மஹீஷ் தீக்ஷனா
ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு ரசிகர்களின் பேராதரவு இருக்கும். சென்னை அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் பூரித்துப் போகுமளவு அன்பை வழங்குவது சென்னை ரசிகர்களின் வழக்கம். ஆனால் இந்த முறை ஆக்ஷன் முடிந்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே சென்னை அணிக்கு எதிர்ப்பலை கிளம்பியிருக்கிறது. ரசிகர்கள் சென்னை அணியைப் புறக்கணிக்கும் விதமாக #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ் டேக்-ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை அணியைப் புறக்கணிக்கும் அளவு ஏமாற்றம் அளித்திருக்கிறதா ஐபில் 2022 ஏலம் என்றால்… ஆம் தான். ரசிகர்களுக்கு அதிக விருப்பமான வீரர் டூப்ளசி மற்றும் சின்ன தல என ரசிகர்களால் அன்பு பாராட்டப்பட்ட வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோரை அணியில் எடுக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது. அதிலும் வேறெந்த அணிகளும் எடுக்காததால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல்-ஐ விட்டு விலக வேண்டிய சூழல் உருவானது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுரேஷ் ரெய்னாவை அணியில் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் தவற விட்டது அணி நிர்வாகத்தின் மீது ரசிகர்கள் அதிகமாக கோபப்பட வைத்திருக்கிறது.
டூ ப்ளெஸ்ஸி
இது ஒரு புறமிருக்க Boycott Chennai Super Kings ட்ரெண்டாக மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. அது 70 லட்சம் விலை கொடுத்து சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ள மஹீஷ் தீக்ஷனா. இவர் ஒரு இலங்கை வீரர். இலங்கை ராணுவத்தில் பணியாற்றியவர். ஈழத்தமிழர்களை இலங்கை அரசாங்கம் வஞ்சித்ததன் காரணமாக இலங்கை வீரர்கள் தமிழ் நாட்டில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் சிஎஸ்கே அணியில் ஆடியதற்காகக் கடந்த காலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது அனைவருக்கும் நினைவு இருக்கும். இத்தனைக்கும் முத்தையா முரளிதரன் இலங்கைத் தமிழர், ஸ்டார் அந்தஸ்து உள்ள கிரிக்கெட் வீரர்.
முத்தையா முரளிதரன்
2013-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாடத் தடை விதிக்க வேண்டும் எனப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி நடுவர்கள், அதிகாரிகள், சப்போர்ட்டிங் ஸ்டாஃப் என இலங்கையைச் சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் உறுதியளித்தால் மட்டுமே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிப்போம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கை அணிக்காக விளையாடி வரும் மஹீத் தீக்ஷனாவை சிஎஸ்கே எடுத்தது தமிழக ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.