ஐ.பி.எல் 2022 - மார்ச் 26 முதல் தொடங்கப்போகிறது. வழக்கமாக 8 அணிகளோடு நடத்தப்படும் இந்தத் தொடரில் இம்முறை 10 அணிகள் பங்கேற்கின்றன. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணிகள் இந்தத் தொடரில் இணைந்திருக்கின்றன.
பிப்ரவரியில் நடந்த ஏலத்துக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் புதிய வடிவம் பெற்றிருக்கின்றன. சில அணிகள் பலமடைந்திருக்கின்றன. சில அணிகள் பலவீனமடைந்திருக்கின்றன. இங்கு மும்பை இந்தியன்ஸ் டீம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
4 வீரர்களை மட்டுமே ரீடெய்ன் செய்ய முடியும் என்ற விதி மும்பை இந்தியன்ஸுக்கு மிகப்பெரிய சிக்கலை விளைவித்தது. ரோஹித் ஷர்மா, இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ், குருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், போல்ட், பும்ரா என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கும்போது எப்படி நான்கு பேரை மட்டும் தக்கவைக்க முடியும்?
இருந்தாலும், ஒருவழியாக அந்த கடினமான முடிவை எடுத்தது மும்பை அணி. கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, பொல்லார்ட் ஆகியோரை ரீடெய்ன் செய்தது அந்த அணி. இஷன், ஹர்திக், குருனால் போன்றவர்களை மீண்டும் எடுக்க முடியுமா என்று நினைத்துக்கொண்டிருக்கையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது குஜராத் அணி.
இந்நிலையில் ஏலத்தின் முதல் நாளில் வீரர்களை எடுக்கும் கடும் போராட்டம் நிலவியது. இஷன் கிஷனை எடுக்கவேண்டும் என்பதால், பணத்தை சேமித்து வைக்க வேறு பெரிய வீரர்களை வாங்க முடியாமல் போனது. டி காக், போல்ட், குருனால் என ஒவ்வொருவராகக் கைநழுவினர். இருந்தாலும், ஏலத்தின் இரண்டாவது நாள் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு ஒரு அணியை அமைத்திருக்கின்றனர். இந்த ஐ.பி.எல் சீசனில் அந்த அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
டி காக் - ரோஹித் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கடந்த சீசன்களில் சிறப்பாக செயல்பட்டது. சில போட்டிகளில் மட்டுமே ஓப்பனிங் இறங்கியிருந்தாலும், நன்றாகவே ஆடியிருந்தார் இஷன் கிஷன். இந்திய அணிக்கும் இப்போதெல்லாம் அவர் ஓப்பனிங் இறங்கிக்கொண்டிருப்பதால், அவரே ரோஹித்தின் ஓப்பனிங் பார்ட்னராக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. வழக்கம்போல் அவர்களுக்கு left - right காம்பினேஷனும் அமைந்துவிடும்.
மூன்றாவது வீரராக வழக்கம்போல் சூர்யகுமார் யாதவ். அணியின் ஸ்டார் பிளேயர் என்பதைத்தாண்டி இப்போது சீனியரும் ஆகிவிட்டார். இந்திய அணிக்காக ஆட்டங்களை சிறப்பாக ஃபினிஷ் செய்தும் கொடுக்கிறார். அதனால், முன்பை விட அவர் மீது அதிக பொறுப்பு இருக்கும்.
நான்காவது வீரராக திலக் வெர்மா. மும்பை இந்தியன்ஸ் பட்டறையிலிருந்து உருவாகப்போகும் அடுத்த மாணிக்கமாக இருக்கலாம். டொமஸ்டிக் போட்டிகளில் அதிரடியாக விளையாடி அந்த அணியின் கவனத்தைப் பெற்றிருக்கிறார் இந்த 19 வயது ஹைதராபாத் வீரர். இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால், மிடில் ஆர்டரில் அதுவும் மும்பை இந்தியன்ஸுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
ஐந்தாவதாக வழக்கம்போல் பொல்லார்ட். பொல்லார்டுக்குப் பிறகு டிம் டேவிட். சிங்கப்பூரைச் சேர்ந்த இந்த டி-20 சூப்பர் ஸ்டார். உலகின் அனைத்து டி-20 லீக்-களிலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். கடந்த சீசனில் ஹர்திக், குருனால் போன்றவர்கள் ஃபினிஷிங்கில் சொதப்பினார்கள். ஆனால், டேவிட் நிச்சயம் அந்த அணிக்குக் கை கொடுப்பார். பொல்லார்ட், டிம் டேவிட் மிடில் ஆர்டரைப் பார்த்தாலே எந்த அணிக்கும் மிரட்சியாக இருக்கும்.
இதுவரை மும்பை லைன் அப்பில் பெரிய மாற்றம் இல்லை. இதன்பிறகுதான் ரொம்பவே புதிதாக இருக்கும். குருனால், ஹர்திக் ஆகியோரின் பௌலிங் ஆப்ஷன்கள் இல்லாததால், நிச்சயம் 5 பௌலர்களோடு அந்த அணி விளையாடவேண்டியிருக்கும். அணியிலிருக்கும் பௌலர்களில் ஓரளவு பேட்டிங் ஆப்ஷன் செய்யக்கூடியவர்களான ஃபேபியன் டேனியல் சாம்ஸ், சஞ்சய் யாதவ் ஆகியோர் விளையாட நிறைய வாய்ப்பு இருக்கிறது. அணியின் இரண்டாவது ஸ்பின்னராக மயாங்க் மார்கண்டே அல்லது முருகன் அஷ்வின். இரண்டு லெக் ஸ்பின்னர்களில், மார்கண்டே ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடியிருப்பதால், அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம். அடுத்ததாக அந்த அணியின் அல்டிமேட் ஸ்டார் ஜஸ்ப்ரித் பும்ரா. இன்னொரு ஓவர்சீஸ் ஃபாஸ்ட் பௌலர் ஸ்லாட்டுக்கு தைமல் மில்ஸ். இரண்டு இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பது பல ஆப்ஷன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். அடுத்த சீசன் ஆர்ச்சர் வந்துவிட்டால், இந்த பிளேயிங் லெவன் இன்னும் மிரட்டலாக இருக்கும்.