்பக் கிடைக்கும்
பன்னீர் அபிஷேகம் - வாழ்க்கையை மணம் உள்ளதாக ஆக்கும்.
மாம்பழம் - தீராத வியாதிகள் தீரும்
மஞ்சள் - மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்
அன்னாபிஷேகம் - கண்டாலும் செய்தாலும் அன்னத்திற்கு குறைவிருக்காது. அதிகாரம், பதவி முதலானவை கிடைக்கும். மோட்ச கதியை அடையலாம்.
ஆனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யபடும். ஆனால் ஸ்படிக லிங்க பூஜையின் போது தினமும் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
ரத்தின சபை - திருவாலங்காடு
கனகசபை - சிதம்பரம்
ரஜதசபை - (வெள்ளி சபை) - மதுரை
தாமிரசபை - திருநெல்வேலி
சித்திரசபை - திருக்குற்றாலம்
ஆகியவை பஞ்ச சபைகள் என போற்றப்படுகின்றன,
சிவதாண்டவங்களில் பஞ்ச தாண்டவங்கள் சிறப்புக்கு உரியது
ஆனந்த தாண்டவம் - சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் - திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் - மதுரை
ஊர்த்துவ தாண்டவம் - அவிநாசி
பிரம்ம தாண்டவம் - திருமுருகன்பூண்டி என்பவையே அவை.
ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள்.
பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். அதாவது, அதிகாலை, 4:00 மணிக்கு, திருவனந்தல், 6:00 மணிக்கு, காலசந்தி, பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை, இரவு, 7:00 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை என்று ஆறு கால பூஜை நடைபெறும்.
தேவர்களும் இதே போல, ஆறுகால பூஜையை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு உண்டு. உண்டு.
தை முதல் ஆனி வரை (காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை) உத்ராயணம்; ஆடி முதல் மார்கழி வரை (மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை) தட்சிணாயணம்.
அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப் பொழுது, மாசி மாதம் ஆகும். மதியம் – சித்திரை திருவோணம் அன்று. மாலைப்பொழுது – ஆனி ஆகும். இரவு நேரம் – ஆவணி மற்றும் அர்த்தஜாமம் – புரட்டாசி என்பது போன்றதாகும். அதன் பொருட்டே நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்.
இதேபோல பல திருத்தலங்களில் சிவபெருமான் திருநடனம் ஆடியதாகப் புராணங்களில் சொல்லப்படுகிறது. திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் அது அஜபா நடனம் ஆகும்.
நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம், அல்லது வீசி நடனம் என்று கூறுகின்றனர்.
திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இது ஹம்ச நடனம் ஆகும். திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்று கூறுவார்கள். திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனம் பிரம்மத் தாண்டவம் ஆகும்
திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்று சொல்வார்கள். திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.
திருவாதிரை, ஸ்வாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்கள், நடராஜ வடிவத்தை தினமும் கண்டு தரிசித்து வர பல நன்மைகள் பெறலாம் என்று ஜோதிட வல்லுனர்களும் கூறுகின்றனர். திருவாதிரையின் பரம மித்திர நட்சத்திரம் அவிட்டம் ஆகும். அவிட்ட நட்சத்திரத்தின் வடிவம் உடுக்கை. இது திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாகும்.
திருவாதிரையின் ஜென்ம நட்சத்திரமாக வருவது ஸ்வாதி நட்சத்திரம். இதன் வடிவம் தீ ஜுவாலை. நடராஜப்பெருமான் கையில் தீ ஜ்வாலை ஏந்தி காட்சியளிப்பார். இது திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆபத்தில் இருந்து காக்கும் நட்சத்திரம். எனவே நட்சத்திர ரீதியாகவும் சூட்சமமாக அருள் பாலிக்கிறார் ஆனந்த தாண்டவ மூர்த்தி. வணங்கி அருள் பெற்று வாழ்விள் வளம் பெறுவோம். தூக்கிய திருவடியை சரணடைய தாக்கிய வினைகளெல்லாம் பறந்தோடும்.விரிசடை நாதனை வழிபட, வழிவந்த தடைகளெல்லாம் விலகியோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.