தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கலைத் தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் விமரிசையாக நடைபெறும். மூன்றாம் நாளான நேற்று நடைபெற வேண்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு லாக்டவுன் காரணமாக இன்று நடைபெற்றது.
காலை 6:30 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. உலகப் புகழ்பெற்ற வாடி வாசலில் காளைகள் வர அவற்றை அடக்க வரிசை கட்டினர் வாலிபர்கள். ஆன்லைன் மூலம் முன் பதிவு நடைபெற்று 700 காளைகளுக்கும் 300 வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குழு குழுவாகப் பிரிக்கப்பட்ட வீரர்கள் தோராயமாகக் குழுவிற்கு 50 பேர் எனக் களத்தில் இறங்கினர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை இறக்குவது பலருக்கும் மரியாதை சார்ந்த விஷயமாகக் கருதப்படும். இன்றைய போட்டியிலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் காளைகள் பங்கேற்றன.
8 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் நன்றாகக் காளைகளை அடக்கிய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு அனுப்பப்பட்டனர். இப்போட்டியின் நிறைவில் சிறந்த காளையாகப் புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
21 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.
அலங்காநல்லூரைச் சேர்ந்த ராம்குமார் 19 காளைகளைப் பிடித்து 2ம் பரிசு பெற்றார். சித்தாலங்குடி கோபாலகிருஷணன் 13 மாடுகளை அடக்கி மூன்றாவது பரிசு பெற்றார். 2ம் மற்றும் 3ம் இடத்தை பிடித்தவர்களுக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் வழங்கப்பட்டது. காளையை அடக்கிய வீரர்களுக்கும் தங்கம் பரிசளிக்கப்பட்டது. இந்த அளவிலான விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்படுவது இதுவே முதன்முறை என்ன கமிட்டியினர் பெருமிதம் கொண்டனர்.